பொதுவெளியில்.
பொதுவெளியில் உணர்ந்தவைகள் அல்லது பொதுவெளியில் வைக்கப்பட வேண்டியவைகள் இங்கு கிறுக்கல்களாய்...
"பின்" குறிப்பு: யாரையும் குத்திக் காட்டும் நோக்கமல்ல...
எல்லாவற்றிற்கும்
மதிப்பிருக்கிறது.
ஓடாத டிவி
ஓய்ந்த மிக்ஸி
கிழிந்த பண நோட்டுகள்
நைந்த பட்டுப் புடவைகள்
உடைந்த நாற்காலிகள்
மேசைகள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
குடித்துத் தீர்த்த
சாராய புட்டிகள் இருக்க
பத்து கிராம் பத்து ரூபாய்
இருபது கிராம் இருபது ரூபாய்
ஐம்பதிற்கு ஐம்பது
நூற்றுக்கு நூறென்று
வாரும்போது உதிர்ந்த
சிக்குமுடியைக் கேட்டுக் கூட
நேற்று தெருவில் வந்தார்கள்.
அரச குளமும் மேல குளமும்
நிரம்பி வழிகிறது,
பிறப்படி வயலெல்லாம்
இடுப்பளவு தண்ணீரில்,
ஒருநாள் போதும்
ஓடம்போகியாறு உடைப்பெடுக்க,
நாராயண குட்டைக்கு
வழித்தடமேயில்லை,
இரண்டு நாள்
இம்மழை நீடிக்கும்,
இன்னமும் மூன்று புயல்
மீதமிருக்கிறது,
இவற்றிற்கு மத்தியில்
கன்னி வைத்து
காத்திருந்த சின்னானுக்கு
அதிஷ்டவசமாக
ஏழு மடையானும்
நான்கு கொக்கும் கிடைத்தது
இன்றைய பரபரப்பு செய்தியாக...
அண்டம் காக்கும்
சாமிகளுக்கானது
அடுத்தபடியாக
அகிலம் காக்கும்
ஆசாமிகளுக்கானது
கருப்பு சிவப்பு காவி
மஞ்சள் பச்சை
வெள்ளை நீலம்
வண்ணம் தாங்கிய
கட்சிகளுக்கானது
அண்டா குண்டா
சட்டி பானை
மண்வெட்டி கடப்பாரை
சின்னம் தாங்கிய
சங்கங்களுக்குச் சொந்தமானது
இவற்றையும் தவிர்த்து
அட்டை எப்படியிருந்தால் என்ன
அது கிடக்கட்டுமென
கட்டத்திலிருக்கும் தாள்களைப் புரட்டி
விடுமுறை நாட்களைத் தேடும்
குழந்தைத் தனத்திற்கு
எங்காவது ஒரு மூலையில்
ஒரு காலண்டர்
தொங்கிக் கொண்டிருக்கலாம்.
டேய்!.. டேபிள தொட
வேற யிலை போடு
தண்ணி கொண்டுவா
எக்ஸ்ட்ரா ரைஸ் ஒரு பிளேட்
ஆம்லெட் ஒன்னு
ஆப்பாயில் ரெண்டு
ஆனியன் வைடா
குருமா ஊத்துடா...
கவுச்சி வீசிய
சாப்பாட்டுக் கடையில்
பம்பரமாய்ச் சுற்றி
பரிமாறிக் கொண்டிருந்த
பதின் தொட்ட அந்த
பாலகனிடம்
புறப்படும்போது
சம்பிரதாயத்திற்காவது
கேட்டிருக்கலாம்
நீ சாப்ட்டியா..டா?... என்று...
உங்களது நிலத்தை
நீங்களே உழுது
உங்களது தானியத்தை
நீங்களே விதைத்து
உங்களது விளைந்ததை
நீங்களே அறுவடை செய்து
உங்களது உணவை
நீங்களே சமைத்து
உங்களது வயிற்றை
நீங்களே நிறைத்து
உண்டபின்
உண்டது செரிக்க
உங்களது மலத்தை
நீங்களே அள்ளும்
நிபந்தனைக்கு உட்பட்டால்
ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்
உங்களது இனமே
உயர்ந்த இனம்...
ஒரு ரூபாய் இட்லி ஆயா
ஐந்து ரூபாய் சாப்பாட்டு தம்பதிகள்
பத்து ரூபாய் டாக்டர்
பிரசவ இலவச ஆட்டோக்காரர்
பிர சவ அடக்க
மளிகை கடைக்காரர்
தண்ணீர் அளக்கும்
ஓட்டுனர்
மரம் விதைக்கும்
நடத்துனர்
விபத்தா! இதோ உதவி
சைக்கிள் கடைக்காரர்
இரத்தம் வேண்டுமா?
மில்லு ஓனர்
படிப்பு தேவையா?
வேலையில்லா பட்டதாரி
இன்னும்
பெயர் தெரியாதவர்கள்
முகம் காட்டாதவர்கள்
பலன் எதிர்பாராதவர்கள்
அவர்களுக்கும்தான் இந்த பூமி
அவர்களுக்குத்தான் இந்த பூமி...
இராமென்ன
அவனப்பன்
அன்னை
இணையான்
துணையாள்
அடியாள்
அவன் கூட்ட
வானரப் பொடியாள் உட்பட
இராம அயணத்திற்கு
சிறு கல் சுமந்த
அணிலுக்கும் சேர்த்து
ஜெய் சொன்னால் கூட
மாறிவிடவா போகிறீர்கள்?...
தடியால்
தலையுடைத்து
வாளால்
வயிறு கிழித்து
தோட்டாக்களால்
மார்பு துளைத்து
வாகனமேற்றி
உடல் நசுக்கி
ஒவ்வொருநாளும்
ஒவ்வொருவராய்
ஒவ்வொரு காரணங்களுக்காக
கொன்று குவிக்க ஒரு யுகம் காண,
சர்வாதிகாரம்
கற்றுத்தரவில்லையா?
அணுகுண்டை கையாள்வது எப்படி!..
கேட்கும்படி
சப்தமாக
புரியும்படி
பகிரங்கமாக
ஓரளவிற்கடக்கி
மித வேகத்தோடு
பழம் நுழையும் ஊசிபோல்
நாசூக்காக
நாற்றம் பிடித்த
குசு விடுவதைப் போன்றுதான்
பொதுவெளியில்
சாதி பெருமை...