மலபார் கோபாலன் ஸ்ரீகுமார்.

ரிசல் தரிசல்
நிலவு கொதிக்க
உசுர கடந்து
மனசும் குதிக்க
வரவா ஊரும் அடங்க...

Always my favorite என்ற பட்டியலில் இருக்கும் பாடல் இது. அடிக்கடி அடியேனின் Velociraptor
குரலில் முணுமுணுப்பதுவும் இந்த பாடலைத்தான். A.R. ரஹ்மான் இசையில் தாஜ்மஹால் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். 

என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்

என ஒலிக்கும் இந்த பாடலின் பெண் குரலுக்கு சொந்தக்காரி யார் என்பது முன்னமே தொரியும். இங்கு காரி என உரிமையுடன் செல்லங் கொஞ்ச காரணம் சின்ன குயிலுடையாளுக்கு கொஞ்சுவது பிடிக்கும் என்பதால்.

ஏ மச்சக்கண்ணியே....!

என ஒருமுறை தூரத்திலிருந்து கூப்பிடுவது போல உச்சசதியிலும்

ஏ மச்சக்கண்ணியே....!

என மனதிற்குள் ஒரு முறை சாந்தமாக சொல்லிப் பார்ப்பது போலவும் பாடும் காரனின் குரல் "மலபார் கோபாலன் ஸ்ரீகுமார்" என பிறகுதான் தெரிய வந்தது.

மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு... 

மலபார் கோபாலன் ஸ்ரீகுமார் சுறுக்கமாக "M.G.ஸ்ரீகுமார்" மலையாள   திரையுலகின் தவிர்க்க முடியாத நபர் ஆவார். பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், டிவி தொகுப்பாளர், இசை நிறுவனத்தின் சொந்தக்காரர் என பன்முகம் கொண்டவர். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் 3000 மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இரண்டு தேசிய விருதுகள் உட்பட, தென்னக பிலிம்பேர், கேரள மாநில அரசு விருது என பல விருதுகளை வாங்கியிருக்கிறார். சபரிமலை சீசனில் ஒலிக்கும் ஐயப்பன் பாடல்களில் அதிகமானவை இவருடையதே. 

1957 - ல் கேரளாவின் ஆலப்புழாவில் பிறந்த இவரது தந்தை மலபார் கோபாலன் நாயரும் இசையமைப்பாளர் ஆவர். தாயார் கமலாச்சி அம்மா ஹரிகதா சொல்பவர். இவரது சகோதரர் M.G.ராதாகிருஷ்ணன் மற்றும் சகோதரி ஓமனகுட்டி அகியோரும் இசைத்துறையை சார்ந்தவர்கள். ஆகவே இசை ஜீனுடன் சரிகம பயிற்சியும் எடுத்துக்கொண்டு 1983 -ல் வெளிவந்த "கூலி" என்ற மலையாள திரைப்படத்தில் M.G.ஸ்ரீகுமார் தனது முதல் பாடலை பாடினார். சமீபத்தில் வெளிவந்த ஆராட்டு திரைப்பட பாடல் வரை இவர் பாடிக் கொண்டிருக்கிறார். 
மம்முக்காவிற்கு யேசுதாஸ் என்றால் லாலேட்டனுக்கு M.G.ஸ்ரீகுமார் என்ற அளவிற்கு மேகன்லாலுக்கு கச்சிதமாக பொருந்துவார். அவருக்காக அதிக பாடல்களையும் பாடியிருக்கிறார். ஆரம்ப  காலகட்டத்தில் இவரது குரல் யேசுதாஸிற்கு மாற்றாகவே இருந்தது.  ..."யேசுதாஸுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்கவோ அல்லது அவரைப் பின்பற்றவோ முயன்றிருந்தால், நான் எங்கும் சென்றிருக்க முடியாது"... என பின்னர் தன்வழியை மாற்றிக்கொண்டார். திலிப், மற்றும் ஜெயராமிற்கும் M.G.ஸ்ரீகுமாரின் குரல் பொருந்தமாக இருக்கும். 

தமிழை பொறுத்தவரை மோகமுள் திரைப்படம் இவருக்கு அறிமுகமாக இருந்தது. அதில் இடம்பெற்ற "சொல்லாயோ வாய் திறந்து" பாடலை பாடியது யேசுதாஸ் என பல காலம் நினைத்திருந்ததுண்டு. 
அதற்கு பின்பு வெளிவந்த சிறைச்சாலை திரைப்படத்தில் இடம்பெற்ற "சுட்டும் சுடர்விழி" பாடல் புகழ் பெற்றுத்தந்தது. A.R. ரஹ்மானின் இசையில் என் சுவாச காற்றே, காதலர்தினம் மற்றும் தாஜ்மாஹால் திரைப்படத்தில் M.G.ஸ்ரீகுமார் பாட அவரது குரல் பட்டி தொட்டி எங்கும் ஒளிந்தது. இருந்த போதும்!... 

நிலவை பொட்டு வைத்து
பவளம் பட்டம் கட்டி
அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன் நான்
வரவேற்பேன் நான்...
(- சிறைச்சாலை)

ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்...
(- மஜ்னு)

முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா...
(- என் சுவாசக் காற்றே)

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாக பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ...
(- என் சுவாசக் காற்றே)

என அற்புதமான வரிகளை விழுங்கி  தமிழுக்காக இவர் பாடியது மிக குறைவு. அது வருத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. 

M.G.ஸ்ரீகுமாரைப் பற்றி தெரிந்து கொள்ள கூகுளை சுற்ற, கூகுளும் சுற்ற, அவரது பாடல்களும் சுற்ற, அவற்றில் சிலவற்றை பட்டியலும் போட்டு வைத்துவிட்டேன். அது தங்களின் பார்வைக்கும். 


துளிகள்:

🖊️... 
இவர் "கே.எம்.ஜி மியூசிக்ஸ்" என்ற இசை நிறுவனத்தையும், மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புராவில் "சரிகம" என்கிற பெயரில் இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்...

🖊️... 
ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா(1990) திரைப்படத்தின் "நந்த ரூபினி" என்ற பாடலுக்கும், வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் (1999) திரைப்படத்தின் "சாந்துப் பொட்டும்" பாடலுக்கும் இவருக்கு தேசிய விருது கிடைத்தது...

🖊️... 
காஞ்சிவரம், பொய் சொல்லப் போறோம் இவை இரண்டும் M.G.ஸ்ரீகுமார் இசையமைத்த தமிழ் திரைப்படங்கள்...

🖊️... 
1989 -ல் வெளிவந்த "கிரீடம்" மலையாள திரைப்படம் இவரது இசை வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது... 

🖊️... 
இறைவன் ஐயப்பனை உறங்க வைப்பதற்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலான "ஹரிவராசனம்" பாடல், யேசுதாஸிற்கு பிறகு M.G.ஸ்ரீகுமார் குரலில் மட்டுமே கேட்க தெய்வீகமாக இருக்கும்...