அந்த நாளின் கசடுகள்.

வ்வொரு மனிதனும் வாழ்க்கை என்ற முரட்டுக் குதிரையில் சவாரி செய்தே ஆகவேண்டும். இந்த வாழ்க்கை குதிரை விசித்திரமானது, விந்தையானது, யாருக்கும் அடங்காதது, சண்டித்தனம் நிறைந்தது, அவ்வபோது அமைதியானது. பஞ்சோந்தியைப்போல அதன் இயல்பு மாறிக்கொண்டேயிருக்க அதனோடு இணங்கிப் போகாதவர்களை தூக்கியெறியவும், மனித நிலையிலிருந்து கீழே தள்ளிவிடவும், விளிம்புநிலையில் நிறுத்தவும் அது தவறுவதில்லை. சவாரி செய்பவனின் கையில் கடிவாளம் இருக்க அதை கையாளத் தெரிந்தவனே திருப்திகரமாக வாழ்ந்து முடிக்கிறான். இருபதாம் நூற்றாண்டின் ஐரிஸ் இலக்கியத்தின் முன்னோடியான மார்டீன் ஓ கைனின் "அந்தநாளின் கசடுகள்" என்ற குறுநாவல் அத்தகைய குதிரை சவாரியில் கடிவாளத்தை அதன் போக்கில் விட்ட ஒருவனின் கதையைக் கொண்டிருக்கிறது. 

காஃப்காவின் "K" வைப்போல "N" என்ற பெயர் கொண்டவனே இந்த குறுநாவலின் நாயகன். அவன் ஒரு அரசாங்க ஊழியன். தொலைக்காட்சியில் பகுதிநேர வர்ணனை செய்பவன். ஒரு சனிக்கிழமை அலுவலகத்திலிருக்கும் போது அவனது மனைவி இறந்த செய்தி தெரியவருகிறது. மனைவிக்காக சவப்பெட்டி ஒன்றை தயார் செய்யும் பொருட்டு வீட்டிற்கு செல்லும்போது அவனது பணப்பை திருடு போகிறது. தன்னிடம் இருந்த பணம் தொலைந்துபோக வெறுங்கையுடன் வீட்டிற்கு செல்வதை அவன் தவிர்க்கிறான். அடுத்தது என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது அவன் சாலைகள், தெருக்கள், பூங்கா, மது விடுதி, குதிரைப் பந்தையம், கடன் வழங்கும் சங்கம், தோழி ஒருத்தியின் வீடு, தேவாலயம், துறைமுகம் என சுற்றுகிறான். அங்கு தெரிந்த மற்றும் தெரியாத சிலரை சந்திக்கிறான். அவன் அன்றைய நாளின் நிகழ்வுகளால் அதன் போக்கால் கட்டுப்பாடின்றி இழுத்துச் செல்லப்படுகிறான். அலைந்து திரியும் அவனின் முப்பது மணிநேர கதையே இந்த குறுநாவல். சொல்லப்போனால் சிதைவின் முனையில் இருக்கும் குழப்பமான மனம் ஒன்று தன் சிக்கலை அவிழ்க்க முயலும் கதையே "அந்த நாளின் கசடுகள்". தனக்கு வெளியே இருக்கும் ஏதோ ஒன்றை தேடுகிற அலையும் வேதனையின் பாடல் அது.

  • அந்த நாளின் கசடுகள்
  • மார்ட்டீன் ஓ கைன்
  • தமிழில் - ஆர்.சிவக்குமார்
  • காலச்சுவடு பதிப்பகம். 

கதையின் நாயகன் N ஆரம்பத்தில் பொருப்பில்லாத ஒருவனாக தோன்றுகிறான். திக்கற்ற தேடலில் அவன் பெறும் அனுபவங்களும் எண்ணங்களும் வாழ்க்கையில் தத்துவத்தை கொண்டதாக இருக்க கடைசியில் அவன் எல்லோரைப் போல ஒருவனாக மாறிப் போகிறான். சாகசம் எதுவும் செய்யமல் அவன் சாதாரணமாகவே கதையில் உலவுகிறான். N எல்லாவற்றாலும் அலைக்கழிக்கப்படுகிறான். முதலில் மனைவி இறந்த அதிர்ச்சி, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாத செயல் முடக்கம், தன் மனைவியின் சகோதரிகளிடமிருக்கும் வெறுப்பு, அவனது சக பணியாளர்களோடு ஒட்டாத மனோபாவம், வேலையின் மீதுள்ள வெறுப்பு, அதீத பாலியல் வேட்கை என இவற்றை கொண்டவனாக இருந்தாலும் எல்லோரைப் போல தொடர்ந்து இருக்க வேண்டியவன் அவன். அதைத்தவிர வேறோன்றும் இல்லாதவன். நம்பிக்கை என்பது எல்லா வழிகளிலும் இருக்கிறது. எல்லோருக்கும் இருக்கிறது. குதிரைப் பந்தையத்தில் பணம் கட்டும்போதும், பூங்காவில் கிட்டும் ஒரு சந்திப்பிலும், எதிர்பாராத விதமாக கடக்கும் ஆன்மீக விவேகம் கொண்டவர்களிடமும், இறுதியாக தனக்கு விடிவைத் தந்ததாக நினைக்கும் துறைமுகத்தில் சந்திக்கும் மாலுமி உட்பட N க்கும் நம்பிக்கை தரும் நிகழ்வுகள் பல இக்கதையில் இருக்கிறது. 

அவனுக்கிருந்த இந்தப்‌ புது உணர்ச்சியைப்‌ பற்றி அந்த ஆளிடம்‌ பேசலாமென்று N திரும்பினான்‌. அனால்‌ அவன்‌ காணாமல்‌ போயிருந்தான்‌. தன்‌ சுவிசேஷங்களில்‌ கிறிஸ்து சில சமயங்களில்‌ தன்‌ சீடர்களுக்குத்‌ தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் என்பதையும்‌ அதே வேகத்தில்‌ அவர்‌ மறைந்தார்‌ என்பதையும்‌ N நினைவு கூர்ந்தான்‌. தாகம்‌ கொண்ட ஒருவனுக்கு மது வாங்கிக்‌ கொடுப்பது ஆண்டவரின்‌ திட்டத்தில்‌ ஒரு பகுதிதான்‌ என்பதையும்‌ அவன்‌ நினைவுபடுத்திக்கொண்டான்‌... 

புத்தகத்திலிருந்து.

கொச்சையான பேச்சு, முறை சார்ந்த வழக்கு, எள்ளல், இலக்கியநடை என எல்லாம் கலந்து எதார்த்த நடையில்  இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. Black Humor எனப்படும் நகைச்சுவை தொனியை நாவல் முழுவதும் காணலாம். உறவுகளை துச்சமாக நினைக்கும் முற்போக்கு வாழ்க்கை, அரசாங்க வேலையில் இருக்கும் அபத்தம், திருச்சபை பாதிரியார்களின் தில்லுமுல்லுகள், அதிகார வர்க்கத்தின் அர்த்தமற்ற நடைமுறைகள் என அயர்லாந்தில் நிலவிய அன்றைய சூழலை நாவல் ஒரு பிடிபிடித்திருக்கிறது. அது இன்றைக்கும் ஏகப் பொருந்திப் போகிறது. குடும்பம் இல்லாத, ஆதரவாக சாய்வதற்கு ஒரு தோள் கிடைக்காத, குழப்பத்திற்கு ஆளான, வெளிஉலகத்தால் சபிக்கப்பட்ட ஒரு மனிதனைப் பற்றிய புனைவாக இந்த நாவல் இருந்தாலும், ஐரிஸ் பேசும் அயர்லாந்தில் வசிக்கும் சாதாரண மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கொண்டிருக்கிறது. 

துளிகள்...

🖊️... மார்டீன் ஓ கைன் 1906 ஆம் ஆண்டு மேற்கு அயர்லாந்தில் பிறந்தார். அந்நாட்டின் தேசிய அந்தஸ்தாக கருதப்படும் ஆசிரியராக பணிபுரிந்தார் (அரசியல்வாதிகளை விட ஆசிரியர் பதவி அங்கு மதிப்பானது) அரசின் மொழிபெயர்ப்பாளராகவும் விரிவுரையாளராகவும் பதவி வகித்தார். ஐரிஸ் குடியரசு இராணுவத்தில் இருந்ததால் இரண்டாம் உலகப்போரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். 1970 -ல் மறைந்தார். இவர் தன் படைப்புகளை தாய்மொழியான ஐரிஸ் மொழியிலேயே எழுதினார்.

🖊️... ஓ கைனின் "Fuioll Fuine" என்ற இந்த நாவலை "ஆலன் டிட்லி" என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அதனை "ஆர். சிவக்குமார்" தமிழுக்கு தந்திருக்கிறார்.

🖊️... "வசை மண்" என்ற ஓ கைனின் பிரபல நாவலும் தமிழில் ஆர். சிவக்குமார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

🖊️... டான்‌ நதிக்கரை அறுவடை நாள்‌ பற்றிய மாக்சிம்‌ கார்க்கி கதை ஒன்றின்‌ பிரெஞ்சு மொழிபெயர்ப்பை நடமாடும்‌ பழைய புத்தகக்‌ கடை ஒன்றில்‌ வாங்கிய அந்தக்‌ கணமே தன்‌ வாழ்க்கையின்‌ முக்கியத்‌ திருப்புமுனை என்று கூறியவர் மார்ட்டீன் ஓ கைன். 

🖊️... வாயாடிச் சமூகம் என பெயர்பெற்ற ஐரிஸ் சமூகத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே பதிவு செய்தவர்  மார்ட்டீன் ஓ கைன். 

🖊️... N -ஐ போல J என்ற ஓரேயொரு எழுத்தை பெயராகக் கொண்ட பாத்திரத்தை மையமாக வைத்து மார்ட்டீன் ஓ கைன் சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். அவரது கதாபாத்திரங்கள் பெரும்பான்மையாக இத்தன்மையிலேயே இருக்கும்.