விளம்பர யுகம்.

து விளம்பர உலகம். சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க விளம்பரம் என்பது அவசியமாகிப் போனது. விளம்பரங்களின் முக்கிய நோக்கமே விற்பனையை அதிகரிப்பதாகும். அதற்காக நுகர்வோரைக் கவர பல யுக்திகள் கையாளப்படுகின்றன. அதில் ஒன்றுதான் விளம்பரத்தை மனதில் பதியவைத்தல். தொலைக்காட்சி என்ற ஒன்று வந்த பிறகு விளம்பர யுக்தியில் மனதில் பதியவைத்தல் என்பது மிகவும் எளிதாகிப் போனது. காட்சிகளுக்கு அடிமையாகிப்போன நாம், நுகர்வோராக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பவராக இருந்தாலும் அத்தகைய விளம்பரங்களை வேண்டாம் என்றாலும் கடக்காமல் இருக்க முடியாது. ஒரு சோதனைக்கு தொலைக்காட்சியில் ஒரு மணிநேரம் ஒரு நிகழ்ச்சியை பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அதனிடையே வரும் விளம்பர நேரத்தை அந்த ஒருமணி நேரத்தில் கழித்தால் நிகழ்ச்சி நேரத்தை விட விளம்பர நேரம் அதிகம் இருப்பதை உணரலாம். இது விளம்பர உலகம். தொலைக்காட்சியில் வரும் அத்தகைய விளம்பரங்கள் சில இது விளம்பரம்தானே, வியாபாரம்தானே, என்னமா கதைவிடுகிறான் பாருங்க, என்றில்லாமல் ரசிக்கத் தக்கவையாகவும் கலை படைப்பாகவும் இருக்கின்றன. குறும்படங்களைப் போல அழகாக இருக்கும் அவற்றில் சிலவற்றை சேமித்து வைக்கலாமே எனத் தோன்றியது. 

தந்தையின் அன்பிற்கு ஏங்கும் சிறுமி, போருக்கு சென்று திரும்பியவர்களை வரவேற்கும் ஒயின் கடைக்காரர், தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் ஒரு கால் இழந்தவர், உணவு வீணடிக்கப்படுவதை எடுத்துச் சொல்லும் முதலாளியும் அவரது வேலையாளும், அதுபோல் தனது தொழிலாளர்களுடன் சரிசமமாக பயணிக்கும் பெரும் முதலாளி, வயது ஒருபொருட்டே இல்லை என பேரப்பிள்ளைகளுடன் கூடி மகிழும் பாட்டி, தீபாவளி கொண்டாட்டத்தில் அகல் விளக்கு விற்கும் பெண்மணி,  வண்ணங்கள் எப்படியிருக்கும் என அப்பாவியாக கேட்கும் கண் தெரியாத சிறுவன், குப்பை பொறுக்கும் சிறுவன்,  எல்லோரும் ஒருபக்கம் இருக்க மருமகளுக்காக பரிந்து பேசும் மாமனார், எது நிகழ்ந்தால் எனக்கென்ன இது என் தேசமென குடியரசு நாளை கொண்டாடும் முதியவர், மற்றும் எங்களை எவராலும் பிரிக்க முடியாதென சவால் விடும் இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள், மகளது திருமணத்திற்கு வாங்கிய நகைகளில் ஒன்றை தவறாக அணிவிக்கும் தந்தை, தந்தையின் நம்பிக்கையை காப்பாற்றும் மகள், போன்றவர்களின் கதாபாத்திரங்கள், அவர்களது உணர்வுகள்,  காட்சியமைப்பு, பின்னணி இசை, பாடல்கள், மையக்கரு இவையே அந்த விளம்பரங்களில் கவர்ந்ததாக இருக்கிறது. மற்றபடி இந்த விளம்பரத்திற்கும் உண்மைத் தன்மைக்கும் நாங்கள் பொருப்பில்லை என்பது பொதுவனதாகவே இருக்கிறது. அந்த விளம்பரங்களை Playlist எனும் தொகுப்பாக இங்கு வைத்திருக்கிறேன். உங்களுக்கும் அவை பிடிக்கும் என நினைக்கிறேன்.