சீனப் பெண்கள் - சொல்லப்படாத கதை.
கேளிக்கை, பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம் இவற்றிற்கு இன்றைய காலகட்டத்தில் பல சாதனங்கள் இருந்தாலும் ஒரு நூற்றாண்டுகாலம் வானொலியைப் (ரேடியோ) போல கோலோச்சியது எதுவுமில்லை. வானிலை அறிக்கை, போர் செய்திகள், அரசியல் பிரச்சாரங்கள், நடப்பு செய்திகள், வேளாண் தகவல்கள், பாடல்கள், விளையாட்டு, சினிமா, இலக்கியம், கல்வி என வானொலி அள்ளித் தந்தது ஏராளம் இருக்கின்றன. "வானொலி என்பது வெகுஜன ஊடகம்". யாருமற்ற முதியவர் ஒருவருக்கும் அவரது ரேடியோ பெட்டிக்கும் இடையிலான வாழ்வை பேசிய "ரேடியோ பெட்டி" என்ற கவனிக்க மறந்த தமிழ் திரைப்படம் ஒன்று இருக்கிறது. அதில் உள்ளதுபோல் தோள் சாய உற்ற தோழனாகவும், வீட்டில் செல்லப் பிள்ளையாகவும் அது கூடவே இருந்திருக்கிறது. "அது ஒரு அழகிய வானொலிக் காலம்" என உலக வரலாற்றின் காலத்தை தனியே வகைப்படுத்தலாம். அக்கால கட்டத்தில் சீனாவில் இருக்கும் புகழ்பெற்ற ஒரு வானொலி நிலையத்தில் பணிபுரிந்தவர்தான் "சின்ரன்".
சீனாவில் பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம், ஊடகங்களின் குரல் என்பதெல்லாம் ஆளும் அதிகாரத்தினால் இன்றுவரை அடக்கி வைக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனோடு 1989 முதல் 1997 வரை அங்கிருந்த மிகப் பிரபலமான வானொலி ஒன்றின் தொகுப்பாளினியாக இருந்த சின்ரனால், ஒரு நிகழ்ச்சியின் மூலம் பல பெண்களின் அனுபவங்களையும் உள்ளக் குமுறல்களையும் கேட்க நேர்ந்தது. அதே நிகழ்ச்சியின் மூலம் அதை தைரியமாக வெளிப்படுத்தவும் அவரால் முடிந்தது. அந்த நிகழ்ச்சி மற்றும் சீனப் பெண்களைப் பற்றி ஆராயும் நோக்கம் என, அக்காலத்தில் ஆட்சியிலிருந்த கட்சித் தலைவர்களின் மனைவிகள் முதல், எதோவொரு மூலையிலிருக்கும் கிராமத்து ஆசாமிகளின் மனைவிகள், கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை பலதரப்பட்ட சமூகத்தின் நிலையிலிருக்கும் பெண்களை சின்ரன் சந்தித்தார். அவர்களும் பழமையான சீன கலாச்சாரத்தினாலும், பிறப்பிலேயே தாமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட சீன ஆண்களாலும், உருவாக்கும் முன் அழித்தாக வேண்டும்...குழப்பத்திற்கு அஞ்சாதே போன்ற மாவோவின் பொன்மொழிகளாலும், நான்கு பழமைகளை ஒழிப்பது என்ற நவீன சீர்திருத்த தத்துவங்களாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சின்ரனிடம் மனம் விட்டு பேசினர். அவர்கள் பேசியதை சின்ரன் பொது இடத்தில் வைத்தார். அதை பின்நாட்களில் "The Good Women of China: Hidden Voices" என புத்தகமாக எழுதினார். அதன் தமிழாக்கமே இந்த "சீனப்பெண்கள்" சொல்லப்படாத கதை.
- சீனப்பெண்கள் (சொல்லப்படாத கதை)
- சின்ரன்
- தமிழில்: ஜி.விஜயபத்மா
- எதிர் வெளியீடு.
12 வயது சிறுமிக்கு 60 வயது கிழவனுடன் நிகழ்ந்த திருமணம். அச்சிறுமி தப்பிக்க இயலாதவாறு அவளை விலங்கிட்டு வைத்திருந்த கொடூரம். இதெல்லாம் இங்கு சகஜம் என அச்செயலை ஒரு கிராமமே ஆதரித்த கதை... ஒழுக்கத்தை ஊருக்கு போதிக்கும் இராணுவ அதிகாரியே, தனது 11 வயது மகளை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கிய கொடுமைக் கதை... சீனாவில் நிகழ்ந்த பூகம்பத்தில் சிக்கிய 14 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து வீசிய கொடூர கதை... இலாபகர சொற்பொழிவால் கவரப்பட்டு புரட்சிப்படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய நினைத்த இளம்பெண் ஒருவரின் வாழ்க்கையை அப் புரட்சிப்படையே புரட்டிப் போட்ட கதை... அதனோடு தன் காதலனுக்காக 45 வருடம் காத்திருந்த முகம் தெரியாத ஒருத்தியின் கதை (அக்கதை புத்தகத்தில் கவிதையாகவும் காவியமாகவும் இருக்கிறது). என இந்த புத்தகத்தில் மொத்தம் 15 துயரமான கதைகள் இருக்கின்றன. அவையனைத்தும் கனத்த, கண்ணீரை வரவழைக்கும், துன்பங்கள் நிறைந்த "சீனப் பெண்களின் சொல்லப்படாத கதைகள்".
சீனாவின் வரலாறு அந்நாட்டைப் போலவே மிகப் பெரியது. அங்கு நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் வளர்ச்சிகளும் வேறெங்கும் நிகழ்ந்திறாதது. அந்தகைய மாற்றங்களால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகள், இவற்றை இந்த புத்தகத்திலிருக்கும் கதைகள் தாங்கியிருக்கிறது. மேலும் சீனாவில் பேசத் தயங்கும் அல்லது பேசவே நினைக்கத் தயங்கும் பாலியல் பாடங்கள், லெக்ஸ்பியன், ஹோமோ செக்ஸ், மனைவியை மாற்றிக் கொள்ளுதல், பலதார திருமணம் இவற்றையெல்லாம் இந்த புத்தகம் அலசி ஆராய்கிறது. கலாச்சாரத்தில் பாலியலின் பங்கு எத்தகையது என்பது குறித்தும் பேசுகிறது.
ஆண் ஒரு நிழல் தரும் மரமாக இருப்பான். அவன் நிழலில் நாம் உயிர் வாழலாம் என்று ஒருபோதும் நீ நம்பி இருக்காதே. பெண்கள் மரம் வளர்வதற்கான உரம் போன்றவர்கள். எங்குமே உண்மையான காதல் கிடையாது. தம்பதிகள் இருவர் மனம் ஒத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் இருவருக்குமான லாபத்திற்காகத்தான். அது செல்வமாகவோ, அதிகாரமாகவோ, இல்லை காரிய அனுகூலத்திற்காகவோ இருக்கலாம்...
- புத்தகத்திலிருந்து
சீனாவில் பேசவே முடியாத இத்தகைய கதைகளை, விசயங்களை வெளிவுலகிற்கு தெரியப்படுத்திய சின்ரனை ஆட்சியாளர்கள் விட்டு வைப்பார்களா என்ன?.. அவருக்கு அச்சுறுத்தல்கள் வரவே சீனாவை விட்டு அவர் லண்டனுக்கு செல்ல வேண்டியிருந்தது. சின்ரன் வானொலி நிலையத்திற்காக இத்தகைய கதைகளை சேகரித்தார் என்பதையும் தாண்டி பாதிக்கப்பட்ட பல பெண்களை சந்தித்திருக்கிறார், அவர்களை மீட்டிருக்கிறார், அவர்களோடு பழகியிருக்கிறார். கடிதம் வாயிலாக பழக்கத்தை தொடர்கிறார் என்பது சிறப்பாக இருக்கிறது. இத்தனைக்கும் சின்ரனும் சாதாரண சீனா மார்க் சின்சியர் குடும்பப் பெண்தான். கலச்சாரத்தாலும் அரசாங்க வழிமுறைகளாலும் அவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கம்யூனிச நாட்டில் அதாவது சீனாவில் பெண் என்பவள் எப்படி இருந்தாள்?...எப்படி இருக்கிறாள்?... எப்படி இருக்க வேண்டும்?... மேலும் வானொலி நிகழ்சியில் சின்ரனிடம் நேயர் ஒருவர் கேட்ட, பெண்களுக்கென்று தனியாக தத்துவம் எதுவும் இருக்கிறதா?...
பெண்களுக்கான மகழ்ச்சி எதில் இருக்கிறது?... நல்ல பெண்கள் யார்?.. என்ற முன்று கேள்விகளுக்கான பதில்களையும் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது. தவறாமல் வாசியுங்கள்.
துளிகள்:
🖊️... அற்புதமான இந்த புத்தகத்தை ஜி. விஜயபத்மா வழக்கம்போல் மொழிபெயர்த்திருக்கிறார் (வழக்கம் என்பது பயிற்சி, ஒழுங்குநிலை, தியானம்).
🖊️... சின்ரனின் மேலும் சில படைப்புகள்
*The Good Women of China
*Sky Burial: An Epic Love Story of Tibet
*What the Chinese Don't Eat
*Miss Chopsticks
*China Witness: Voices from a Silent Generation
*Message from an Unknown Chinese Mother
*The Promise: Tales of Love and Loss in Modern China..
🖊️... இரவுத் தென்றலின் வார்த்தைகள் (Words on the night breeze) என்பதுதான் சின்ரன் தொகுத்து வழங்கிய அவருக்கு பெருமை சேர்த்த அந்த வானொலி நிகழ்ச்சி.
🖊️... வானொலி நிகழ்ச்சியில் கடிதங்கள் மூலமாகவே சீனப் பெண்கள் பலர் சின்ரனிடம் பேசியிருந்தனர்.