விடாது கருப்பு.

ரு தொலைக்காட்சி தொடர் எப்படி இருக்க வேண்டும். எந்தவித உணர்வை ஏற்படுத்த வேண்டும், அதன் தாக்கம் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக 90 களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மர்மதேசம்" தொடரை சொல்லலாம். 

ரகசியம்
விடாது கருப்பு
சொர்ண ரேகை
இயந்திர பறவை
எதுவும் நடக்கும்

என ஐந்து பகுதிகளாக இன்றைய வெப் சீரியஸ்களுக்கெல்லாம் சவால் விடக் கூடிய அளவிற்கு மர்ம தேசம் தொடர் அமைந்திருந்தது. மீயியற்கை என சொல்லப்படும் இயற்கையை மிஞ்சிய ஏதோ ஒன்றால் இவையெல்லாம் நிகழ்கிறது என நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, அதெல்லாம் இல்லையென நிகழ்வுகளின் மர்மத்தை விளக்கி உண்மையை உடைத்துச் சொல்லும் படியாக தொடரின் அனைத்து பகுதிகளின் கதைகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் "விடாது கருப்பு" என்ற தொடருக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். 

தென்பகுதியின் பிரபலமான நாட்டார் தெய்வமான கருப்பு சாமிதான் தொடரின் நாயகன். முழுக்க முழுக்க கிராமத்தின் கதைகளம் கொண்ட இந்த தொடர், அங்கு நிழவும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், மரபுகள் இவற்றை முதன்மையாக கொண்டிருந்தது. தலையில் முண்டாசு கட்டி, மார்பில் சந்தனம் பூசி, வெள்ளைக் குதிரையில், அரிவாள் சகிதம் ஊருக்குள் உலாவரும் கருப்பு சாமி, தவறு செய்பவர்களை எல்லாம் தண்டிக்க, கடைசியில் கருப்பு சாமி இருப்பது நிஜமா? பொய்யா? என்ற முடிச்சு அவிழும்படியான கதை அனைவரையும் கட்டிப்போட்டது. அன்று இன்று என பிளாஸ்பேக் மற்றும் நிகழ்வு கதையை சற்று வித்தியாசமாக இதைபோல் சொன்ன தொடரும் இதுவரை எடுக்கவில்லை என்பதுவும் உண்மையே. 

"இந்திரா சௌந்தர் ராஜனின்" "விட்டுவிடு கருப்பா" என்ற நாவலைத் தழுவியே இந்த தொடர் அமைக்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சி தொடருக்காக நாவலில் சில மாற்றங்கள் செய்திருந்தாலும், தொடருக்கு சற்றும் குறைவில்லாத பிரமிப்பை நாவலை வாசிக்கும் போது உணர முடிந்தது. நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்த நாவலை வாசிக்க, நாவலின் ஒவ்வொரு அத்தியாமும் தொடங்கும் முன்பு கருப்பு சாமியைப் பற்றிய வாய்வழி தெம்மாங்கு பாடல்களை சேகரித்து குறிப்பிட்டிருப்பது ரசிக்கச் செய்தது. அவற்றுள் சில பாடல்கள்தான் இந்த மயிலிறகு பக்கங்களாய். சிறுவயதில் வீட்டுத்தூணை இறுக்க கட்டிக்கொண்டு பீதியில் பார்த்த மர்மதேசம் தொடரின் நினைவுகளோடு எனவும் சேர்த்துக் கொள்ளுங்கள்... 
கும்பிக்கு கூழில்ல 
நம்பி வந்தோம்‌ சாமி... 
எம்பிரானே எழுந்து வா! 
குந்தி நீ கிடந்தாக்கா 
பந்தி யார்‌ போடுவா? 
வந்திடு, வந்திடு வனக்கருப்பா... 
மந்திக்‌ குரங்கா 
மனங்‌ கொண்ட மனுஷரையும்‌ 
சந்திச்சு திருத்திடு என்‌ கருப்பா!... 
கள்ளம்‌ கபடறியா 
வெள்ளை கிராமங்களை 
உள்ளம்‌ குளிரக்‌ காக்கும்‌ 
வள்ளல்‌ தேவனப்பா கருப்பன்‌! 
அவன்‌ - அள்ளக குறையாத 
பிள்ளை மனங்‌ கொண்ட வெளுப்பன்‌! 
பள்ளம்‌ மேடுகளை 
பாங்காய்‌ சமன்‌ செய்து 
கொடுப்பன்‌!... 
வெள்ளிமணி கட்டி ஒரு விளக்கேத்தி வெச்சு 
முல்லைப்‌ பூ போட்டு முன்னால்‌ முழங்காலிட்டு 
உள்ளம்‌ உருக உன்‌ முன்னால்‌ விழுந்தாக்கா 
வெள்ளம்‌ போல பாஞ்சு வருவியே கருப்பா 
வந்தாக்கா கருகுமே எங்க துன்பம்‌ நெருப்பா?...
ஓங்கியொரு ஆலமரம்‌ - அது 
ஒடம்பெல்லாம்‌ கிளையின்‌ கரம்‌ 
வாங்கியொரு அரிவாளை 
வேர்ப்பரப்பில்‌ நட்டாக்கா 
நேர்பார்த்து ஆதரிக்கும்‌ 
எஞ்சாமி கருப்போட 
உருக்கான தர்மக்கரம்‌! சீரானபுத்திக்கு சீரைத்தரும்‌ 
சில்லறைகள்‌ வந்தாக்கா 
கல்லறைக்கு பாதை தரும்‌!... 
ஒருநாக்கு கருநாக்கு 
நடுநாக்கில்‌ மச்சமுள்ள திருநாக்கு என்று 
பலநாக்கு சொன்னாலும்‌ - கருப்பு 
நான்வரும்‌ நாக்கில்‌ கன்னித்தமிழ்‌ கூத்தாடும்‌. 
சத்தியமோ சேர்ந்தாடும்‌! 
என்‌ வாக்கு அருள்வாக்கு - பரமனது 
தன்‌ வாக்காய்‌ முன்கூடும்‌.  
அருள்வாக்கு மீறாதே - அது 
என்றைக்கும்‌ மாறாதே!... 
போட்டாக்கா போட்டதுதான்‌ உத்தரவு! 
அதுல கூடாதே ஒரு போதும்‌ சச்சரவு! 
விதிப்பாட்டை தெரிஞ்சு பேசற கருப்பா 
மதிக்காட்டி பொசுக்குவியே நெருப்பா!...
பேரரவம்‌ கேக்குது - பெரும்‌ படையல்‌ நடக்குது 
ஊருக்கு வெளியே ஒரு ஒய்யார மரம்‌ கீழே... 
நேருக்கு நேர்‌ வந்து எஞ்சாமி நீயும்‌ 
தேருக்கு காலாக, தெருவுக்கு விளக்காக 
நிக்கோணுமடா கருப்பா... 
நின்னு காக்கோணுமடா கருப்பா!... 
விதிக்கோல்‌ பிடிச்சு 
ஒரு சதிகாரன்‌ வாரான்‌ 
மதிக்கோல்‌ உடைச்சு 
மன இருட்டை தாரான்‌ 
கதி ஏதுடா கருப்பா 
காக்க வாடா பொறுப்பா!... 
பாலாட்டம்‌ பொங்கி... 
தேளாட்டம்‌ கொட்டி...  
வாளாட்டம்‌ வெட்டி... 
கோளாட்டம்‌ ஆட்டி... 
சூதாட்டம்‌ போட்ட கூட்டத்த... 
மோதித்‌ தகர்க்க வந்தானே கருப்பன்‌!...  
பால்‌ மடிக்குள்ள பால்‌ திரும்புமா? 
காதில்லா ஊசி நூல்‌ பிடிக்குமா? 
தேள்கடி விஷம்தான்‌ திரும்ப கொடுக்கேறுமா? 
பேஞ்ச மழைதான்‌ எழுந்து மேகமாகுமா? 
கருப்பன்‌ படையில்தான்‌ கதி தப்புமா?...