அஸீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ்.
மங்கலான கண்ணும் ஊளை மூக்கும் கொண்ட சிறுவனாக இருந்த காலத்தில் வீட்டைத் தலைகீழாகப் புரட்டிக்கொண்டிருந்த போது 'அஸீஸ் பே' அலமாரியின் மேல்தட்டில் போட்டிருந்த புழுதி படிந்து மறக்கப்பட்டிருந்த தம்புராவைக் கண்டெடுத்தான். அதற்குப் பிறகு அவனைவிட இரு மடங்குப் பெரிதாக இருந்த அந்த விநோதமான விளையாட்டுச் சாமானை அவன் கீழே வைக்கவேயில்லை... தம்புரா அவன் வாழ்வின் ஒன்றாகிப் போகிறது.
இளைஞனான அஸீஸ் பே, தான்தோன்றி, மூர்க்கன், சுயநலன் கொண்டவன். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப் படுவதற்காகவே படைக்கப் பட்டவர்கள் என்று செருக்குடன் திரியும் அவனை "மரியத்தின்" மேலுள்ள மாளாக் காதல் தடுமாறச் செய்கிறது. வேலையைத் துறக்கச் செய்கிறது. பெற்றோரை இழக்கச் செய்கிறது. இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை சாகசப் பயணம் செய்ய வைக்கிறது. அஸீஸ் பே என்ற ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரணச் சம்பவங்களையே மையமாகக் கொண்ட நாவலில் நாயகன் தம்புராவை மீட்கும் தருணங்களில் பாடும் பாடலின் வரிகள் மயிலிறகு பக்கங்களாய்...
அழகான உன் ரோஜா தோட்டத்திற்கு
வருவது யார்?
உன் பாதங்களை முத்தமிட
மன்றாடுவது யார்?...
வெளிறி மங்கிப்போயிருந்தாலும்
இன்னும் நீ ஒரு ரோஜா இதழாள்.
என்னை கடவுள் ஆசிர்வதித்திருந்தால்
அது நீயே!...
கறுத்த விழிகள்
என் ஓலத்தை
உற்றுப் பார்ப்பதில்லை?
ஆறுதல் அளிக்க வா,
கன்னம் குழிந்தவளே...
உனக்காகக் காதலால் கண்ணீர் சிந்தி இப்போது களைத்து விட்டது;
பொறுமையுடன் தணிந்துவிட்டது அது இப்போது...
நீ என் வேட்கையின் மலர்;
எனது மதிப்பார்ந்த மகுடம்.
உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று
உனக்கே தெரியாது...
இந்த இரவின் துயரில்
என் காதலை நான் மூடிப் போர்த்துவேன்.
நீ போய்விட்டாய்
இப்போது எங்கே
உன்னைக் கண்டு மன்றாடுவேன்...
வார்த்தைகளால் உண்டாக்கப்படும்
காயங்களைவிட
வேதனையான காயம் வேறில்லை.
இதயத்தின் காயத்திற்கு இந்த உலகில்
எந்த மருந்தும் இல்லை.