காலேறி கடிகையாரும், மீனெறி தூண்டிலாரும்.
அடம்பிடிச்ச "அரைக்காபடி" வருவான் அவன் கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன்... என சொல்லி வளர்க்கப்பட்ட சிறுவர்களில் அடியேனும் ஒருவன். தெளிவாக அரை+கால்+படி = அரைக்கால்படி. ஒருகாலத்தில் எங்கள் கிராமத்து சிறுவர்களை பயங்கொள்ளச் செய்யும் பூச்சாண்டியாக விளங்கியவர். குட்டையான உருவம், மழித்த தலை, போலியோ தாக்கப்பட்ட ஒருகால், கருத்த தடித்த தேகம், என உருவத்தை வைத்து அவருக்கு அப்பெயர் வந்தது. உருவப் பெயர். கழிவறை செல்லக் கூட அடையாள அட்டை தேவைப்படும் காலம் வருவதற்கு முன்பே மறைந்துவிட்ட அவரது உண்மையான பெயர் இதுவரை தெரியாது. தனது உருவத்தை வைத்து வேடிக்கையாக குழந்தைகளை அச்சுறுத்துவதோடு, ஒற்றைக்கால் ஆதாரத்தில் அவ்வளவு நேர்த்தியாக வரப்புகளுக்கு அண்டை போடுவதில் அரைக்கால்படியை விஞ்ச ஆளில்லை. மேலும் கதிரடிக்க, மூட்டைத் தூக்க, வேலி கட்ட, விறகு பிளக்க, எறு அல்ல என எல்லா எடுபிடி வேலைக்காகவும் அவர் புகாத இடமில்லை. அரைக்காபடி வெறும் பட்டப் பெயர் மட்டுமல்ல, அது ஒருவரின் அடையாளம். அவரைப்போல இல்லுளி, செரட்டை, பாம்பன், செலுப்பி என விசித்திரமான பெயர் கொண்ட சிலரும் எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். சரி.. அரைக்கால்படியும், ஏதோ காரணத்தால் தன் பெயர் மறந்த மற்றவர்களும் நினைவுக்கு வர காரணம் என்ன?..
அணிலாடும் மூங்கிலார், குப்பைக் கோழியார் என பாடலில் வரும் உவமையினால் பெயர் பெற்ற சங்ககால புலவர்கள் சிலரைப் பற்றி முன்பு பார்த்திருக்கிறோம் அல்லவா! அவர்களின் தொடர்ச்சியாக இருப்பவர்களைப்பற்றி எழுத விழைகளில் கிராமத்தில் இருப்பவர்கள் நினைவுக்கு வந்தனர். அவர்கள் போகட்டும் விடுங்கள்... உவமையினால் பெயர்பெற்ற சங்ககால புலவர்கள் வரிசையில் இருக்கும் காலெறிகடிகையாரையும், மீனெறி தூண்டிலாரையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
காலெறி கடிகையார்
"கரும்பின் காலெறி கடிகைக்"
என்ற உவமை மூலம் இவருக்கு இந்த பெயர் வந்தது. கரும்பின் அடிப்பகுதியைப் போன்று சுவையானது என பொருள் கொள்ளலாம்.
The cubes of sugarcane cut from the sweet end.
சரி! கரும்பின் அடிப்பகுதியைப் போன்று சுவையானது எது? உவமை என்றால் மறைவான பொருள் இருக்கும் அல்லவா!.
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை
தலைவியின் வாயில் ஊறிய நீர்.
the sweet water that secretes in the shining teeth is a fancy way of referring to saliva!...
கொஞ்சம் 'ஏ'டா கூடமான பாடலாக இருக்குமோ?...
இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே.
- சங்க இலக்கியம் - குறுந்தொகை
- பாடல் - 267
- இயற்றியவர் - காலெறி கடிகையார்
- திணை - பாலை
இந்த பாடல் தலைவன் தனது நெஞ்சத்துடன் பேசுவதாக அமைந்தது. அப்படியென்றால் புலம்பல் வகையறா. தலைவன் தலைவியை பிரிந்து பொருள் தேட செல்லும் நிலையில் இருக்கிறான். பொருள் தேடுதல் என்பது வாழ்வின் ஒருபகுதி. அது போகத்தான் வாழ்க்கையின் மீதி. அதுபோல் இளமை என்பதும் ஒரு பகுதி. இரண்டிற்கும் காலம் என்பது நில்லாது. பொருள் தேட சென்றால் தலைவியுடன் இருக்க முடியாது. குறிப்பாக கரும்பின் அடிப்பகுதியை கடிப்பதைப் போன்று தலைவியின் உதட்டை சுவைத்து கிடைக்கும் நீர் கிடைக்காது. வள்ளுவரும் தன் பங்கிற்கு வாயிலுறிய நீரை
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
என காதற் சிறப்புரைத்திருக்கிறார். என்ன செய்வது தெரியாது
நெஞ்சே!
நாள்தோறும் தவறாமல் வரும் வழக்கத்தையுடைய கூற்றுவனின் இரக்கமில்லாத கொலைத் தொழிலை நன்கு அறிந்தவர்கள்.... பெரிய இடத்தை உடைய இந்த உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் ஓரிடத்தில் ஒட்டுமொத்தமாக கிடைத்தால் கூட.... கரும்பின் அடிப்பகுதியில் வெட்டப்பட்ட துண்டத்தை போல சுவையுடைய, தூய்மையான பற்களில் ஊறிய குற்றமற்ற இனிமையான நீரையும், திரண்ட சிறிய வளையல்களையும் உடைய தலைவியுடன் தனித்திருக்க, பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு தான் மட்டும் பிரிந்து செல்ல மாட்டார்கள். என தலைவன் இந்த பாடலை பாடியிருக்கிறான்.
- இரு - பெரிய
- கடிகை - துண்டு
- அயில்தல் - உண்ணுதல்
- எயிறு - பல்
- உறல் - வருதல்
கரும்பின் அடிப்பகுதி சுவையை இளமையான தலைவியின் உழிழ்நீரோடு கோற்று உவமையால் பெயர் பெற்ற காலேறி கடிகையார் எப்பேர்ப்பட்ட ரசனைக்காரர் பாருங்கள்...
அடுத்ததாக
மீனெறிதூண்டிலார்
யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.
என்ற குறுந்தொகை பாடலில் வரும் மீனெறிதூண்டில் என்ற உவமையால் இவருக்கு பெயர் கிடைத்திருக்கிறது.
- சங்க இலக்கியம் - குறுந்தொகை
- பாடல் - 54
- இயற்றியவர் - மீனெறிதூண்டிலார்
- திணை - குறிஞ்சி
மீனெறிதூண்டில் என்பது மீன் பிடிக்கும் தூண்டில் தான். அந்த துண்டிலில் மீன் சிக்கியவுடன் அதை பிடிப்பவர்கள் தூண்டிலை வேகமாக தூக்குவார்கள். அதுபோல தோட்டத்தில் காவல் காப்பவன் விட்ட கவண் கல்லின் ஒலியைக் கேட்டு யானை வளைத்து தின்று கொண்டிருந்த மூங்கில் வேகமாக நிமிரும். களவெழுக்கத்தில் ஈடுபட்டு தலைவியை அனுபவித்த தலைவன் அவ்வாறு வேகமாக விலகிச் சென்றான். தலைவியின் மகிழ்ச்சியும் அவ்வாறு வேகமாகச் சென்றது. மீனெறிதூண்டிலார் எதனை எதனோடு முடித்து வைத்திருக்கிறார் பாருங்கள். சரி! பாடலுக்கு வருவோம்.
தலைவனும் தலைவியும் காதலில் களவொழுக்கத்தில் இருக்கிறார்கள். அவ்வபோது கூடி மகிழ்கிறார்கள். Will you marry me என தலைவன் கேட்க தொடங்கிய அவர்களது காதல், When will you marry me தலைவி கேட்க முடிவடைகிறது. பல காதல்கள் இப்படித்தான் When ல் தொடங்கும் கேள்வியால் பிரிந்துவிடுகிறது. திருமண பேச்சை எடுத்தவுடன் தலைவன் தலைமறைவாகிறான். அவனை காணாததால் அவனோடு சேர்ந்து தனது எல்லா மகிழ்ச்சியும் போனது என தலைவி இந்த பாடலில் தன் தோழியிடம்
தோழி!..
நான் மட்டும்தான் இங்கிருக்கிறேன். முன்பு என்னோடு உடனிருந்த மகிழ்ச்சி இப்போது இங்கு இல்லை.... அது மீன் பிடிப்பவர்கள் மீன் தூண்டிலில் சிக்கியவுடன் அதனை உணர்ந்து விரைவாக தூக்குவதைப் போல, தினைப்புனம் காப்பவர்கள் கவண் வில்லின் கல்லுக்கு அஞ்சி விரைவாக காட்டுயானை விட்ட மூங்கில் உள்ள காட்டுக்குரிய தலைவனோடு சென்று ஒழிந்தது...
- என கூறுகிறாள்.
- ஏனல் - தினைப்புனம்
- கழை - மூங்கில்
- நிவத்தல் - உயர்தல்
சொல்லப்போனால் இந்த பாடலும் புலம்பல் பாடல்தான். I am here only. But my heart is with him என்ற தலைவியின் புலம்பல்.
உவமையுடன் அமைந்த இலக்கிய பாடல்கள் தனி ருசி ரகம். அதில் காதலும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம். உவமை என்பது பாடலுக்கு இனிமையை மட்டுமல்ல புலவர்களுக்கு பெயரையும் தந்திருக்கிறது. உவமையினால் பெயர் பெற்ற புலவர்கள் வரிசையில் மீதமிருப்பவர்களைப் பற்றி காலம் கனிந்தால் பார்க்கலாம்.