ஒருமுறை சந்தித்தால்...

ஒருமுறை சந்தித்தால்!... ஒருவேளை சந்தித்தால் எனவும் வைத்துக்கொள்வோம். சந்..தித்..தால்...

மௌனக் குடுவை செய்து
மனம்பேச நினைத்ததை
அதில் நிரப்பி
பூதம் போல்
காவல் காப்போம்...
அழுது தீர்ப்போம்.
கண்ணீருடன் வினைபுரியாத 
சோகம்
பிரிவு
ஏக்கம்
கோப தாபம்
எதுவுமில்லை... 
உன்னுள்
என்னுள்
உள்ளுள் எரியும்
உலைத் தீயடங்க
கட்டியணைப்போம்...
எனக்கு நீயும்
உனக்கு நானும்
முத்தமூட்டிக்கொள்வோம்.
ஊட்டுதல்
உன்னத அன்பு
முத்தம்
காதல் உணவு...
உயிர் 
அன்றிணைய
உடலுக்கென
நாள் ஒதுக்குவோம்...
வலி மறந்து
வழி தொலைத்து
விரல் கோர்த்து
நடை செல்வோம்.
நடை 
இதயத்திற்கு நல்லது...
தோள் சாய்ந்து
மாலை சூரியன்
மழை 
மலர்
மரம்
பறவையென
பறந்தவெளி ரசிப்போம்... 
கவிதை வாசிப்போம்
ரூமியின் அறிவுறைப்படி
அதன் உள்ளிருக்கும்
துடிப்புகளை கேட்போம்...
உடன் இணையும்
உடன்படிக்கைக்கு
ஒப்புக் கொண்டு
சண்டையிட்டுக் கொள்வோம்...
சந்திப்பு 
அதிகம் வளர
அடியுரமிடுவோம்...