ஒரு மஞ்சணத்தியை கண்காணித்தல்.

ஞ்சணத்தி, மஞ்சள் நீராட்டி, மஞ்சோனா, மஞ்சள் வண்ணா, மஞ்சள் நாறி, Morinda tinctoria, சங்க இலக்கிய படி தணக்கம் மரம் என சொன்னால் யாருக்கும் தெரியாது. அதுவே ''நுணா மரம்'' என்றால் எளிதில் புரிந்துகொள்ளலாம். சர்வ சாதாரணமாக வேலியோரம் சதுப்பு நிலங்களில் காணப்படும் இந்த மரத்தின் இலைகளையும், பூக்களையும், காய்களையும் வைத்து விளையாடாத தொன்னூறுக்கு முந்தைய குழந்தைகளே இல்லை எனலாம். கரடுமுரடாக இருந்தாலும் அதன் காயை வைத்து செய்யப்படும் விளையாட்டு தேர் அழகு. இதன் பழம் கருப்பு வண்ணத்திலிருக்கும், சதைப்பகுதி மஞ்சளாக இருக்கும். அதனால்தான் அது மஞ்சணத்தி. மஞ்சணத்தியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதைப்பற்றி தனி அத்தியாயமே எழுதலாம். இதன் உடல் பகுதி இலகுவாக இருப்பதால் ஒரு காலத்தில் கட்டில் முதல் கலை பொருட்கள் வரை செய்யப்பட்டது. நுணா கட்டில் தூக்கம் சொர்க்கம்.  வெள்ளையாக நறுமணத்துடன் பூக்கும் இதன் மலரைத் தேடி தேனீக்களும் வண்டுகளும்  பூச்சிகளும் எறும்புகளும் வருகின்றன. கொஞ்சம் துவர்ப்புடன் இருந்தாலும் இதன் பழ ருசிக்கு அணில்களும், வௌவால்களும், பறவைகளும் அடிமையாக இருக்கின்றன. நிழலுக்கும் பல நிகழ்விற்கும் உதவும் இயற்கையின் வரம் இந்த மரம். அத்தகைய மஞ்சணத்தி மரம் ஒன்றை சில நாட்கள் தினந்தோறும் பார்க்க முடிந்தது. அதனை வாடிக்கையாக நாடிவரும் பல உயிரினங்களையும் சந்திக்க நேர்ந்தது. மூன்றாவது கண் வழியே ஒரு மஞ்சணத்தியை கண்காணிக்க கிளிக்கியவைகளே இவைகள்.