கல்பொரு சிறுநுரையார்.

ல் - இவ்விடத்தில் சிறிய பாறை என வைத்துக்கொள்ளலாம். 
பொரு அல்லது பொருதல் என்றால் மோதுதல் என்று பொருள். 
சிறுநுரை என்றால் சிறிய காற்றுக்குமிழ்கள் நிறைந்த நுரை. 

கல்
பொரு
சிறுநுரை
...
கல்லில் மோதும் சிறுநுரை
...
கடைசியில் வரும் யார்!
...
அவர்
...
யார் அவர்?
...
சங்க இலக்கியத்தில் பாடலின் உவமையின் மூலம் பெயர் பெற்ற புலவர்களைப் பற்றி முன்பு பார்த்திருந்தோம் அல்லவா? அவர்களில் ஒருவர்தான் இந்த கல்பொரு சிறுநுரையார். அழகான இனிமையான பெயர்தானே!. அதுபோல் இந்த பெயரை பெற்றுத் தந்த குறுந்தொகை பாடலும் இனிமையானதே.

காமந் தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே. 

பாடலின் முன் குறிப்பிற்கு வருவோம். 

தலைவன் தலைவியைப் பிரிந்து வெகு தொலைவில் இருக்கிறான். தலைவியோ தலைவனின் நினைப்பிலேயே இருக்கிறாள். எல்லாம் காதல் செய்யும் மாயம். 

காதல் ஒரு காமன் (common) நோய். 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். 

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

ஆழமாக காதலிக்கும் போது, 
காதலிப்பவர் அருகில் இல்லாத போது, 
காதலை சொல்லாத போது, 

deeply in love,
absence of a loved one,
when love is unrequited,

இந்த நோய் ஒருவரை விடாப்பிடியாக பிடித்துக் கொள்ளும். உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் தோன்றுமோ அதே போன்று அறிகுறிகள் காதல் நோயாலும் தோன்றும். 

Symptoms of Love Sickness (LS)

கைகள் வியர்க்கும், பசியிருக்காது, தூக்கம் வராது, முகம் பிரகாசமாகும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், உடல் எடை குறையும், இன்னும் பல ம்... ம்கூம். உச்சகட்டமாக "டெஸ்டொஸ்டீரோன்" மற்றும் "ஈஸ்ட்ரோஜென்" ஹார்மோன்களின் காம கபடியாட்டமும் நோய் அறிகுறிகளில் ஒன்று. நவீன ஆய்வுகளின்படி காதலில் இருப்பவர்கள் கோகெயின் என்ற போதைப் பொருளால் ஏற்படும் உணர்வை பொறுகின்றனர் எனவும் கண்டுபிடித்திருக்கின்றனர். 

தலைவனை பிறிந்த தலைவிக்கும் அத்தகைய நோய்த்தொற்று அறிகுறிகள் தென்படுகிறது. அதனை தோழி கவனித்துவிடுகிறாள். இந்த பிரிவையும், காதலால் ஏற்படும் விளைவுகளையும், குறிப்பாக காமம் படுத்தும் பாட்டையும் பொறுத்துக் கொள்ளுமாறு அவள் தலைவிக்கு அறிவுரை கூறுகிறாள். அதனை கேட்கும் தலைவியோ, காமத்தின் இயல்பான தன்மையை அறியாதவர்களை கொடியவர்களாகவும், பெரிய மனவலிமை கொண்டவர்களாகவும் அவர்களைப் பற்றி படர்க்கையில்,  அதாவது தனக்கு அட்வைஸ் செய்பவர்களை பற்றி, இல்லாத மூன்றாவது நபரோடு ஒப்பிட்டு பேசுவதைப்போல தோழியிடம் இப்பாடலில் கூறுகிறாள். 

பெண்பால் கூற்று இந்த பாடல்.

சங்க இலக்கியம் - குறுந்தொகை
பாடல் - 290 தலைவி கூற்று
பாடியவர் - கல்பொரு சிறுநுரையார்
திணை - நெய்தல்.

பாடலின் பொருளுக்கு வருவோம்

காம நோயைப் பொருத்துக்கொள் என்று கூறுபவர்கள் அக் காமநோயின் தன்மையைப் பற்றி அறிந்தவரா?... அல்லது அவர்கள் அத்தனை மனவலிமை கொண்டவர்களா?... 

காமம் தாங்குமதி என்போர், 
தாம் அஃ து அறியலர் கொல்? 
அனை மதுகையர் கொல்

என் தலைவனை பிரிந்த நான் வெள்ளத்தில் மிதந்துவரும் சிறுநுரை பாறையில் மோதி மெல்ல அழிந்து போவது போல இல்லாமல் போய்விடுவேன். 

கல்பொரு சிறுநுரை போல

தலைவனும் தலைவியும் காதலில் திளைத்திருக்கிறார்கள். பிறகு பிரிவினால் தனித்திருக்கிறார்கள். பிரிவின் கொடுமை அவர்கள் மட்டுமே அறிய, அவர்களுக்கு அருகிலிருப்பவர்கள் காதலின் நிலையை பரிகாசம் செய்வது என்பது அறிந்த ஒன்றுதான். வள்ளுவரும் தம் பங்கிற்கு 
 
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு


Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

என்று காதல் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு ஆறுதலாக குறள் கொடுத்திருக்கிறார். 

அழகான உவமை, அழகான காதல் பாடல், இவற்றோடு கல்பொரு சிறுநுரையார் யார் என தெரிந்துகொண்டோம் அல்லவா?..
உவமையுடன் அமைந்த இலக்கிய பாடல்கள் தனி ருசி ரகம். அதில் காதலும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம். உவமை என்பது பாடலுக்கு இனிமையை மட்டுமல்ல புலவர்களுக்கு பெயரையும் தந்திருக்கிறது. உவமையினால் பெயர் பெற்ற புலவர்கள் வரிசையில் மீதமிருப்பவர்களைப் பற்றி காலம் கனிந்தால் பார்க்கலாம்.