இன்னும் இங்கே.

ரு வீட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து அதனுடன் வசித்து அதிலேயே தளர்ந்து நம் வாழ்க்கையை முடிக்கிறோமா? என்றால், நிச்சயம் இல்லை எனலாம். தேவைகளுக்காக இடம்பெயர்ந்துகொண்டே இருக்க நம்மோடு நம் வீடும் மாறிக்கொண்டே வருகிறது. ஆனாலும் நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு வீடு என்பது நினைவுகளாக இருக்கும். இடம், பொருள், வசதி வாய்ப்புகள், இவற்றை தவிர்த்து 'என்னதான் இருந்தாலும் அந்த வீட்டைப்போல வருமா!'... என அந்த வீட்டில் ஏதோ சில விஷயங்கள் இருக்கும். 

ஒரு வீட்டை வீடாக மாற்றுவது அத்தகைய உள்ளிருக்கும் அந்த ஏதோ விஷயங்கள்தான். 

சமீபத்தில் கிழக்கு கடற்கரையோரம் பயணிக்க நேர்ந்தது. சிதம்பரத்தை தாண்டிச்செல்லுகையில்  விரிவாக்கப் பணிக்காக சாலையோரம் இருந்த பல வீடுகள் இடிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. சுமார் 20 கி.மீ தூரம் கற்களும் ஓடுகளும் சன்னல் சட்டங்களுமாக குப்பையைப்போல் இருந்த அந்த இடிக்கப்பட்ட வீடுகளை வருத்தத்துடன் கடக்க நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடியில் 300 வருட பழமையான போர்த்துகீசியர்கள் புழங்கிய கைவிடப்பட்ட வீடுகளையும் காண முடிந்தது. அழிக்கப்பட்டிருந்தாலும், கைவிடப்பட்டதாக இருந்தாலும் அப்படிப்பட்ட வீடுகளில் பல கதைகளும் நினைவுகளும் இருக்கும். Short Documentary வகையை சேர்ந்த இந்த பத்து நிமிட குறும்படமும் அத்தகைய கைவிடப்பட்ட வீடுகளைப்பற்றிய அனுபவத்தையே தருகிறது. 



தைவானில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் இந்த குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் நானூற்று என்பது குடும்பங்களைக் கொண்ட அந்த கிராமத்தில் தற்போது வெறும் ஆறு குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. முற்றிலும் கைவிடப்பட்ட அந்த கிராமத்தில் இடிந்துவிழும் நிலையிலும் தூசு படிந்த நிலையிலும் இருக்கும் வீடுகளை ஆராய்வதன் மூலம் அங்கு வசித்த குடும்ப உறவுகளின் இன்ப துன்ப நினைவுகள் புரட்டிப் பார்க்கப்படுகிறது. தேர்ந்த புகைப்படம் போல இருக்கும் குறும்படத்தின் நகராத காட்சியமைப்புகள் அந்த வீடுகளின் வெறுமையை உணர்த்துகிறது. கைவிடப்பட்ட வீடுகள், அந்த வீட்டில் இருக்கும் சுவர்கள், கதவுகள், சன்னல்கள், உடைந்த கண்ணாடிகள், படங்கள், கம்பளிகள், சுவட்டர் போன்ற துணிகள், பரிசு பொருட்கள் , விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள், ஒரு நாய், ஆமை, மற்றும் எதுவந்தால் என்ன "இன்னும் இங்கே (Still Here)" என அங்கேயே வசிக்கும் சில முதியவர்களின் நேர்காணல்கள் அனைத்தும் இந்த குறும்படத்தில் இணைந்து கடந்தகால நினைவுகளுக்கு மரியாதை செய்கிறது. 

STILL HERE 
Directed by - Sean Wang
Cinematography - Zach Stoltzfus
Music by -  Breton Vivian
Sound by - Michael O' Connor
Country - USA
Language - Mandarin
Year - 2020

தனது உறவின் வேரைத் தேடிய இயக்குனரின் இந்த சிறிய ஆவணப்படம்,  இது நான் பிறந்த கிராமத்து வீடு... குடிசையாக இருந்தாலும் இங்குதான் நிம்மதி இருந்தது... வாடகைதான் ஆனாலும் மகிழ்ச்சிற்கு குறையிருக்காது... என நம் மனதிலும் இருக்கும் ஏதோ ஒரு வீட்டின் உள்ளிருக்கும் விஷயங்களையும்  சீண்டிப் பார்க்கிறது. ஒரு வீட்டை வீடாக மாற்றுவது அத்தகைய உள்ளிருக்கும் அந்த விஷயங்கள்தானே!.