மெஜாரிட்டி நாங்கள்தான்.

றும்புகள், தேனீக்கள், ஈக்கள், வண்டுகள், தும்பிகள் மேலும் சில கள் சேர்ந்ததுதான் பூச்சிகள். உலகின் மெஜாரிட்டி உயிரினமும் அவைகள்தான். உதாரணத்திற்கு ஒரு மனிதனுக்கு இணையாக 1.4 மில்லியன் எறும்புகள் இந்த உலகில் இருக்கின்றன. மற்றதை கணக்கிட்டால் ஆட்டம் காட்டும் மனிதக் கூட்டம் அற்ப சொற்பமே. அத்தகைய மெஜாரிட்டி உயிரினங்களில் சிலவற்றின் வினோதங்களை பார்க்கலாம் வாருங்கள். 

ஒலிகளை கேட்டு அதன்படி செயல்பட காது என்பது உயிரினங்களுக்கு தலையாயது. அதனால்தான் தலையில் இருக்கிறதோ?... ஆனால் சில பூச்சிகளுக்கு காதுகள் உடலின் வேறு சில இடத்திலும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கிரிக்கெட் பூச்சிக்கு காதுகள் அதன் காலில் இருக்கிறது. வெட்டுக்கிளிக்கு வயிற்றில் உள்ளது. டச்சினிட்ஸ் என்ற ஒருவகை ஒட்டுண்ணி ஈ க்கு கழுத்தில் உள்ளது. லேஸ்விங்ஸ் என்ற பூச்சிக்கு காதுகள் அதன் இறக்கையின் அடிப்பகுதியில் இருக்கிறது. கேட்டபடி நடக்க, கேட்டபடி சாப்பிட, கேட்டபடி பறக்க.... 

கால், துணைக்கால், அரைக்கால், அதற்கு இணைக்கால் என அதிக கால்களைக் கொண்ட உயிரினம் மரவட்டையாகும். மரவட்டையில் 14000 இனங்கள் இருக்கின்றன. அவற்றில் சராசரியாக சில இன மரவட்டைகள் 100 கால்களை கொண்டிருக்கின்றன. சிலவற்றிற்கு 350 கால்கள் உண்டு. அதிகபட்சமாக "இல்கமே பிலினிப்ஸ்" என்ற மரவட்டைகள் 750 கால்களை கொண்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் ஒரு மரவட்டை குடும்பத்தை கண்டுபிடித்து அதற்கு "யூமிலிப்ஸ் பெர்செபோன்" என பெயரும் வைத்தனர். அக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மரவட்டைக்கு 1306 கால்கள் இருந்தன. மரவட்டைக்கு ஆங்கிலத்தில் "Millipede" என்று பெயர். இலத்தின் மொழியில் அதற்கு "ஆயிரம் கால்கள்" என்ற பொருள்.... 

பெரும்பான்மையான பூச்சிகளின் ஆயுட்காலம் வெகு சில நாட்களே. "மே ஃபிளை" என்ற பூச்சி ஒரு நாளில் ஆண்டு அனுபவித்து வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ளும். அதில் 3 மணிநேரம் கூடி முயங்கப் பெறின். ஈக்கள் 15-30 நாட்கள்,  கொசுக்கள் 7-30 நாட்கள்,  தெள்ளுப்பூச்சிகள் 30-90 நாட்கள்,  மூட்டைப்பூச்சி 4 மாதங்கள்,  உண்ணிகள் 5 மாதங்கள், கரப்பான் பூச்சி, எறும்புகள், தேனீக்கள், சிலந்திகள் தலா 2 வருடங்கள், உயிர் வாழ்கின்றன. அதிகபட்சமாக ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒருவகை கரையான்களில், ராணி கரையான் மட்டும் 50 வருடங்கள் உயிர் வாழ்கின்றன. அதோடு மட்டுமல்லாது முட்டை போடுவதில் அவைகளை மிஞ்ச எதுவுமில்லை. சராசரியாக ஒரு கரையான் ராணி ஒரு நாளில் 6000 - 7000 முட்டைகளிடும். தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் "மேக்ரோடெர்ம்ஸ் ஹெலிகோசஸ்" என்ற கரையான் ராணியை ஆராய்ச்சி செய்ய, அது இரண்டு நிமிடத்திற்கு ஒரு முட்டையிட்டது. ஒரு நாளில் அது 43000 முட்டைகளை தள்ளியது... 

தேனீக்கள், ஈக்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் வண்டுகள் உட்பட சில வகையான பூச்சிகள் தங்கள் துணையை நல்லநாள், இராகுகாலம், எமகண்டம் பார்த்து விசேஷமான இடத்திற்கு வரவழைத்து சந்தித்து உடலுறவுகொள்கின்றன. போட்டியாளர்களை தவிர்க்கவே அவ்வாறு செய்ய, அவைகள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் சாப்பிட, குடிக்க என எதுவும் இருக்காது. இருந்தாலும் வேறு முக்கிய வேலை இருக்கிறதல்லவா!... 

பூச்சிகளின் செக்ஸ் சில நிமிடங்களே ஆனாலும் அவை தன் துணையுடன் நீண்ட நேரம் ஒட்டிக் கொள்ளும். போட்டி கருவுருதலை தடுக்க ஆண் பூச்சிகளே அவ்வாறு இருக்கச் செய்யும். அத்தகைய ஒட்டிக்கொள்ளுதல் ஒரு நாள் கூட நீடிக்கும். "சோப்பெர்ரி" என்ற பூச்சி தன் உடலுறவிற்கு பின்பு தன் துணையுடன் 11 நாட்கள் ஒட்டிக்கொள்ளும். சில சமயம் பெண் பூச்சி முட்டையிடும் வரை கூட அது தொடரும். அதிகபட்சமாக "நெக்ரோசியா ஸ்பராக்ஸ்" என்ற ஆண் இந்திய குச்சிப் பூச்சி, 79 நாட்களுக்குத் தன் பெண் துணையின் மீது ஒட்டிக்கொண்டே இருக்கும்...

எல்லா உயிர்களுக்கும் கலவி இன்பம்தான். ஆனால் சில பூச்சிகளுக்கு அதுவே கடைசி சுகமாக அமைந்துவிடும். கும்பிடுபூச்சி, இடையன் பூச்சி என தமிழில் அழைக்கப்படும் மாண்டிஸ் பூச்சிகளில் பெண் பூச்சி, நடணமாடி ஆண்பூச்சிகளை கவரும். ஆண்களும் தன்பங்கிற்கு நடணமாடி பெண்ணின் மனதில் அடுத்த பிரபுதேவாவாக இடம்பிடிக்கும். தேர்வான ஆணும் பெண்ணும் சேர்ந்து நடணமாடி உடலுறவுகொள்ள, பெண்பூச்சி உடலுறவு முடிந்ததும் ஆண் பூச்சியின் தலையை கடித்து கொண்று அதனை உணவாகவும் எடுத்துக்கொள்ளும். சிலவகை மின்மினி பூச்சிகளும், சிலந்திகளும் அவ்வாறு தன் துணையை கபளிகரம் செய்கின்றன. அப்பரம்... நைட் என்ன டின்னர்? என ஆண் பூச்சி கேட்டால் முடிந்தது கதை... 

மெஜாரிட்டி மட்டுமல்லாது உலகின் புஜபல பராக்கிரமசாலி உயிரினமும் பூச்சிகள்தான். "புல்வெளி தவளை பூச்சி" அதன் உயரத்தை விட 100 மடங்கு அதிகமாக குதிக்கும். ஒரு "சாண வண்டு" தன் உடல் எடையை விட 1,141 மடங்கு எடையை இழுக்கும். எரும்புகள் தங்கள் எடையைவிட 50 மடங்கு எடையைத் தூக்கும். "ஹைபோமித்ரா ஹினி" என்ற குதிரை ஈ மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பறக்கும். சிங்காடா என்ற பூச்சி 120 டெசிபல் அளவிற்கு ஒலி எழுப்பும். தங்கள் உருவத்தை வைத்துப் பார்த்தால் இவைகள் பிரபஞ்ச சாதனையாளர்கள்... 
 
சிலந்திகளே உலகின் மிகப் பழமையான பூச்சியினம் ஆகும். 400 மில்லியன் வருடங்களுக்கு முன்பிலிருந்து வசித்துவரும் அவற்றிற்கு அடித்தபடியாக எழுத்தாணி பூச்சி 385 மில்லியன் வருடங்களாக, வண்டுகள் 327 மில்லியன் வருடங்களாக, தட்டான்கள் 300 வருடங்களாக, குளவிகள் 240 மில்லியன் வருடங்களாக, கொசுக்கள் 225 வருடங்களாக, விட்டில் பூச்சிகள் 208 மில்லியன் வருடங்களாக, எரும்புகள் 168 மில்லியன் வருடங்களாக, தேனீக்கள் 130 வருடங்களாக, கரப்பான்கள் 125 மில்லியன் வருடங்களாக, கரையான்கள் 120 வருடங்களாக, வெட்டுக்கிளிகள் 65 மில்லியன் வருடங்களாக இப்புவியில் வசித்து வருகின்றன. பெரும்பான்மையான பூச்சிகள்  டைனோசர்களுக்கே ஹாய் சொன்னவைகளாகும்...

சிங்கடாக்கள், வெட்டுக்கிளிகள், கிரிக்கெட் பூச்சிகள் இவை மூன்றும் நன்றாக பாடும் திறன் பெற்றவை. 
சிங்கடா பூச்சி தன் அடி வயிற்றிலிருக்கும் "டைம்பல்" எனப்படும் வளைந்த தட்டுகளின் மூலம் பாடும். வெட்டுக்கிளிகள் தங்கள் பின்னங்கால்களின் தொடை எலும்பைத் தங்கள் முன் இறக்கைகளின் விளிம்பில் தேய்த்துக் கொண்டு பாடும். கிரிக்கெட் பூச்சி அதன் இறக்கைகளின் உட்புற விளிம்புகளை விரைவாகத் தேய்ப்பதன் மூலம் பாடல்களை உருவாக்குகின்றன. இவற்றுள் ஆண் பூச்சிகளே பாடும். அதற்கு காரணம் உயிரே!..உயிரே... வந்து என்னோடு கலந்துவிடு... என்பதற்காக இருக்கும். மேலும்... இது எங்க ஏரியா உள்ள வராதே... என போட்டியாளர்களை எச்சரிக்கவும் அவை பாடுகின்றன... ராசாத்தி உன்ன காணத நெஞ்சு... என இரவில் சோக கீதம் பாடும் வெள்ளைச்சாமி பூச்சிகளும் இருக்கின்றன. இவைகளைத் தவிர்த்து மேலும் சில பூச்சிகளும் பாட, அவைகள் குறைந்த அதிர்வெண் கொண்டிருப்பதால் நமக்கு கேட்பதில்லை. பூச்சிகளின் பல்வேறு குழுக்கள், பாடல்கள் அல்லாத ஒலிகளை வெளியிடுகின்றன. உதாரணமாக, ஈக்கள், கொசுக்கள் மற்றும் தேனீக்கள், வண்டுகள் அவ்வாறு செய்கின்றன... 

வெப்ப மண்டல காடுகள், பாலைவனம், எரிமலை , பனிப் பிரதேசம் என பூச்சிகள் பூமியில் எங்கும் வாழ்கின்றன. 
எல்லா வெப்பநிலையையும் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் நீருக்கு அடியில் அவைகள் வசிப்பதில்லை. ஏனென்றால் நீரில் அவைகளால் சுவாசிக்க முடியாது. ஆனால் "வாட்டர் போட்மேன்"அல்லது "டைவிங் வண்டு" என அழைக்கப்படும் ஒருவகை வண்டு மட்டும் நீண்ட நேரம் நீருக்கு அடியில் இருக்கும். எல்லாம் ஒரு மில்லி மீட்டர் வயிற்றிற்காக இருக்க, தலைகீழாக நீந்தி தன் வயிற்றில் காற்றை நிரப்பிக்கொண்டு அது நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கிறது. பூச்சிகளில் இது தண்ணி பார்ட்டி போல...   

பிக்காசோ வண்டு,
ஆர்க்கிட் மாண்டிஸ்,
ஹம்மிங்பேர்ட் அந்துப்பூச்சி,
குக்கூ குளவி,
கிரீன் மில்க்வீட் வெட்டுக்கிளி,
முள் பூச்சி,
ரோஸி மேப்பிள் அந்துப்பூச்சி,
சாம்பல் இலை பூச்சி,
மயில் சிலந்தி,
தங்க ஆமை வண்டு,
கம்பளிப்பூச்சி,
நீல மார்போ பட்டாம்பூச்சி,
ஸ்பைனி ஃப்ளவர் மாண்டிஸ்,
நீலக்கல் டிரான்டுலா,
சிவப்பு புள்ளி பொன்வண்டு,

- தோற்றத்தை வைத்துப் பார்க்க இவைகள்தான் உலகின் மிக அழகான பூச்சிகளாகும்... 

டைட்டன் வண்டு,
ஜெயண்ட் நீர் பூச்சி,
பாஃபோமெட் அந்துப்பூச்சி,
முள் குச்சி பூச்சி,
உண்ணிகள்,
உணவு அந்துப்பூச்சி,
ஸ்கார்பியன் குளவி,
கொசு, 
ஈ,
மூட்டைப்பூச்சி,
ஹிஸ்ஸிங் கரப்பான் பூச்சி,
ஜெயண்ட் வீட்டா,
கோலியாத் வண்டு,
டாப்சன்ஃபிளைஸ்,

- இவைகள்தான் தோற்றத்தை  வைத்து மட்டுமல்லாது, நடந்துகொள்ளும் விதத்தாலும் உலகின் அவலச்சனமான, வெறுக்கக் கூடிய பூச்சிகளாகும்... 

" அணு ஆயுதப் போர் காரணமாக மனிதன் தன்னைத் தானே அழித்துக்கொள்வதோடு மற்ற உயிரினங்களையும் அழித்துவிடுவான். அப்போது இந்த உலகை கரப்பான் பூச்சிகள் ஆட்சி செய்யும்" என்ற கருத்து உள்ளது. கரப்பான்கள் மனிதனை விட 15 மடங்கு கதிர்வீச்சினை தாங்கிக் கொள்ளும் சக்தி படைத்ததால் அவ்வாறு கருதப்படுகிறது. "மெகலோபிளாட்டா லாங்கிபெனிஸ்" என்ற ஒருவகை கரப்பான்பூச்சி குறைந்தபட்சம் 3-4 அங்குல நீளமும், அரை அங்குல அகலமும் கொண்டது. பெரு, பனாமா மற்றும் ஈக்வெடார் நாட்டில் அதிகமாக காணப்படும் அவைகள், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமையை பரப்புகின்றன. "உலகின் மோசமான பூச்சி" என்ற கின்னஸ் சாதனைக்கு அவைகள் சொந்தக்காரர்கள். கரப்பான்களுக்கு சரக்கடிக்கும் பழக்கம் உண்டு. அதிலும் அவைகள் பீர் பிரியர்கள். மனிதர்களைப் போல போதைக்காக குடிப்பதில்லை. பீரில் உள்ள ஹாப்ஸ் மற்றும் சர்க்கரை மூலப்பொருட்களை அவைகள் விரும்பி சுவைக்கின்றன... 

பூச்சிகள் இயற்கை சமநிலைக்கு உதவுகின்றன. நன்மை செய்யும் பூச்சிகளால் வேளாண்மை அதிகரிக்கிறது. ஒருவகை சிலந்தி, எறும்பு, விஷவண்டுகள் மருத்துவத் துறையில் பங்காற்றுகின்றன. அதுபோல் பூச்சிகளால் நேரடி பொருளாதார பயன்களும் உண்டு. நமக்கு காசுதானே முக்கியம். தேனீக்களை எடுத்துக்கொண்டால் ஒரு தேனீ ஒரு வருடத்திற்கு 200 ஜாடி தேனை சேகரிக்கிறது. அதனோடு மெழுகையையும் தருகிறது. இயற்கையான மொழுகு அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இங்கிலாந்து மட்டும் வருடத்திற்கு 1 மில்லியன் பவுண்டு மெழுகை இறக்குமதி செய்கின்றன.  பட்டுப் புளுக்களை எடுத்துக் கொண்டால் ஒரு கூட்டிலிருந்து 600-900 மீட்டர் பட்டு நூல் பெறப்படுகிறது. உலகின் 80% பட்டு உற்பத்தி சீனாவிடம் இருக்க, 150000 மெட்ரிக் டன் பட்டு அங்கு வருடத்திற்கு உற்பத்தியாகிறது. இதுதான்  பூச்சிகாட்டும் பொருளாதாரம்...

தோராயமாக 1.5 முதல் 5 மில்லியன் பூச்சியினங்கள் பூமியில் வசிக்கின்றன. அவற்றின் வினோதங்களைப் பற்றி எழுத ஆயுள் போதாதென்பதால் குட்டி குட்டியான சில தகவல்களோடு முடித்துக் கொள்வோம்...

🐞 பிரிக்கப்பட்ட அல்லது வெட்டுப்பட்ட என்ற பொருள்பட "insectum" என்ற இலத்தின் வார்த்தையிலிருந்து வந்ததுதான் பூச்சிகளின் ஆங்கிலப் பெயர் insects... 

🐞 விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் பூச்சி "பழ ஈக்கள்" ஆகும்...

🐞 ஒட்டகச்சிவிங்கியைப் போல நீண்ட கழுத்துகொண்ட "ஆண் அந்துப்பூச்சிகள்" தங்களின் கழுத்தை ஒன்றுக்கொன்று சண்டையிட பயன்படுத்துகின்றன...

🐞 2.5 அடி நீளம் கொண்ட, 250-290 மில்லியன் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த பண்டைய தட்டான்பூச்சியே இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய பூச்சியாகும்...

🐞 நியூசிலாந்தில் காணப்படும்
ஜயண்ட் வீட்டா என்ற கிரிக்கெட் பூச்சி 1 பவுண்ட் எடை கொண்டது...

🐞 யாராவது கிள்ளினால், யாருப்பா கிள்ளியது என மனிதனைப் போல பூச்சிகளும் வலிகளை உணரக்கூடியது...

🐞 பொன் வண்டைப் பற்றி நமது சிறார் பருவத்திலிருந்து தெரியும். ஜப்பானியர்கள் அவைகளை செல்லப்பிராணியைப் போல வளர்கிறார்கள். வளர்ப்பதற்கு தேவையான பொருட்களுடன் அவைகளுக்கு தனி கடைகளும் அங்குண்டு...

🐞 கரையான்களின் பேவரிட் உணவு மரங்கள். அவற்றுள் எது சூப்பர் என தேர்ந்தெடுக்க ஒருவகை  அதிர்வுகளை பயன்படுத்தி கண்டுபிடிக்கின்றன...

🐞 மர நண்டுகள் என அழைக்கப்படும்  "டிரையோகோசெலஸ் ஆஸ்ட்ராலிஸ்" என்ற பூச்சியே உலகின் அரிதான பூச்சியாகும். 1920 களில் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட அது, 2001 ஆம் ஆண்டில், லார்ட் ஹோவ் தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது... 

🐞 வெட்டுக்கிளிகள் தன் எடையில் பாதியளவு சாப்பிடும். சின்ன வயிறுதானே போகட்டும் என விட்டுவிட முடியாது. அவைகள் தனியாக சாப்பிடுவதில்லை. பெருங்கூட்ட வெட்டுக்கிளிகள் ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்ததை, ஒரு மணிநேரத்திற்குள் சுவாகா செய்துவிடும். அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு வெட்டுக்கிளிகள் மேய்ச்சல் நிலங்களை சேதமாக்குகின்றன...

🐞 "கரும்புள்ளிச் செவ்வண்டு" என்ற "லேடி பக்" வண்டே பூச்சிகளிலேயே சிறந்த பூச்சியாகும். அதற்கு காரணம் வேளாண்மையில் தீங்கு விளைவிக்கும் மற்ற பூச்சிகளை இந்த செவ்வண்டு இரையாக்கிக் கொள்ளும். ஒரு செவ்வண்டு ஒரு நாளுக்கு 50 தீமை செய்யும் பூச்சிகளுக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்துவிடும்... 

🐞 மலேரியா, டெங்கு, ஜிகா, ஜிகுஜிகா என கொசுக்கள் நோய்களை பரப்பி ஒவ்வொரு வருடமும் 800,000 மனிதர்களை கொல்கிறது. மற்றும் மில்லியன் கணக்கான மக்களை நோய்வாய்ப் படுத்துகிறது... 

🐞 நான் உன்னை பார்க்கிறேன், உன்னையும், உன்னையும், அட! உன்னையும்தான் என "ஓமாடிடியா" எனப்படும் பல தனிப்பட்ட காட்சி அலகுகளின் மூலம் பூச்சிகளால் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடியும். பூச்சிகள் பல கூட்டு கண்களைக் கொண்டது...

🐞 நீரிலிருப்பவை நிலத்திற்கு வர தோன்றியவைகளே பூச்சிகள். ஒரு வகையில் தற்போதிருக்கும் விலங்குகள், பறவைகள், மனிதர்களுக்கு அவைகளே பரம்பரை முன்னோடிகள்...