நிஜ ராபுன்சல்கள்.

ராபுன்சல் என்ற உலக புகழ்பெற்ற சிறார் கதை ஒன்று இருக்கிறது. அக்கதையின் நாயகியான ராபுன்சலுக்கு 20 + அடி  நீளத்தில் கூந்தல் இருக்கும். கூந்தல் பெண்களுக்கு பேரழகு. அவளைப் போன்று இல்லையென்றாலும் அட்லீஸ்ட் இரண்டு மூன்றடி கூந்தல் கொண்ட பெண்களை தற்போது காண்பது என்பது அரிதான ஒன்று. இயற்கை மாற்றங்களால் வளர்வதில்லை. மீறி வளர்ந்தாலும்,  

*blunt chops without layers
*medium neck-length bobs
*shorter pixies
*one-length haircuts 
*modern shags 
*textured haircuts
*bangs (short, long, curtain, side-swept).

இதில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து விடுவதில்லை.  பராமரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் பின்னல்கள். நவின நக்கீரர்களுக்கு
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி.......
..........
மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே....
பாட்டில் குற்றம் கண்டுபிடிக்கவும் வாய்ப்பேயில்லை. ஆனாலும் சீனாவில் ஒரு கிராமத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் குறைந்தது 5 அடி நீள கூந்தலை கொண்டிருக்கின்றனர். அவர்கள் "நிஜ ராபுன்சல்கள்" என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் வசிக்கும் கிராமம் "World's longest hair village" என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. அந்த கிராமத்திற்குள் நுழைந்து நிஜ ராபுன்சல்களை சந்திப்போம் வாருங்கள். 

தெற்கு சீனாவின் குய்லின் நகரத்திலிருந்து சுமார் இரண்டுமணிநேரம் பயணித்தால் ஜின்ஷா ஆற்றங்கரையில் இருக்கும்  "ஹுவாங்லூ யாவோ" கிராமத்தை அடையலாம். அங்கிருந்து பார்த்தால் ஓவியங்களில் இருப்பதுபோல டிராகனின் முதுகெலும்பு என அழைக்கப்படும் "லாங்ஜி மலை" அழகாகத் தெரியும். அந்த இடம் 2002 ஆம் ஆண்டு வரை வெளிவுலகத்திற்கு தெரியாமல் இருந்தது. அதுவே "ஹுவாங்லுவோ யாவ்" என்ற சிவப்பு யாவோ மக்களின் தாயகமாகும். அவர்கள் கின் வம்சத்தை சேர்ந்த பழங்குடிகளாவார்கள். சுமார் 78 குடும்பத்தை சேர்ந்த 600 நபர்கள் இயற்கையோடு அங்கு வசித்து வருகின்றனர். அவர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் மிக நீண்ட கூந்தலை கொண்டிருக்கின்றனர். 

கூந்தல் என்பது மிகவும் மதிப்புள்ள உடைமை என கருதும்  ஹுவாங்லுவோ யாவ் பெண்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய முறைப்படி அதனை பராமரித்தும் வருகின்றனர். 60 வயதை கடந்தாலும் அவர்களின் கூந்தலில் ஒரு முடி கூட நரைப்பதில்லை என்பதுவும், கருகருவென பட்டுப்போன்ற கேசத்தை கொண்டது என்பதுவும் மேலும் சிறப்பு. நாள்தோறும் ஜின்ஷா
நதியில் கூந்தலை கழுவும் அவர்கள், மூன்று நாட்களுக்கு ஒருமுறை பம்மல்லோ எனப்படும் பம்பளிமாசின் தோல்களுடன் தேயிலையின் விதையின் எண்ணெய் சேர்த்து அரிசி கஞ்சியில் ஊரவைத்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஷாம்புவைத் தடவி கூந்தலை அலசுகின்றனர். மரத்தாலான சீப்பைக் கொண்டு உலர்த்துகின்றனர். இதுவே அவர்களின் கூந்தல் பராமரிப்பு செயல்முறையாக இருக்கிறது. 

கூந்தல் எவ்வளவு நீளம் இருக்கிறதோ அவ்வளவு நீண்ட காலம் வாழலாம். அது நீண்ட ஆயுளின் சின்னம் என இருக்கும் ஹுவாங்லுவோ யாவ் பெண்கள் 18 வயதில் தங்களது முடியை முதன்முதலாக வெட்டிக் கொள்கின்றனர். தலைமுடியை வெட்டிக்கொள்ளும் ஒரு பெண் தன் வாழ்க்கையை மாற்றப் போகிறாள் என்பது அவர்களது பாரம்பரியம். அது ஒரு சடங்கு. அவ்வாறு வெட்டிக்கொள்ளும் பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள். வெட்டப்பட்ட முடியைக்கூட அவர்கள் தூக்கியெரியாமல் தங்கள் கூந்தலுடன் முடிந்து வைத்துக் கொள்கின்றனர். அதனோடு திருமணமாகாத பெண்கள் கருப்பு நிற துணிகளைக் கொண்டும் திருமணமான பெண்கள் சிவப்பு நிற துணிகளைக் கொண்டும் தங்கள் கூந்தலை மறைத்துக் கொள்கின்றனர். திருமணம் ஆகாத கிராம ஆண்களுக்கும் வெளி ஆட்களுக்கும் கூந்தலை காண்பிப்பது குற்றமாக நெடுங்காலம் இருந்திருகிறது. 

ஹுவாங்லூ யாவோ கிராமம் தற்போது புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக சுற்றுலா இருக்கிறது. ஹுவாங்லூ யாவோ பெண்கள் தங்களது பாரம்பரிய சிவப்பு உடையில் நாட்டுப்புற நடணமாடியும் பாடல்களைப் பாடியும் தங்களது இனத்தின் அருமை பெருமைகளை வரலாற்றுடன் சுற்றுலா வருபவர்களுக்கு விவரிக்கின்றனர். அங்கு சென்றால் நிஜ ராபுன்சல்கள் என அழைக்கப்படும் அவர்களை சிறப்பான தேயிலை நீருடன் சந்திக்கலாம்.