காட்டிற்கு ராஜா.
'காலங்காலமாக காட்டிற்கு ராஜா சிங்கம்தான் இருக்க வேண்டுமா?' என யாரோ தூண்டிவிட, ஒரு அழகான காட்டில் வசிக்கும் மிருகங்களுக்குள் புரட்சி வெடித்தது.
"கருத்தியல் தூண்டல்தானே புரட்சியின் ஆதாரம்".
காட்டுராஜாவை தேர்தல் வைத்து தேர்ந்தெடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.
வேட்பாளர் பட்டியலில் யானை ஒரு கட்சி, பூனை ஒரு கட்சி, புலி ஒரு கட்சி, எலி ஒரு கட்சி, ஒட்டகச்சிவிங்கி ஒரு கட்சி, கழுதைப்புலி ஒரு கட்சி, என இருக்க, தேர்தல் வாக்குறுதி என ஒன்று இருக்குமல்லவா?.. நான் ஆட்சிக்கு வந்தால்!... இதை செய்வேன், அதை செய்வேன் என ஒவ்வொரு கட்சியும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தன.
நான் ஆட்சிக்கு வந்தால்!... காட்டிலிருக்கும் அசைவ விலங்குகள் மற்ற விலங்குகளை அடித்து தின்பதை தடைசெய்து "only veg'' என்ற சட்டம் இயற்றுவேன் என கழுதைப்புலி தன் பங்கிற்கு ஒரு புதிய வாக்குறுதியை தந்தது.
முதல் பொதுத் தேர்தல் நல்ல முறையாக நடந்து முடிந்தது. அந்த காட்டிலிருக்கும் பெரும்பான்மையான சைவ விலங்குகள் கழுதைப்புலியின் only veg தேர்தல் வாக்குறுதியை நம்பி அதற்கே ஓட்டுப்போட, அது ஏகபோக வெற்றிபெற்று காட்டிற்கு ராஜாவானது. தான் ராஜாவான உடனே, நாளை முதல் காட்டிலிருக்கும் எந்த விலங்கும் மற்ற விலங்குகளை அடித்து தின்னக் கூடாது, மீறினால் மரண தண்டனை விதிக்கப்படும் என சொன்னதுபோல் சட்டத்தையும் இயற்றியது.
யாரையாவது அடித்து சாப்பிட்டால் மரணம், சாப்பிடாமல் இருந்தாலும் மரணம். வேறு வழியின்றி புலி கூட புல்லைத் தின்னத் தொடங்கியது. அதனால் அசைவ விலங்குகள் உடல் மொலிந்து பலமிழந்து போயின. குறிப்பாக அந்த காட்டில் வசித்த சிங்கத்தின் நிலைமை மோசமானது. இதனை சாக்காக வைத்து கழுதைப்புலி முதலில் சிங்கத்தை வேட்டையாடத் தொடங்கியது.
காட்டில்தான் புதிய சட்டம் இருக்கிறதே! கழுதைப்புலி எப்படி சிங்கத்தை அடித்து சாப்பிடலாம்? என்றால், சட்டம் சாமானியனுக்குதான் என்றபடி சிங்கம் மட்டுமல்லாது அசைவம் சாப்பிடாமல் மெலிந்த ஒவ்வொரு விலங்கையும் கழுதைப்புலி எளிதாக தின்று தீர்த்தது. ஒரு கட்டத்தில் அந்த காட்டில் அசைவம் சாப்பிடும் விலங்குகள் ஒன்றுகூட இல்லாமல் போக, கழுதைப்புலி வழக்கம்போல் மீதமிருக்கும் சைவ விலங்குகளையும் போட்டியாளர்கள் இல்லாமல் தின்னத் தொடங்கியது.
கதை இதோடு முடியவில்லை...
காட்டின் நிலைமை கவலைக்கிடமாக, மீதமிருக்கும் விலங்குகள் பொதுக் கூட்டத்தை கூட்டி கழுதைப்புலியை அரச பதவியிலிருந்து தூக்க முடிவு செய்தன. ஆனால் அதனை எவ்வாறு எதிர்ப்பதென செய்வதறியாது குழம்பின.
சிக்கலான அந்த காட்டின் நிலைமைக்கு காரணம் யார்? ...
சிங்கம் மட்டுமல்லாது மற்ற பெரிய விலங்குகள் இல்லாத அந்த காட்டின் நிலை இனி என்னவாகும்?...
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...