மயக்கும் குரல் ரேகா பரத்வாஜ்.

டெல்லி6 திரைப்படத்தின் 'கெண்டா ஃபூல்' பாடல், மற்றும் பர்ஃபி திரைப்படத்தின் 'பிர் லே ஆயா தில்' பாடல் இவையிரண்டும் அடியேன் அடிக்கடி கேட்கும் இந்தி பாடல்கள்.  சட்டீஸ்கர் மாநிலத்தின் நாட்டுப்புற பாடலான கெண்டா ஃபூல்  பாடலைப்பற்றி தனியே எழுதியிருக்கிறேன். அடுத்ததாக இருக்கும் பிர் லே ஆயா தில் பாடல்

முடித்துவிட்டு வா 
என்று இதயம் சொல்கிறது
முடிக்கப்படாமல் என்ன இருக்கிறது
எஞ்சியிருக்கும் 
நிறைவேறாத 
நினைவுகளைத் தவிர

என காதலின் பிரிந்த சோகம் கொட்டும் அருமையான மெலடி ரகம்.
இந்த பாடல்கள் பிடிக்க இசை ஒரு பக்க காரணமாக இருந்தாலும், பாடலின் பின்னணி குரல் ஏதோ செய்வதைப்போன்று இருக்கும்.  மதியவேளையில் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு சற்று சாய, தூங்கிவிடுவோமோ என்ற பயத்தில் இருக்கும்போது ஏற்படுமே ஒரு மயக்கம், அதைப்போன்றதொரு மயக்கத்தை தரும் குரல். அந்த குரலுக்கு சொந்தக்காரி ரேகா பரத்வாஜ். 

இந்தி சினிமாவின் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட "விஷால் பரத்வாஜின்" மனைவியே ரேகா பரத்வாஜ். ஆரம்ப காலகட்டத்தில் வீட்டில் மன திருப்திக்காக ஏதோ பாடிய அவர், தனது மூத்த சகோதரியிடம் சங்கீதம் கற்றுக்கொண்டார். பிறகு "பண்டிதர் அமர்நாத்திடம்" முறையாக சங்கீதம் கற்றார். 2002 ஆம் இவர் வெளியிட்ட  
"இஷ்கா இஷ்கா (Ishqa Ishqa)" என்ற தனி ஆல்பம் கொஞ்சம் புகழ்பெற்றது. அதற்குபின் சில வருடங்களுக்கு பிறகு தனது கணவர் இசையமைத்த "ஓம்காரா"  திரைப்படத்தில் 'நமக்' என்ற பாடலைப் பாட, அது இவரது திரைத்துறை பயணத்தின் ஆரம்பமாக அமைந்தது. டோலக்கு சகிதம் ஒலிக்கும் அந்த பாடல் மெல்ல போதையேற்றும் வகையைச் சேர்ந்தது. 2009 - ல் ரஹ்மானின்  கெண்டா ஃபூல் பாடல் அவருக்கு திருப்புமுணையாக அமைந்தது. 2011 -ல் வெளிவந்த இஷ்கியா திரைப்படத்தின் "படி தீரே" பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. அழுத்தமான கதைக்கு நடுவே சில நிமிடங்களே வந்துபோனாலும் அழுத்தமான பாடலாக அது அமைந்தது. 2015 ல் பிலிம்பேர் விருது, மிர்ச்சி விருது என பல விருதுகள் அவருக்கு கிடைக்க, இந்தி மட்டுமல்லாது பெங்காலி, மராத்தி, மலையாளம் என பல மொழிகளில் இன்று அவர் புகழ்பெற்ற பாடகியாக திகழ்கிறார். Folk என சொல்லக் கூடிய நாட்டுப்புற மற்றும் கிளாசிக் வகை பாடல்கள் என்றால் ரேகா பரத்வாஜ் வெளுத்து வாங்கிவிடுவார். சோகப் பாடல்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அத்தகைய மயக்கும் குரலுக்கு சொந்தக்காரி ரேகா பரத்வாஜ் பாடிய பாடல்களை தொகுத்து வைக்காமலா?... 

சூபி பாடலைப் போன்று ஒலிக்கும்  ஏக் கடி மற்றும் கபிரா பாடல்

கவ்வாலி வகையைச் சேர்ந்த ஹலே ஹலோ மற்றும் ரானாஜி பாடல் ,

அக்மார்க் கிளாசிக் ராம் சீதா பாடல்

ராஜ்ஜா ராஜ்ஜா - ராவணன் (காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி) 

என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. 


Click Here ➡