மஞ்சள் பூனை.
அன்பு, அறம், இறைத்தன்மை இவற்றையெல்லாம் மறந்த ஒரு உலகம்.
போட்டி, பொறாமை, வன்மத்தை கக்கும் உலகம்.
தன் நிலம், தன் இனம், தன் மனமென சுயநலமிக்க உலகம்.
பிறருடைய கனவுகளை சிதைத்து, ரசித்து, சிலாகித்து, சுயஇன்பம் காணும் உலகம்.
அத்தகைய உலகத்தில் தன்னுடைய கனவை நிறவேற்ற நினைக்கும் ஒருவனின் கதைதான் இந்த மஞ்சள் பூனை.
"கெர்மெக்" என்பவன் குற்ற செயல்களுக்காக சிறைக்குச் சென்று திரும்பி வருகிறான். அவனுடன் தொழில்முறை விபச்சாரியாக இருந்த "ஈவா" என்பவள் இணைகிறாள். இருவரும் தங்களின் கடந்தகால வாழ்க்கையை துறந்து மறந்து கஜகஸ்தானில் உள்ள புல்வெளி நிலத்தில் வசிக்கின்றனர். கெர்மெக் வேலை தேடி அலைகிறான். முன்னால் குற்றவாளி என்பதால் அவனுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. ஈவாவிற்கும் அதே நிலைமை ஏற்பட, கெர்மெக் தான் வசித்துவரும் இடத்தில் ஒரு திரையரைங்கை கட்ட வேண்டும் என நினைக்கிறான். அது அவனது கனவாக இருக்கிறது. இதற்கிடையில் உள்ளூர் காவலாளி "போசோய்" என்பவன் அங்கு நிகழும் குற்ற சம்பவங்களுக்கெல்லாம் கெர்மெக்கை போலியாக சிக்க வைக்க முயற்சிக்கிறான். மேலும் ஜேங்ஸ்டரான "ஜாம்பாஸ்" என்பவனும் அவனது அடிப்பொடிகளும் கெர்மெக்கிற்கு தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களைத் தாண்டி அத்தனை தடைகளையும் கடந்து கெர்மெக் தனது கனவை அடைந்தானா? என்பதுதான் திரைப்படத்தின் மீதிக்கதை.
கெர்மெக் திரையரங்கம் கட்ட நினைக்கும் இடம் கைவிடப்பட்ட நிலம். 'அய்யா என் கெணத்த காணும்' என்பதைப் போல நிஜத்தில் ஏரல் என்ற கடல் தொலைந்ததால் பாதிக்கப்பட்ட இடம். வடக்கு கஜகஸ்தானிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலிருக்கும் "கசாக் ஸ்டெபி" எனப்படும் அந்த இடத்தில் ஒரு திரையரங்கம் அமைக்கும் நாயகனின் கனவு விசித்திரமாக இருக்கிறது. மனிதர்களின் மாற்று உலகம் எப்படிப்பட்டது என்பதைக் காட்ட அக்கனவு ஒரு உருவகமாக இருக்கிறது. அது யாருமே செய்திராத மஞ்சள் நிற பூனையை வளர்க்க முயற்சிப்பதாக அமைகிறது. கெர்மெக் "ஜீன் பியர் மெல்வில்லின்" "Le samurai" என்ற திரைப்படத்தை தனது கனவு திரையரங்கில் முதலாவதாக திரையிட வேண்டும் என்ற அவனது எண்ணமும் விந்தையாக இருக்கிறது. அத்தனைக்கும் அவன் திரைப்படங்களை பார்த்த தருணங்கள் வெகு சில என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவனது கனவு எத்தகையானதாக இருந்தாலும் அதனை அடைய முற்பட ஏற்படும் சோதனைகளை சமுதாய கண்ணோட்டத்தில் இந்த திரைப்படம் அணுகுகிறது.
- Sary mysyq
- (Yellow Cat)
- Directed by - Adilkhan Yerzhanov
- Written by - Inna Smailova, Adilkhan Yerzhanov
- Cinematography - Yerkinbek Ptyraliyev
- Music by - Alim Zairov, Ivan Sintsov
- Country - Kazakhstan
- Language - Russian, Kazakh
- Year - 2020.
Landscape எனப்படும் "கசாக் ஸ்டெபி" புல்வெளியின் அகல்பரப்பு காட்சிகளே இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் எனலாம். அத்தகைய காட்சிகளுக்கிடையே நிகழும் இடைவிடாத அமைதியும் , சிவப்பு பச்சை மஞ்சள் ஊதா என முதன்மை வண்ணங்களை தனித்து பயன்படுத்திய விதமும் ரசிக்க செய்கிறது. மரங்களுக்கிடையே கெர்மெக்கும் ஈவாவும் ஓடி விளையாடும் நீண்ட காட்சி, மஞ்சள் வெளியில் ஈவா நிற்கும் காட்சி, காதலர்களின் நடண காட்சி என அதற்கு உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் குழந்தைத்தனமாக இருக்கும் சிறு சிறு காதல் காட்சிகள், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வசீகரிக்கும் நாயகன், இசை, black humor எனப்படும் மெல்லிய சோகத்தைக் கொண்ட நகைச்சுவை என திரைப்படத்தில் மேலும் ரசிக்கும் விசயங்களும் இருக்கின்றன. ஒரு ரசனைக்காகவும், பொழுது போக்கிற்காகவும், அழகிய கதை கொண்ட நாவலை வாசித்தது போன்றும் இந்த திரைப்படத்தை கலவையான கண்ணோட்டத்தில் காணலாம்.
துளிகள்:
🖊️
கசாக் ஸ்டெப்பி புல்வெளி ஏறத்தாழ "804,450" சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பூமியின் மிகப்பெரிய உலர் புல்வெளிப் பகுதியாகும்...
🖊️
புல்வெளியின் பெரும்பகுதி அரை பாலைவனமாக இருக்கிறது...
🖊️
துருக்கிய "கிப்சாக்" பழங்குடியினர் மற்றும் இடைக்கால மங்கோலிக் பழங்குடியினரின் வழித்தோன்றல்கள் மற்றும் பொதுவாக டர்கோ-மங்கோலிய கலாச்சாரக் குழுக்கள் இணைந்து "கசாக்குகள்" என்ற இனமக்கள் அங்கு வசிக்கின்றனர்...
🖊️
கசாக் மொழியில் இப் புல்வெளி "அல்டின் தலா" என அழைக்கப்படுகிறது. அதற்கு "தங்கப் புல்வெளி" என்று பொருள்...
🖊️
கஜகஸ்தானை சேர்ந்த இயக்குனர் "அடில்கான் யெர்ஷானோவ்வின்" படைப்புகள் சில..
Ademoka's Education (2022).
Goliaf (2022).
Shturm (2022).
Onbagandar (2021).
Ulbolsyn (2020).
Atbai's Fight (2019).
A Dark, Dark Man (2019)
The Gentle Indifference of the World (2018).
Nochnoy Bog (2018).
The Plague at the Karatas Village (2016).
The Owners (2014).
Constructors (2013).