மினிபஸ்.
காலங்காலமாக தாங்கள் வசித்த நிலப்பரப்பை விட்டு வேறொரு இடத்திற்கு செல்வது புலம்பெயர்தல் எனப்படும். புலம் என்ற சொல்லிற்கு தமிழில் பல அர்த்தங்கள் இருந்தாலும் இடம் என்ற பொருள் இங்கு பொருந்தும். ஓரிடத்தை விட்டு இடம் பெயர்வது தனி மனிதராக இருக்கலாம். அல்லது குடும்பத்தோடு குழுவோடு இனத்தோடு கூட்டாக இருக்கலாம். கூட்டாக இடம்பெயர்வது திரள் புலம்பெயர்வு எனப்படுகிறது. மனித நாகரீகமே இத்தகைய புலம்பெயர்தலால் நிகழ்ந்திருக்கிறது. ஆரம்பகால திரள் புலம்பெயர்விற்கு இயற்கை பேரிடர்கள் அடிப்படையாக இருந்தது. பிறகு அடிமைத்தனம், இன வெறுப்பு, போர்கள், மற்றும் பொருளாதார வீழ்ச்சியை அது சார்ந்திருந்தது. சுருங்கச் சொன்னால் வாழ்வாதாரம் பாதிக்க இன்றைய திரள் புலம்பெயர்வு நிகழ்கிறது. புலம் பெயர்தல் வெறும் செயல் அல்ல, நன்கு வளர்ந்த மரத்தை வேறுடன் வேறிடத்தில் நட்டு வைப்பதற்கு நிகரானது. இந்த குறும்படத்தில் ஒரு குழு அவ்வாறு புலம் பெயர்கிறது.
ஈராக் நாடுதான் குறும்படத்தின் கதைக்களம். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சிலர் தங்கள் பூர்வீக இடத்தைவிட்டு வேறிடத்திற்கு செல்ல ஒரு சிறிய பேருந்தில் (மினிபஸ்) புறப்படுகின்றனர். துரதிஷ்டவசமாக அந்த மினிபஸ் பழுதாக அதை தள்ளிச் செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கிடையில் இராணுவ சோதனையும் நடைபெற அதிலிருந்து தப்பித்து அவர்கள் ஓரிடத்தை அடைகின்றனர். அங்கும் நிலைமை மோசமாக இருக்க எல்லையைத் தாண்ட முடிவு செய்கின்றனர். எல்லை பலத்த பாதுகாப்பு நிறைந்த தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்க, பழுதான மினிபஸ் சகிதம் பலத்த காவலுக்கு மத்தியில் அவர்களது புலம்பெயர்தல் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.
எங்கு செல்கிறோம், எதற்கு செல்கிறோம், எதனால் செல்கிறோம் என தெரியாது பயணத்தை ருசிக்கும் சிறுவன், மினிபஸ்ஸை கையாளும் பெண்மணி, தேர்ந்த ஒளிப்பதிவு, அத்தனை இன்னல்களிலும் இறை நம்பிக்கையை கைவிடாத தன்மை, என குறும்படத்தில் ரசிக்க வைக்கும் முகங்களும் காட்சிகளும் தன்மைகளும் இருக்கின்றன. சதாம் உசைனின் ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின், ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின், ஒரு இனத்திற்கு எதிரான அடக்குமுறையே இதன் மையக்கரு. இது அப்படிப்பட்ட தலைமையை கொண்டிருக்கும் எல்லா நாட்டிற்கும் ஏகப்பொருந்துகிறது. புலம் பெயர்தல் என்ற வலியை இந்த குறும்படம் நமக்கு உணர்த்துகிறது.
- Minibus
- Directed by - Aboozar Heidari
- Written by - Aboozar Heidari
- Country - Iraq
- Language - Arabic
- Year - 2021.