84 ஆண்டுகளாக.

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் எத்தனை ஆண்டுகள் அங்கு பணிபுரிவோம்?.. அதிகபட்சம் 5 வருடங்கள், 8, 10,15, 20. நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் "இரண்டு வருடங்கள்தான் அதற்குள் நாம் வேலை செய்யும் நிறுவனம் நமக்கு அலுத்துவிடுகிறது, இல்லையென்றால் நாம் வேலை செய்யும் நிறுவனத்திற்கு நம்மை அலுத்துவிடுகிறது". வேறிடம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அரசாங்க வேலையை எடுத்துக் கொண்டால் 20 வயதில் ஒருவர் வேலைக்கு சேர்ந்தால் 60 வயதில் அவர் ஓய்வு பெற்றுவிடுவார். அப்படி பார்த்தால் 40 வருடங்கள் கொஞ்சம் கூட குறைச்சல், குரைத்தலும் இருக்கலாம். ஒருவர் 84 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது சாதனையாக இருக்கும் அல்லவா!.. ஆம்! ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக பணிபுரியும், கின்னஸ் சாதனை படைத்த ஒருவர் இருக்கிறார். அவர்தான் பிரேசில் நாட்டை சேர்ந்த "வால்டர் ஓர்த்மேன் (Walter Orthmann)". 

வால்டர் ஓர்த்மேன் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி பிரேசிலின் சாண்டா கேடரினாவில் உள்ள Renaux S.A. என்ற ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் கப்பல் ஏற்றுமதி பிரிவில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 15. உலகப்போரினால் உலக பொருளாதாரமே பதுங்கு குழியில் இருக்க, சிறுவயதில் வேலைக்கு செல்லும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. வால்டர் துடிப்பானவர், எப்போதும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர். Sincere என சொல்லக்கூடிய நேர்மையும் அவருக்கு உண்டு. அதனால் குறுகிய காலத்தில் விற்பனை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். பிறகு விற்பனை பிரிவில் மேலாளராக உயர்த்தப்பட்டார். 1950 களுக்கு பிறகு அவர் உலகமெங்கும் பயணிக்கத் தொடங்கினார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறையையும் கற்றார். அது அவரது விற்பனை மேலாளர் பதவிக்கு பெரிதும் உதவியது. தன் வாடிக்கையாளர்களை நண்பர்களாக அனுகினார். நிறுவனத்திலும் நல்ல பெயர் கிடைத்தது. தன் சக ஊழியர்கள் தோளிலும் கை போட்டார். மேலும் மேலும் உயர்வு என இருக்க ஒருகட்டத்தில் அந்நிறுவனத்தின் Icon என்ற அடையாளச் சின்னமாகினார். பிறகு வந்த காலங்களில் அவருக்கு ஓய்வு கொடுக்க அவரது நிறுவனம் நினைக்கவே இல்லை. அவரும் ஓய்வெடுக்கவேயில்லை. இந்த வருடம் அதாவது 2022 ஜனவரி மாதத்தோடு அந்த நிறுவனத்தில் வால்டர் வேலைக்கு சேர்ந்து 84 வருடங்கள் 9 நாட்கள் அனது என கணக்கிடப்பட்டு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. 

கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது 100 வது பிறந்தநாளை உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாது தான் பணிபுரியும் நிறுவனத்தாருடனும் வால்டர் கொண்டாடினார். அவர் நல்ல உடல் நிலையோடும் நியாபக சக்தியுடனும் இருக்கிறார். தினமும் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு எப்போதும் போலவே அலுவலகம் சென்று வருகிறார். மேலும் தனது அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் காஃபி கடைக்கு செல்லவும் அவர் தவறுவதில்லை.

நான் அதிகமாக திட்டமிடுவதில்லை. நாளையைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாளை என்பது மற்றொரு நாளாக இருக்கும். அதில் நான் எழுவேன், எழுந்து உடற்பயிற்சி செய்வேன், வேலைக்குச் செல்வேன், வேலையில் பிஸியாக இருப்பேன் அவ்வளவுதான் எனது வாழ்க்கையின் ரகசியம் என இயல்பாக சொல்லும் வால்டர்,

உங்களுக்கு உந்துதலாக இருக்கும் மனதிற்கு ஆறுதலான நிறுவனத்தில் வேலைக்கு சேருங்கள் "you need to get busy with the present, not the past or the future. Here and now is what counts. So, let’s go to work!"  என தொழில்முறை ஆலோசனையும் கூறியிருக்கிறார்... 

துளிகள்...

✏️... வால்டர் பணிபுரியும் நிறுவனத்தின் தற்போதைய பெயர் ReneauxView பிரேசிலின் பழமையான மற்றும் முக்கியமான நிறுவனத்தில் இதுவும் ஒன்று. 

✏️... இதற்கு முன்பு 2019 ஆம் வருடம் வால்டர் கின்னஸ் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. 

✏️... பிரேசில் நாட்டில் பிறந்தாலும் வால்டர் ஜெர்மானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.