கூனம்பாறை சந்திப்பு.
பறந்து கொண்டிருக்கிற வாழ்க்கையின் நடுவே சற்று இளைப்பாற கொஞ்ச நாட்கள் கிடைத்தால் என்ன செய்வோம்?. எங்கேயாவது சுற்றுலா செல்வோம். புவியியலின்படி கடல் மட்டத்தில் நாம் வசித்துவந்தால் அந்த சுற்றுலா மரங்களும் செடிகளும் பூக்களும் பறவைகளும் விலங்குகளும் பாறைகளும் அருவிகளும் நிறைந்த உயரமான மழை கொடுக்கும் மலைவாழ் இடத்தை நோக்கியிருக்கும். இயற்கை மற்றும் இதமான சூழ்நிலை இவற்றோடு மகிழ்ச்சி என்ற எண்ண அலைகள் நிறைந்திருக்கும் அத்தகைய மலைவாழ் இடங்களுக்கு செல்லுகையில் அங்கு வசிக்கும் மக்களை பார்க்க பொறாமை ஏற்படும். எப்போதாவது வரும் நமக்கு இந்த இடம் ஆனந்தம் அள்ளிக் கொடுக்கிறதென்றால், வருடம் முழுவதும் இங்கேயே தங்கியிருக்கும் இவர்கள் கொடுத்து வைத்தவர்களே எனத் தோன்றும். ஆனால் அவர்களுக்கும் ஒருவித இயல்பு வாழ்க்கை இருக்கிறது. அது இன்பம் துன்பம் இஷ்டம் நஷ்டம் என அனைத்தையும் சார்த்து இருக்கிறது. இந்த புத்தகம் கேரளாவில் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நாவலாக கொண்டிருக்கிறது.
கேரளாவின் பீர்மேடு மலையோரப் பகுதியில், அவ்வளவாக அறியப்படாத ஒரு சிறிய நகரம் கூனம்பாறை. ஐந்துருளி பஞ்சாயத்தின் ஐந்து நகரங்களில் ஒன்று. தொலைவிலிருந்து பார்த்தால் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு, பரந்த சமவெளி, அடர்ந்த வனப்பகுதிகளையும், நாள் முழுதும் தழுவிச்செல்லும் மேகங்களையும் காண முடியும். பள்ளத்தாக்கின் வாயிலாகப் பாயும் ஐந்துருளி நதியும், மலைச்சரிவுகளில் பாயும் சிற்றோடைகளும் இறுதியில் முல்லை ஆற்றில் ஒன்றிணையும். (சர்ச்சைக்குறிய அணையுள்ள அதே முல்லை ஆறுதான்).
ஆறோடுமிடம்,
தேயிலைத் தோட்டம்,
பைன் மரங்கள்,
பல்வண்ணப் பூக்கள்,
பச்சை பசேல்.
பல கதைகளும் கட்டுக்கதைகளும் நிறைந்து வெளித்தெரியாமல் இருந்த இடம் சில வருடங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளால் அடையாளம் காணப்பட்டது. அதனால் கொஞ்சம் பரபரப்பானது.
ஒரு பள்ளிக்கூடம், புனித மேரி தேவாலயம், ஐயப்பன் கோவில், ராகினி திரையரங்கம், கள்ளுக்கடை, காவல்நிலையம், கறி கடை, காய்கடை, முகமது குட்டியின் உணவகம், குட்டாப்பி அண்ட் சன்ஸ் தேநீர் விடுதி, ஸ்டைலி குஞ்சம்மாவின் பியூட்டி பார்லர், சிறு விடுதிகள், சிறுசிறு கடைகள், அரசாங்க கட்டிடம் ஒன்று, என கொண்டதுதான் கூனம்பாறை சந்திப்பு. அவ்விடங்களே நாவலின் கதைக்களம்.
கூனம்பாறை சந்திப்பில் வசிப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் மலம்பண்டாரங்களும் மலையர்களும்தான். அதனைத் தவிர தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டிலிருந்தும் கேரளாவிலிருந்தும் இடம் பெயர்ந்த விவசாய கூலிகள் பலர் அங்கு வசித்துவருகின்றனர். அவர்களில் பஞ்சாயாத்து தலைவி நீலிமா உண்ணி, தொழில்சங்க செயலாளர் கந்தசாமி, வயர் மேன் மின்சாரம் ராஜப்பன், பாதிரியார் ரோஷன் கடுகேரி, செவிடன் செங்காலி, அவன் மனைவி ஸ்டைலி குஞ்சம்மா, அழிந்துபோன நாடக்கலை இயக்குனர் அப்பாஜி, நடிகன் கைநிக்கரை கரியாச்சன், அரசியல்வாதி ஜோக்குட்டன், காவல் துணை ஆய்வாளர் ஜனார்த்தனன், குஞ்சாக்கோ, கருணாகர்ஜீ, யானை அமறான், மருத்துவர் சாலமன், கட்சிக்காரன் தேசம், குட்டாப்பி, முகமது குட்டி, ஆசிரியர் பீட்டர் ஐயா, கோழிக்கோடன், தேவாலய வளர்ப்புநாய் ஹிட்லர், போன்றவர்கள் இந்த நாவலின் கதை மாந்தர்கள். இவர்கள் அனைவரும் நம் மனதோடு தங்கிவிடுவது நிச்சயமாகிறது.
தேர்தலை கணக்கில் கொண்டு அரசியல் பின்னணியில் கூனம்பாறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனால் மாநிலம் தழுவிய போராட்டமும் கடையடைப்பும் நடைபெறுகிறது. இந்த நாவல் அந்நாளின் கடையடைப்பில் தொடங்கி, கொரோனா என்ற பெருந்தொற்றினால் ஏற்படும் பொது முடக்கத்தில் முடிகிறது.
மதுபோதை உடல் தலத்தற்குத் தீங்கு விளைவிக்கும் என்று அனைத்து குப்பிகளிலும் எழுதிவைத்துள்ளார்கள் அல்லவா? அதைவிடத் தீங்கு விளை விப்பதுதானே இந்த மதபோதை? எனவே தேவாலயம், கோவில், மசூதி ஆகியவற்றின் முன்னால் பெரிய எழுத்தில் எழுதிவைக்க வேண்டும் “மதம் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும்" என்று.
-புத்தகத்திலிருந்து
நாவலின் அடியோட்டம் நகைச்சுவைதான். அங்கதம் என சொல்லக்கூடிய அமைப்பில் இருக்கிறது. ஆங்கிலத்தில்
Satire
The rules of satire are such that it must do more than make you laugh. No matter how amusing it is, it doesn't count unless you find yourself wincing a little even as you chuckle.
எளிதாக சொல்ல வேண்டுமானால்
நையாண்டி
நையாண்டியின் விதிகள் உங்களை சிரிக்க வைப்பதை விட அதிகமாக செய்ய வேண்டும். அரசியல் மற்றும் இயல்பு வாழ்க்கையின் நையாண்டிகளால் இந்த நாவல் நிரம்பியிருக்கிறது. முல்லை பெரியார் அணை விவகாரம், முன்னால் முதல்வர் மரணம் போன்றவை விமர்சிக்கப்படுகிறது. Malluwood என சொல்லக்கூடிய மலையாள திரைப்படங்கள் பார்ப்பதற்கு வெகு இயல்பானவை.
அதைப்போன்று ஒரு சுவாரசிய திரைப்படத்தை பார்க்கும் உணர்வை இந்த நாவல் தருகிறது.
பச்சைத் தேநீர்
பற்றாத பிடி
மஞ்சள் தாளித்த மரவள்ளி
மாட்டுக்கறி
மத்திமீன்
மண்பானை கள்
மார் பெருத்த மங்கைகள்
என சுவைகளைக் கொண்டது மலையகம். அத்தகைய சுவையை
நாவல் கொண்டிருக்கிறது. முடிவும் Happy ending என்ற சுபமாக முடிகிறது.
- கூனம்பாறை சந்திப்பு
- தம்பி அந்தோணி
- தமிழில்: ஜயசங்கர் மேனன்
- காமன் பிரஸ்.
பறந்து கொண்டிருக்கிற வாழ்க்கையின் நடுவே சற்று இளைப்பாற சுற்றுலா செல்வதுபோல, கனமான வாசிப்பிற்கு நடுவே இளைப்பாற இந்த புத்தகத்தை கையில் எடுக்கலாம்...
துளிகள்...
✏️... திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், சமூக செயல்பாட்டாளர், எழுத்தாளர் என பரிணாமங்கள் கொண்டவர் தம்பி அந்தோணி. அவரது எதார்த்தம்தான் இந்த நாவல்.
✏️... பூதந்தன் குன்னு (Devil Mountain)- நாவல்,