மரத்தின் ருசி.


ழை, மரம், கடல், பட்டாம்பூச்சி, பறவை, பூ என நம்மைச் சுற்றியுள்ள சின்ன சின்ன விசயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை. 
ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பணத்தை துரத்திக்கொண்டே இருக்க வேண்டும். நண்பருடன் கடற்கரைச் சாலையில் பேசிக் கொண்டு பயணிக்கும் போது "கடைசியாக கடற்கரையில் கால் நனைத்தது எப்போது?" என அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் நெருடச் செய்தது. தினமும் அவ்வழியே பயணிக்க  கடைசியாக கடற்கரையில் கால் நனைத்தது எப்போது?.. அடடா! சின்ன சின்ன விசயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை எனும்போது கிறுக்கியதுதான் இவைகள். 
பொழிதலும்
நனைதலும்
குளிர்தலும்
இயல்பெனில் 
அது
பிழையில்லா மழை...
கடல் ஏன்
இத்தனை ஆனந்தம்
தெரிந்துகொள்ள
அடுத்தமுறை 
வரவேண்டும்
அடுத்தமுறையும் 
வரவேண்டும்... 
பரந்து விரிந்த
கடலை விழுங்க
சிறு சங்கு போதும்...
உதிர்தல் 
வீழ்ச்சியல்ல
நினைவுகளில்
மிதத்தல்...
பட்டாம்பூச்சி கனவு
பெரும்பாலும் 
ஒருதுளி தேன்
ஒரு சிட்டிகைக்கும்
குறைவான
மகரந்தம்... 
எத்தகைய 
தொழில்நுட்பத்தினாலும்
இயற்கையை 
பிரதியெடுக்க முடியாது
இளநீர் 
அருந்திப் பாருங்களேன்... 
கொல்லும் 
ஆயுதமல்ல
குடற்பசியின் உறுப்பு
மீன்கொத்தி அலகு... 
ஊரென்ன
பெயரென்ன
இனமென்ன
குணமென்ன
இவையாவும்
இருந்தாலென்ன
இல்லாமலென்ன
அது ஒரு பறவை
அவ்வளவுதான்...
அடுத்த ஜென்ம அவா
பெரிதொன்றுமில்லை
ஒரு நாள் 
சிரித்துதிரும்
செம்பருத்தி பூவளவே...
அணில் கடித்த
பழத்தில்
மரத்தின் ருசி...