தாராஹூமாரா

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா? ... ஓடு... ஓடிக்கொண்டேயிரு... என்பதுதான் இன்றைய தாரக மந்திரமாக இருக்கிறது. அதன்படி ஓடி, உப்பு, கொழுப்பு, சர்க்கரை, மிளகாய், மல்லி, இரத்த அழுத்தம், பித்த அழுத்தம், இன்னபிற என நோய்வாய்பட்டு ஓய்ந்தாலும் 'தினமும் ஓடுங்க' அல்லது 'கொஞ்ச தூரம் நடங்க' என்பதோடு கடைசி காலம் முடிகிறது. வாழ்க்கை ஓடுவதில் இருக்கிறது. மெக்சிகோவில் இருக்கும் "தாராஹூமாரா" என்ற பழங்குடி மக்களும் ஓடுவதையே வாழ்க்கையாக வைத்திருக்கின்றனர். ஆனால் நமது ஓட்டத்திற்கும் அவர்களது ஓட்டத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. 

மெக்சிகோவின் சிவாவாவில் உள்ள "காப்பர் கேன்யன்ஸ்" மற்றும் சியரே மாட்ராவின் மலைகளில் பல நூற்றாண்டுகளாக "தாராஹூமாரா"
என்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் நீண்ட தூர ஓட்டத்திற்கு பெயர் பெற்றவர்கள். அதாவது அன்றாட வேலையாகட்டும் அல்லது போட்டிகளாகட்டும், பயணமாகட்டும் ஓடுவதில் அவர்கள் சலிக்காதவர்கள். 'சீக்கரம் ஓடிப்போய் கடையில் சீனியும் டி தூளும் வாங்கி வா'... 'அன்பே! உன்னை காண ஓடோடி வந்தேன்'... என்பதெல்லாம் இவர்களுக்கு ஏகப் பொருந்தும்.  ஒருமுறை 200 மைல் தூரத்தை இரண்டே நாட்களில் ஓடி கடந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கரடுமுரடான மலைப்பகுதியில் வெளியுலக தொடர்பிலிருந்து சற்று விலகியிருக்கும் இந்த பழங்குடியினர், நடப்பதை விட ஓடுவது என்பது நீண்ட ஆயுளை கொடுப்பதாகவும், நோய்களை தடுப்பதாகவும், சகிப்புத்தன்மையை அதிகரிப்பதாகவும் காலங்காலமாக நம்பி வாழ்கின்றனர். "GOSHEN" என்ற இந்த டாகுமெண்டரி அத்தகைய ஓடும் தாராஹூமாரா பழங்குடி மக்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும், ஓடுவதால் அவர்கள் பெறும் ஆரோக்கிய வழிமுறைகள் பற்றியும், நவீன காலத்தில் அவர்களின் இருப்புநிலை பற்றியும் சுவாரசியமாக ஆராய்கிறது. 



தோல் அல்லது ரப்பர் மற்றும் டயர் இவற்றால் செய்யப்பட்ட  "ஹுவாராச்கள்" என்ற காலனிகளை அணிந்துகொண்டு (இதில் சில வெற்று கால்களும் உண்டு) ஓடும்  தாராஹூமாரா பழங்குடியினர் சிலரோடு இந்த டாகுமெண்டரி ஓடத் தொடங்குகிறது. சாலை, மின்சாரம் கழிவரை, குடிப்பதற்கு தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத அவர்களது இருப்பிடத்திற்கு நுழைந்து, இருப்பதை வைத்துக்கொண்டு பங்கிட்டு வாழும் அந்த பழங்குடி மக்களின் பொறாமைப்படும் அளவிற்கான வாழ்க்கை முறையை நமக்கு காட்டுகிறது. பழங்குடி மக்களின் கலாச்சாரம், விவசாய முறை, சடங்குகள், குடும்ப அமைப்புகள் இவற்றோடு இன்றைய சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியும் இந்த டாகுமெண்டரி பேசுகிறது. 

  • GOSHEN
  • (Places of Refuge for the Running People)
  • Directed by - Dana Erin Richardson & Sarah Zentz
  • Cinematography by - Dana Erin Richardson
  • Country - USA
  • Languages - English & Spanish
  • Year - 2015

வெறும் தாராஹூமாரா பழங்குடி மக்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள்,  மருத்துவர்கள், விவசாயிகள், உட்டச்சத்து நிபுணர்கள், ஓட்டப் பந்தைய வீரர்கள் என பழங்குடி மக்களிடம் ஒருவகையில் தொடர்பிலிருந்த பலரது அனுபவங்களும் இந்த டாகுமெண்டரியில் நேர்காணலாக இருக்கிறது. புகழ்பெற்ற பியானோ கலைஞரான ரோமெய்ன் வீலரின் பாடல்கள், ஐஸ்லாந்திய இசைக்குழு அமினாவின் பாடல்கள், தாராஹுமாரா மக்களின் வயலின் கலைஞர் மற்றும் டிரம்மர் பாடிய பாரம்பரிய தாராஹுமாரா பாடல்களும் டாகுமெண்டரியில் இடம்பெற்றுள்ளன. இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருக்க காட்சிகளும் ரசிக்க தக்கவையாகவே இருக்கின்றன.  சமீப காலமாக வறட்சி மற்றும் பஞ்சத்தால் தாராஹுமாரா மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. அரசாங்க அதிகாரிகள், சுரங்க வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்களால்  அச்சுருத்தலாகியிருக்கிறது. 
இருந்தபோதிலும் அவர்கள் தங்களின் பண்டைய கலாச்சார மரபுகளை தக்க வைக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த டாகுமெண்டரி தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. சுருக்கமாக ஏதோ ஒருவகையில் 'தங்களது பூர்வீக விதைகளை பாதுகாக்கும் ஓரினத்தின் நடப்பு தலைமுறை மக்களின் கதை' என இந்த டாகுமெண்டரியை சொல்லலாம்... 


துளிகள் :

🖊️... ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்தும் ஐஸ்வர்யாராயும் இணைந்து ஹைர ஹைர ஹைரப்பா பாடும் இடமே காப்பர் கேன்யன்ஸ் மற்றும் சியரே மாட்ராவின் மலையாகும்...

🖊️... சுமார் 70000 - 100000 தாராஹுமாரா மக்கள் தற்போது அங்கு வசித்து வருகின்றனர்...

🖊️... "ரராமுரி" அல்லது "தாராஹுமாரா" என்பது அவர்களின் தாய்மொழியாகும். அதுவே அவர்களின் இனத்தின் பெயரும் ஆகும்... 

🖊️... தாராஹுமாரா என்பதற்கு அவர்களது மொழியில் "வேகமாக ஓடுபவர்கள்" என்று பொருள்... 

🖊️... "கிறிஸ்டோபர் மெக்டௌகல்" என்பவரின் "Born to Run: (A Hidden Tribe, Superathletes, and the Greatest Race the World Has Never)" புத்தகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த டாகுமெண்டரி எடுக்கப்பட்டுள்ளது... 

🖊️... Back to Eden (2011) மற்றும் California Landslide (2020) இந்த டாகுமெண்டரியின் இரட்டை பெண் இயக்குனர்களின் மேலும் சில படைப்புகளாகும்...