திரும்பிப் பார்த்தல்.
தனிமை கொடுமையானது. அதிலும் முதுமையில் தனிமை அதைவிட கொடுமையானது. முதுமை அனைவருக்கும் பொதுவானது. அது ஒருநாள் நமக்கும் வருமென்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் 'உனக்கென சிறிய வட்டத்தை வரைந்துகொள்' என்ற நவீன உலக அறிவுறைப்படி உறவுகளை வெளித்தள்ள முதியவர்களை நாம் ஒதுக்கிவிடுகிறோம். அவ்வாறு ஒதுக்கப்பட்ட அவர்களுக்கு தனிமை கொடுமையாக இருக்க, கடந்து வந்த நினைவுகளை திரும்பிப் பார்த்து அசைபோடுவதுதான் சற்று ஆறுதலாக இருக்கிறது. முதுமையின் அழகே அத்தகைய திரும்பிப் பார்த்தல்தான். இந்த குறும்படத்தில் வயதான ஒருத்தி தன் வாழ்நாள் நினைவுகளை ஒருநாளில் திரும்பிப் பார்க்கிறாள். அந்த ஒருநாள் அவளுக்கு இனிமையாகவும் இறுதியில் சோகமாகவும் முடிந்துவிடுகிறது.
90 வயதை கடந்த கிழவனும் கிழவியும் நகரத்தில் தனியாக வசிக்கின்றனர். அதில் கிழவன் படுத்த படுக்கையாக இருக்கிறான். இருவருக்கும் செய்கை மட்டும் மொழியாக இருக்கிறது. ரேடியோவில் நிகழ்ச்சி ஒலிபரப்பாக கிழவி பழைய புகைப்படங்களோடு நினைவுகளை புரட்டுகிறாள். அதனைத் தொடர்ந்து அவள் வெளியே செல்ல ஆயத்தமாக, கிழவன் ஏதோ சொல்கிறான். அதனை தாமதமாக புரிந்து கொண்டு அவள் புறப்படுகிறாள். செல்லும் வழியில் சிலரை கடந்து அவர்களோடு சிறிதுநேரம் செலவிட்டு, தன் கணவனான அக்கிழவனை முதன்முதலாக சந்தித்த இடத்திற்கு அவள் வந்தடைகிறாள். அந்த இடத்திலிருந்து புறப்படும் முன் பலவருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததைப் போல ஆரஞ்சு பழங்களை வாங்குகிறாள். அதனை வீடு திரும்பும் நேரத்தில் தனது அன்றைய நாள் பயணத்தில் கடந்தவர்களுக்கு ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு வருகிறாள். இறுதியில் மிஞ்சும் ஒரு பழத்தை கணவனுக்காக கொண்டுவந்து அவனுக்கு ஊட்டிவிடுகிறாள். அந்த நாளில் தான் வாழ்ந்த வாழ்க்கையை அவள் திரும்பிப் பார்க்க, அந்த நாள் சோகமாகவும் முடிந்துவிடுகிறது...
இந்த குறும்படம், ரேடியோவில் நிகழ்ச்சிகள் தொடங்கும் போது தொடங்கி அன்றைய நாளின் நிகழ்ச்சிகள் முடியும்போது முடிவடைகிறது. ரேடியோ நிலையத்தின் ஒருநாளின் கலவையான நிகழ்ச்சிகளைப் போல ஒரு மனிதனின் வாழ்க்கை கலவையனது என அது சொல்லாமல் சொல்கிறது. கிழவி தனது நினைவுகளை மெல்ல அசைபோட வெளியே செல்லும் போது, வழியில் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களின் இருப்பு நிலை ஒருவாறு இருக்கிறது, அதுவே அவள் திரும்பி வரும்போது அது முற்றிலும் மாறியிருக்கிறது. அதனை மனிதனின் இருவேறு நிலையாக, பகல் - இரவு மற்றும் இடது - வலது, மேல் - கீழ், Different Ancle என காட்சிப்படுத்தியது அற்புதமாக இருக்கிறது. குறிப்பாக கிழவி கார் ஒன்றை கடக்கும் வெவ்வேறு காட்சி ஒளிப்பதிவின் உச்சம் எனலாம். கிழவி எதற்காக? எங்கு? ஏன்? புறப்படுகிறாள் என்ற பதட்டத்தோடு தொடங்கும் திரைக்கதை, போகப்போக கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி ஆசுவாசமாகிறது. இறுதியில் நள்ளிறவில் உடைந்து நொறுங்கும் கண்ணாடி தொட்டியைப் போல அது நொறுங்கி சிதறுகிறது. மயக்கும் இசையும், இயல்பான முகங்களும், பொக்கைவாய் சிரிப்பும் குறும்படத்தில் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரேடியோ, பேப்பர் ராக்கெட், பழைய குடை, ஆரஞ்சு பழம் என சில பொருட்கள்கூட மனதில் பதிந்துவிடுகிறது.
- A Day
- Directed by - Sean Wang
- Country - South Korea
- Language - Hangul
- Year - 2011
நேத்து நல்லாதாம்பா இருந்தான்... இன்னக்கி செத்துட்டான்... இருந்தாலும் நல்ல சாக்காடு என சிலரது இழப்புகளை நாம் தேற்றிக்கொள்ள முதுமையையும் அதன் தனிமையையும் எதிர்கொள்ளத் தயங்கும் மனநிலையே காரணம். ஓடி ஒளிந்தாலும் முதுமை எவரையும் விடுவதில்லை. அத்தகைய முதுமைக்கென்று தனி அழகு இருக்கிறது. முதுமையின் அழகு நினைவுகளை திரும்பிப் பார்த்தல்...
