மீஸான் கற்களின் காவல் - பீ.கே.பாறக்கடவு.
நான் எழுதும்போது வானவர் ஜீப்ரீல் என்னோடு இருப்பார். நான் கூடுதல் சுதந்திரத்தை அனுபவிக்கும் நிமிடங்கள் அவை. நான் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம், மேகம் வழியாக வந்து, மழை நார்களுக் இடையே இறங்கி வந்து, எரியும் வெயிலுனூடே வந்து, இரவின் கம்பளிப் போர்வைக் கட்டுடன் வந்து எப்போதெல்லாமோ வானவர் ஜீப்ரீல் எனக்கு ஒரு எழுது கோலைத் தருகிறார். ஒவ்வொரு கதை எழுதும் போதும் புதிது புதிதாய் ஒரு எழுதுகோல். உள்ளம் தொந்து பிரார்த்தனையோடு நான் எழுதுகிறேன். இப்பவும் அது தொடர்கிறது.
- பீ.கே.பாறக்கடவு
மலையாள இலக்கியத்தில் பீ.கே.பாறக்கடவு ஓர் பொக்கிஷம். அவரது குறுங்கதைகள் எழுத்துலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது மிகையல்ல. அவரது படைப்புகள் கலீல் ஜிப்ரானின் படைப்புகளுக்கு இணையானது என்பதும் மிகையில்லை. அவரது குறுங்கதைகள் கவிதைகளா? நாவல்களா? உரைநடைகளா? வாசிப்பவர்களின் வசதிக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். அவற்றில் ஒன்றுதான் மீஸான் கற்களின் காவல் என்ற குறுநாவல். தலைப்பே ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. குட்டிக் கதைகளின் சுல்தான் என அழைக்கப்படும் பாறக்கடவின் முதல் குறுநாவல் இது. அதில் மயிலிறகை வைத்து வாசித்த பக்கங்கள் இவைகள்...
தொப்புள் கொடி முதல்
மண்ணறை வரையிலான பயணத்தில்
எவ்வளவுதான் என்னை அகற்றி நிறுத்தினாலும்
நான் உன் அருகில்தான் இருப்பேன்.
உனக்கு என்னை விட்டு
வேறு ஒரு வாழ்க்கை இல்லை.
நீ நானேதான்...
இருளில் மூழ்கிய குடிசைக்குள்
பதுங்கி இருக்கலாம் என்பது
உன் மோகம்.
கத்தியின் கூர்மையான பளபளப்புடன்,
வெளிச்சமாய்
நான் உன்னைத் தேடி வருவேன்.
குடிசைக்குள் இருள் அகல்கிறது...
உனக்குக் குளிர்கிறது.
பிறகு ஒரு ஜுவாலையாக
உன் உடலெங்கும் நான் படர்ந்தேன்.
ஜுவாலையின் ஒரு உடையாய்
உன்னைப் போர்த்தினேன் நான்.
உன்னுடைய குளியல் முடிகிறது.
என்னுடைய விளையாட்டும்...
உனது பளு இப்போது என்மீது.
நீ பயணத்திற்குத் தயாராகிறாய்.
அப்போது ஒரு
மய்யித்து கட்டிலானேன் நான்
நீ பயணம் கொள்வது
என்மீதல்லவா
பயணம் தொடர்கிறது...
இன்பத்தின் உச்ச நிலையில் கண்கள் மூடி, காதுகள் மூடி உடலிலுள்ள சிறுவாசல்கள் அனைத்தையும் மூடிவிட்டாய் நீ.
நீ இப்போது என்னிடத்தில்.
ஸ்ஸ்...
தொந்தரவு செய்யாதே...
கதவைப் பூட்டி,
எல்லா ஜன்னல்களையும்
அடைத்துக் கொண்டு
அறைக்குள்
தனித்துப் பாதுகாப்பாய் நீ -
தனித்திருப்பது
எவ்வளவோ சுகமல்லவா?
மேலே,
ஆகாச விதானத்துக்கு நேராக
ஒரு வாசல் திறக்கின்றது...
நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்.
நொச்சிச் செடிகள்
உன்மீது வேர்விட வேண்டாம்.
பறவைகள் உனக்கு மேலே
பறந்து திரிய வேண்டாம்.
உறங்கு.
நீ நிம்மதியாக உறங்கு.
உனக்கு ஒரு மீஸான் கல்லாய்
நான் இதோ காவல் இருக்கிறேன்.
முடிவற்ற காவல்...