சங்க இலக்கியங்களில் சதைக்கறி.
மரக்கறியான காய்கறிகளைப் பற்றி அறிந்துகொண்டது போக சதைக்கறியைப் பற்றி எழுதலாமே எனத் தோன்றியது. அசைவ பிரியர்களின் அன்பான அதட்டலுக்கு இணங்க என வைத்துக் கொள்ளலாம். மாடு, பன்றி, ஆடு, கோழி, காடை, இவற்றின் இறைச்சிகள்தான் நம்மால் உண்ணப்பட்டு வருகிறது. மீன், நண்டு, இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் அசைவத்தில் வருகிறது. இதில் எதையாவது ஒன்றைப்பற்றி எழுதலாம் அல்லது இதனைக்கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை ருசியியலாக தொகுக்கலாம் என நினைத்திருக்க, சங்க இலக்கியங்களில் உணவுகள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதில் இறைச்சிகளைப் பற்றிய குறிப்புகளை பெற முடிந்தது. விடுவோமா..! தமிழோடு சேர்ந்த அசைவ விருந்தாயிற்றே. பிரியாணி, புலவு, தால்சா, இன்னபிற கறிசோறுகளுக்கு பங்கம் வர... மாடு, ஆடு, கோழி, மீன் இவையெல்லாம் ஏன் பிறந்தோமென கவலைகொள்ள... சூப், சில்லி, லாலிபப், கபாப் கடைவிரித்தோர் சுண்டல், பஜ்ஜி, சோளப்பொறி தொழிலுக்கு மாற... சைவமா? அசைவமா? என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சங்க இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கும் சதைக்கறியைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
சங்ககால மக்களின் வாழ்க்கைமுறை நிலம் சார்ந்து இருந்தது. குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைப்பற்றி தெரிந்திருக்கிறோம் அல்லவா! அதன்படி அந்த நிலங்களுக்குறிய பொதுவான உணவுகளும் இருக்கிறது.
குறிஞ்சிக்கு உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்…
முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்…
மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்…
நெய்தற்கு உணா, மீன் விலையும் உப்பு விலையும்…
பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்...
இவையாவும் மெயின் டிஷ் என சொல்லக் கூடிய முதன்மை உணவு பட்டியல் ஆகும். இதில் நெய்தல் நிலத்தில் வரும் மீன் விலை என்பது மீன் விற்ற காசு. ஆக, அசைவ உணவுகள் பற்றிய குறிப்புகள் இந்த முதன்மை பட்டியலில் எதுவுமில்லை. ஆனால் இயற்கையாக விளைந்தவைகளோடு இறைச்சிகளையும் சங்ககால மக்கள் உணவுப் பொருளாக பயன்படுத்தியிருக்கின்றனர். அதனைக் கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை "ஊன், உணங்கள், புலால், புலவு, பைந்தடி, பைந்துணி, கொழுங்குறை" என்ற பெயர்களில் அழைத்திருக்கிறார்கள். அதற்காக இறைச்சிகளை கொண்டுவந்த முறை, பங்குபோட்ட முறை, சமைத்த முறை, சாப்பிட்ட முறை, எந்தெந்த உயிரினங்களின் இறைச்சிகள் இவற்றைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கிய பாடல்கள் பலவற்றில் இருக்கின்றன.
உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கொண்டி
எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்...
கபிலர் இயற்றிய இந்த நற்றிணை பாடலில் வேட்டுவன் ஒருவன் உடும்பு, தவளை, ஈசல், முயல் போன்றவற்றை வேட்டை முடிந்து வீட்டிற்கு கொண்டு வருவதாக இருக்கிறது. அவனது அன்றைய காக்டெய்ல் கவுச்சி விருந்தை நினைத்தால் நாவில் பொறாமை நீரூரும்.
அதே நற்றிணையில் பெருந்தேவனாரின் பாடலில் தலைவி ஒருத்தி உனக்கு ஆட்டுக்கறி போட்டு நெய் ஊற்றி செய்த வெண் பொங்கல் வைத்து எலிக்கறியும் சுட்டுத் தருகிறேன் என்று ஆந்தையிடம் கூறுவதாக இருக்கிறது.
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
வயலில் விளைந்திருக்கும் திணையை தின்பதற்காக வலிமையான கழுத்துடைய ஆண் பன்றி பெண் பன்றியுடன் அங்கு வரும். அப்போது மறைந்திருந்த தலைவன் அதனை அம்பெய்து கொன்று வீட்டிற்கு தூக்கி வருவான். வீட்டில் தலை சீவிக் கொண்டிருக்கும் தலைவி அதனை சுட்டு தனது குடிகளுக்கு கொடுப்பாள் என மற்றொரு நற்றிணை பாடல் கூறுகிறது.
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி,
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட
ஒரு லெக்பீஸிற்காக சண்டைபோடும் இந்த காலத்தில் தனக்கு கிடைத்ததை பகுத்து கொடுக்கும் பண்பு அன்று உயர்ந்தாக இருந்திருக்கிறது. "குடி முறை பகுக்கும்" என்ற வார்த்தையே அழகாக இருக்கிறது.
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
இந்த பாடலில் எருமைகளை வைத்து வேலை செய்யும் உழவன் ஒருவன், இரவில் நாற்றுநடும் கனவில் இருந்துவிட்டு, காலையில் பொங்கல் சோற்றில் விரால் மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டுவிட்டு செல்கிறான் என்பதாக இருக்கிறது. "வரா அல்" என்பது விரால் மீன். "மிளிர்வை" என்றால் குழம்பில் மிதக்கும் கறித்துண்டு. கறித்துண்டு மிதக்கும் குழம்பு என்றும் சொல்லலாம். குழம்பில் எண்ணெயோடு மிதக்கும் விரால்மீன் துண்டை கண்களை மூடி கற்பனை செய்தால் அடிவயிறு பசியால் பிசையும்.... போகட்டும் விடுங்கள்... எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இருக்கும் நற்றிணையில் இறைச்சிகளைப் பற்றி இத்தனை எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக நல்ல குறுந்தொகையில் கருவாட்டை பற்றியும் காடைக்கறியைப் பற்றியும் குறிப்பு இருக்கிறது.
பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
நெய்தல் என்ற கடலும் கடல் சார்ந்த பகுதியின் ஒரு காட்சியாக இந்த பாடல் இருக்கிறது. இதில் பரதவர் கடலுக்கு சென்று தாங்கள் கொண்டுவந்த மீனை கருவாட்டிற்காக காய வைத்ததும், அதனோடு இறாலையும் சேர்த்து காய வைத்ததும் தெரிகிறது. இறால் கருவாடு என்பது தற்போது அரிதாகிப்போன ஒன்று. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கும்போது கூரையில் தொங்கும் சுரைக்காயை வெட்டி, தேங்காய் அரைத்து, புளிப்பிற்கு தக்காளி சேர்த்து, சிறிய வெங்காயத்துடன் இறால் கருவாட்டு குழம்பு என கிராமத்தில் செய்வார்கள். அமிர்தம் சுவையா? கருவாட்டு குழம்பு சுவையா? தேர்தல் வைத்தால் அமிர்தம் டெபாசிட் இழக்கலாம்.
நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி அத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
நன்றோ மகனே யென்றனென்
நன்றே போலும் என்றுரைத் தோனே
இந்த குறுந்தொகை பாடலில் தலைவனைப்பற்றி அவனது நண்பனிடம் தெரிந்துகொண்ட தோழி, நல்ல செய்தியை கூறிய நண்பனுக்கு நெய் ஊறிய "குறும்பூழ்" என்ற காடையின் கறி கிடைக்கட்டும் என கூறுகிறாள். சங்க காலத்தில் காடை வீட்டில் வளர்க்கப் பட்டிருக்கிறது. சேவல் சண்டையைப்போல் காடை சண்டை நிகழ்ந்திருக்கிறது.
ஐந்து நிலம் சார்ந்த திணைகள், ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள், மொத்தம் ஐநூறு அதுவே ஐங்குறுநூறு. அதில் அசைவத்தைப் பற்றிய குறிப்பு ஒரு பாடலில் மட்டுமே இருக்கிறது.
முளவு மா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச்
சொல்லினென் இரக்கும்அளவை
வென் வேல் விடலை! விரையாதீமே!
முள்ளம்பன்றியை சாப்பிடும் எயினரின் தங்கையே என இந்த பாடல் தொடங்குகிறது. இதில் வரும் "முளவு மா" என்பது முள்ளம்பன்றி. அதனை சாப்பிடுவார்களா என்றால்? சாப்பிட்டிருக்கிறார்கள் சாப்பிடுவார்கள் என பதில் கூறலாம். இன்றைய நிலவரப்படி காடுகள் அழிவதால் முள்ளம்பன்றிகளும் அழிந்து வருகின்றன. காட்டு யானையைப் போல சில இடங்களில் இரவு நேரத்தில் முள்ளம்பன்றிகள் ஊருக்குள் வரும். கட்டம் சரியாக இருந்தால் அது காட்டிற்கு திரும்பிச் செல்லும்.
மீதமுள்ள எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகையில் இவற்றில் அசைவம் அவ்வளவாக இல்லை. வெஜிடேரியன் இலக்கியங்கள் போலும். அடுத்த உள்ள அகநானூறு புறநானூறு இவை இரண்டும் ஆன் த வே பைபாஸ் சாலையில் அரிதான முனியாண்டி விலாஸ் ரகம். வாருங்கள் அதற்குள்ளும் நுழைவோம்...
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
பாலை நிலத்தின் அமைப்பை சொல்லும் அகநானூற்று பாடல் இது. பாலை நிலம் No Man's Land என்ற கொடுமையானது. அதன் பாறைகளில் புலி தின்றுவிட்டு சிந்திய ஆண் மானின் கறியானது உலர்ந்து கிடக்கும். அதை அவ்வழியே செல்பவர்கள் எடுத்து சாப்பிடுவார்கள். பச்சைக்கறி அதுவும் மான்கறி. "கடமா, உழா, இரலை, நவ்வி, மரையான்" என்ற பெயர்களில் சங்க இலக்கியங்களில் மான்களைப் பற்றி இருக்கிறது. தற்போது மான்கறியை வெளிப்படையாக சாப்பிட முடியாது. சல் மான் கான் கதை தெரியும் என நினைக்கிறேன்.
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
இதுவும் பாலை நிலத்தின் பாடல்தான். அந்நிலத்தில் புலியானது யானையை கொன்று சாப்பிட்டு மிச்சம் வைத்த சதைகளை அங்கிருப்பவர்கள் கொண்டுவந்து நூலில் கட்டி காயவைத்துக் கொள்வார்கள். உமணர் என்ற உப்பு விற்பவர்கள் அதனுடன் உப்பு சேர்த்து தீயில் வாட்டி சாப்பிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. "உப்புக்கண்டம்" என சொல்லப்படும் மிஞ்சிய இறைச்சியுடன் உப்பை சேர்த்து காய வைத்தல் முறை இப்பாடலில் உள்ளது. ஆடு, மாடு இவற்றின் இறைச்சிகளை உப்புக்கண்டம் போடுவார்கள். கருவாடு கூட மீனின் உப்புக்கண்டம்தான். சிலப்பதிகார ஹீரோ கோவலனுக்கு மாதவியை விட உப்புக்கண்டம் என்றால் அலாதி பிரியம்.
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
இந்த பாடலின் கடைசி வரியை ஆராய ஈசலைக் கொண்டு செய்யப்பட்ட புளிசோறு என்பதாக இருக்கிறது. Tamarind rice with winged termite.
கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
இது கபிலர் பாடிய புறநானூற்று பாடல் இதிலும் ஈசல் புளிசோறு இருக்கிறது. மோர் அல்லது தயிரைக் கொண்டு புளிப்பாக செய்யப்படும் சோறு என இப்பாடலில் வருகிறது.
ஒருநாள் வாழ்க்கை வாழும் ஈசல் புரதச்சத்து நிறைந்ததென தற்போதும் பல பகுதிகளில் உண்ணப்பட்டு வருவதை காணலாம்.
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
இந்த பாடலில் வருவது அயிலை மீன் (common dolphinfish). வளைந்த படகினை கொண்ட பரதவர்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தது. அவர்களது வீடுகளில் மீன் புலால் வாசம் வீசுகிறது. குறுகிய இடைவெளி உள்ள அவர்களது வலையை பாராட்டினர். தங்களுக்கு கிடைத்த அயிலை மீனை பகிர்ந்துகொண்டனர் என்று கூறப்பட்டிருக்கிறது.
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர்
பாண்மகள் தூண்டில் போட்டு விரால்மீன் பிடிப்பாள். அதனை பனைமரத்தின் கள்ளை குடித்துவிட்டு படுத்திருக்கும் தந்தைக்கு வஞ்சிமர விறகில் சுட்டுக் கொடுப்பாள். "நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்" என்ற முதலடியிலே மனம் தொலைந்தது. அதுதான் தமிழின் சிறப்பு, வேறெந்த மொழியிலும் இல்லாதது. அதற்குத்தான் மொழி வால் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
அடுத்ததாக புறநானூறு பக்கம் வருவோம்.
வையங் காவலர் வளம்கெழு திருநகர்,
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
இந்த பாடலில் அரண்மனைக்கு வந்தவர்களுக்கு சாப்பாடு போட ஆட்டிறைச்சியை நெய்யில் வேக வைப்பார்கள் என சொல்லப் பட்டிருக்கிறது. ஆட்டிறைச்சி நெய்யில் வறுபடும் ஓசை யானை பெருமூச்சு விடுவதைப் போன்று இருக்குமாம். நமக்கும் பெருமூச்சு வருகிறது அல்லவா!.
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,
குறிஞ்சி பூக்கும் மலை நாட்டையுடைய அரசனின் பெருமையைக் கூறும் பாடலான இதில் முளவுமான் என்ற முள்ளம்பன்றி வருகிறது. முளவு மா என்பது முள்ளைப் போன்ற பல்லையுடைய காட்டுப் பன்றியாகவும் இருக்கலாம்.
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
இந்த பாடலில் வரும் எய்ம்மான் என்பதும் முள்ளம்பற்றியாகும். ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர், மல்லி கிழான் காரியாதி என்ற மன்னனை பார்க்கச் சென்றார். மல்லி தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருந்த ஊர். அவ்வூரில் இருந்த ஆண்கள் கள்ளை வயிறுமுட்ட குடித்துவிட்டு அங்கிருக்கும் மரத்தில் காய்த்த நாவல் பழங்களை தின்றது போக பன்றிக்கறியையும் சுவைத்ததை புலவர் பார்த்தராம்.
அடுத்த பாடலும் புலவரின் காட்சியாக இருக்கிறது.
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
முள்ளம்பற்றியை கொன்ற ஆண்கள் உடும்பையும் பிடிப்பார்கள். அதன் தசையை வீட்டின் முற்றத்தில் நெருப்பில் வாட்டுவார்கள். அதன் வாசனை தெருவெங்கும் வீசும் என பாடலில் உள்ளது.
அடுத்த பாடலின் பின்னணி அதைவிட சுவாரசியமானது.
தலைவன் போருக்கு சென்றிருக்கிறான். தலைவி மட்டும் வீட்டில் இருக்கிறாள். அந்தநேரம் பாணன் ஒருவன் தன் மனைவியுடன் இரவு நேரத்தில் தலைவனது வீட்டிற்கு வருகிறான். பொழுதுபோனதால் புறா, காடை, கௌதாரி போன்ற பறவைகளை பிடிக்க முடியாமல் போக, முன்பே சமைத்து வைத்திருந்த முயல் கறியை அவர்களுக்கு தலைவி விருந்தளிக்கிறாள். அசைவ விருந்தோம்பல்.
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
புறா, காடை, கௌதாரி, முயல் அப்பப்பா!... பாணன் பகலில் வந்திருக்கலாம்.
கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் விதவை
விருந்தோம்பலைப் பற்றி குறிப்பிடும் மற்றொரு புறநானூற்று பாடலான இதில் ஊர் தலைவனின் மனைவி வேட்டைக்கு வெகு தூரம் செல்லாமல் அருகிலிருக்கும் வாய்க்காலில் சிறுவர்கள் பிடித்துவந்த குறுகிய காலையுடைய உடும்பின் தசையை தயிரோடு சேர்த்து கூழ்போல சமைத்து பாணருக்கு பரிமாறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை எட்டுத்தொகை எனப்படும் தொகுப்பிலுள்ள நூல்களின் அசைவ மெனுவை பார்த்தோம் அல்லவா! தொடர்ந்து மற்ற தொகுப்பிலிருப்பதையும் பார்த்துவிடலாம்.
வரு விசை தவிர்த்த கட மான் கொழுங் குறை,
முளவுமாத் தொலைச்சிய பைந் நிணப் பிளவை,
என்ற மலைபடுகடாம் பாடல் வரிகளில் "கடமான்" என்ற மான் மற்றும் முளவு மா என்ற முள்ளம்பற்றியும் வருகிறது.
முது மரத்த முரண் களரி
வரி மணல் அகன் திட்டை
இருங்கிளை இனன் ஒக்கல்
கருந்தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமைப் புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும்,
புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு
நாள்மீன் விராய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ,
என்ற பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கடல் இறால் பற்றியும் வயலில் இருக்கும் ஆமை உணவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு,
தேமா மேனிச் சில் வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகவிர்,
இந்த சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகளில் "ஆமான்" என்ற காட்டு மாட்டின் இறைச்சியைப் பற்றி காணமுடிகிறது.
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ
என்ற பொருநராற்றுப்படை வரிகளில் "துருவை" என்ற செம்மறியாட்டு கறியும். அதன் காலைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை உணவையும் (சூப்பாக இருக்கலாம்) அரசன் எங்களுக்கு சூடாக கொடுத்தான். அதை வாயில் போட்டு அதக்கி சூட்டை தனிக்க எச்சிலால் ஒற்றிக்கொண்டிருந்தோம் என புலவர் கூறியிருக்கிறார்.
சங்ககால மக்களின் தொழில் வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும். ஆதலால் உணவுமுறையில் அசைவத்தின் பங்கு அதிகமாக இருந்ததை இலக்கியங்களின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. அதிலும் மீன்பிடித்தல் பற்றிய குறிப்புகள் பரவிக் கிடக்கிறது. மீன் விற்றல், கருவாட்டிற்காக காய வைத்தல், போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்திற்குறிய தொழில் மீன் பிடித்தலாக இருக்க மடு, கழனி, ஆறு, குளம், வாய்க்கல் போன்ற மற்ற நீர்நிலைகளில் மீன் பிடித்தல் குறிப்புகளும் இருக்கிறது.
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
பெரும் கடலில் படகில் சென்று சிவந்த இறால் மீன்கள் நடுங்க வலைவீசி திரும்பிய தந்தைக்கு, உப்பு விற்றதில் வாங்கிய நெல்லரிசியில் பொங்கல் செய்து புளியிட்ட அயிலை மீன் குழம்பை கொடுக்கிறாள் தொண்டி மகள் என இந்த அகநானூற்று பாடல் கூறுகிறது. பார்க்கப்போனால் அசைவத்தில் சங்ககாலத்தில் மீன் உணவே முதன்மையாக இருந்திருக்கிறது.
கடைசி கட்டத்திற்கு வருவோம். சைவம் சிறந்ததா?... அசைவம் சிறந்ததா?...
சைவம் அசைவம் மட்டுமல்லாமல் எந்த இனம் பெரியது? யார் மதம் சிறந்தது? கருப்பா சிவப்பா? அட ஏன் நாகரீகம், மொழி, கலாச்சாரம், ஆடை உட்பட அனைத்து சர்ச்சைகளுக்கும் முடிவு தேட ஆதிவாசியின் குகையில் அனைத்தையும் துறந்து நின்றால் விடை கிடைக்கும். மனிதன் விலங்கிலிருந்து வந்தான். அதிலும் நான்வெஜ் விலங்கிலிருந்து வந்தான். ஆதலால் வேட்டையாடி சதைக்கறி தின்னும் பழக்கமே அவனுக்கு இருந்தது. பரிணாம வளர்ச்சியடைந்ததாலும், மற்ற விலங்குகளைவிட சிந்திக்கும் திறனை பெற்றதாலும் மனிதன் தற்போது ஜீனியர்ஸ் ஆகியிருக்கான். இருந்த போதிலும் ஜீன் சியர்சினால் (மரபணுவில்) ஆதிவாசியின் குணநலங்கள் பலவற்றோடு ஒத்தே இருக்கிறான். அசைவம் சாப்பிடுவது கூட அத்தகைய ஒத்த குணநலன்களில் ஒன்றாக இருக்கலாம். நண்பர் ஒரு வேடிக்கையாகச் சொல்வார். 'நான்வெஜ் சாப்பிடுவது கெடுதல் இல்லை. நாம் சாப்பிடும் நான்வெஜ் சுத்த வெஜ்ஜாக இருக்க வேண்டும்' என்பார். அதாவது மாடு ஆடு பன்றி கோழி எல்லாம் இலை, தழை, புல், பூண்டுகளை சாப்பிடுவதாக இருக்க வேண்டுமாம். ஆதிவாசிகளின் குணநலம், சங்ககால வாழ்க்கைமுறை இவற்றையும் தவிர்த்து தற்போதைய நவீன வாழ்க்கைமுறைக்கு சைவம் சிறந்ததா அசைவம் சிறந்ததா என்பதை தனிப்பட்ட தன் உடல்நலத்தை அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்ய வேண்டும்.
மாடோ!
பன்றியோ!
எதைத் தின்றாலென்ன
செரிக்குமா
பார்த்துக் கொ(ல்)ள்
இப்படிக்கு வயிறு.