ரோலக்ஸ்.

சில வருடங்களுக்கு முன்பு பணத்தைப் பற்றி ஒரு கதை எழுதிய நியாபகம் இருக்கிறது. அந்த கதையில் பெரியவர் ஒருவர் பணம் பத்தும் பாதகமும் செய்யும் என அறிவுரை கூற, அதனை இணைபிரியாத நான்கு நண்பர்கள் மறுத்து பேசுவார்கள். நட்பு ஒன்றே நிலையானது என அவரிடம் வாக்குவாதம் செய்வார்கள். பிறகு ஒருநாள் அவர்களுக்கு எதேச்சையாக கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பணம் கிடைக்க, அதனை தான் மட்டும் தனியே அனுபவிக்க நினைப்பார்கள். நட்பை காற்றில் பறக்க விட்டுவிட்டு இறுதியில் நால்வரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு மடித்து போவார்கள். "தகாத வழியில் வரும் பணத்திற்கு வந்தவழி நிச்சையம் தெரியும் அவ்வழியே அது திரும்பிச் செல்லும், பணம் பத்தும் பாதகமும் செய்யும்" என அந்த கதை முடியும். "Money makes many things" என்ற உலகம் முழுக்க தெரிந்த கதைதான். அந்த கதைக்கு பொருந்துவதைப் போல ஒரு குறும்படத்தை காண முடிந்தது. 

இந்த குறும்படத்தில் நான்கு நண்பர்கள் இணைந்து குழுவாக திருட்டு வேலை ஒன்றில் ஈடுபடுகின்றனர். அதில் கிடைத்த பணத்தை நான்காக பங்குபோடும் நிலை வருகிறது. அந்த குழுவில் இருக்கும் ஒருவன் நான்குபங்கை இரண்டாக்க நினைக்கிறான். மற்றொருவன் அனைத்தையும் ஒன்றாக்க நினைக்கிறான். இறுதியில் பங்கு எப்படி பிரிகிறது? பங்காளிகள் என்ன ஆனார்கள்? என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். 



இந்த குறும்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முகங்கள் இயல்பாக இருக்கின்றன. உகாண்டா நாட்டின் தலைநகரமான கம்பாலாதான் குறும்படத்தின் கதைக்களம். அந்நகரின் இரவு நேரத்தை காட்டிய ஒளிப்பதிவும் வெகு இயல்பாகவே இருக்கிறது. பேபி கூல், வின்கா, வின்னி நவாகி, யீகி பெண்டா, ஏ பாஸ், ஷீபா போன்ற பாப் பாடகர்களின் பாடல்கள் குறும்படம் முழுவதும் ஆங்காங்கே வருவது இன்னமும் ரசிக்க வைக்கிறது. 

ROLEX
Directed by - Benon Mugumbya
Written by - Benon Mugumbya and Hosea Jjemba
Cinematography - Izeak Ekuka
Country - Uganda
Language - Swahili
Year - 2020. 

இந்த குறும்படத்தின் தலைப்பான "ரோலக்ஸ்" என்பது உகாண்டா நாட்டில் கிடைக்கும் ஒரு பிரபலமான துரித உணவு ஆகும். பெரிய சப்பாத்தி செய்து, அதற்கு மேல் முட்டை ஆம்லெட் போட்டு, தக்காளி, வெங்காயம், முட்டைகோசு, காரட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சீவி தூவி சுருட்டினால் அல்லது மடித்தால் ரோலக்ஸ் (Ugandan Rolex) கிடைக்கும்.  உகாண்டா மக்கள் அனைவரும் ரோலக்ஸை விரும்பி சாப்பிடுவார்கள். அது அவர்களது சாப்பாட்டு கௌரவமும், விலைவாசிக்கு ஏற்றதும் கூட. சரி!.. அதற்கும் இந்த குறும்படத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்றால்.. ஆமாம்... இருக்கிறது. அது என்ன என்பதை குறும்படத்தை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்களேன்.