எங்கே போகிறாய் ஐடா?
1995 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையத் தொடங்கியது. பல யுகங்களாக அதன் வழக்கமான வேலை அதுதான் என்றபோதிலும் அன்று கொஞ்சம் வெப்பத்தை தற்போதைய "ரிபப்ளிகா ஸ்ர்ப்ஸ்காவின்" சிறிய நகரமான "ஸ்ரெப்ரெனிக்காவில்" கொஞ்சம் கூடுதலாக விட்டுவிட்டு அது மறைந்து கொண்டிருந்தது. 90 -களில்
யூகோஸ்லாவியா நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த
ஸ்ரெப்ரெனிக்கா நகரம் குட்டி குட்டி மலைகள் சூழ்ந்த அமைதியான சுற்றுலாத்தளமாக விளங்கியது. அந்நகரைச் சுற்றி உள்ளவர்கள் அமைதிக்காகவும், அங்கிருக்கும் இயற்கையான நீரை பருகவும், குறைந்த செலவில் அங்கு வந்து போவார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட அந்த நாளில் அந்நகரம் தன் இயல்பை முற்றிலும் இழந்திருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.
1992 - ல் யூகோஸ்லாவியா நாடு பிரிந்து "போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா" இணைந்து "ரிபப்ளிகா ஸ்ர்ப்ஸ்கா" என சுதந்திர பிரகடனத்தை அறிவிக்க "போஸ்னியா போர்" என்ற உள்நாட்டு போர் தொடங்கியது. ஆரம்பத்தில் கம்யூனிசத்தின் வீழ்ச்சியாக கருதப்பட்ட போர் பின்நாட்களில் இனத்திற்கான போராக மாறியது. போஸ்னிய முஸ்லிம்கள், ஆச்சாரமான செர்பியர்கள், கத்தோலிக்க குரோஷியர்கள் என இனங்கள் சண்டையிட்டுக்கொள்ள, இன அழிப்பு வேலைகளும் கச்சிதமாக நிகழ்ந்தது. போர் என்றால் இன அழிப்பு அவசியம் அல்லவா!... அதுபோல் ஐ.நா சபை இல்லாமல் ஒரு போரா?... 1993 ஆம் ஆண்டு வாக்கில் இந்த உள்நாட்டு போரில் ஐ.நா. சபை தலையிட்டு ஸ்ரெப்ரெனிக்கா நகரத்தை செர்பிய இராணுவத்திடமிருந்து கைப்பற்றி, அந்த பகுதியில் ஆயுதமேந்திய எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்றும், அங்கு ஒரு குருவி வெடி கூட வெடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு போர் நிறுத்த பகுதியாக அறிவித்தது. மேலும் அங்கு ஒரு பாதுகாப்பு முகாமை அமைத்து, சிறிய டச்சு நாட்டு இராணுவ குழுவை காவலுக்கு வைத்தது.
1995 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையத் தொடங்கிய போது ஸ்ரெப்ரெனிக்கா நகரத்தை சுற்றியிருந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஐ.நா அமைத்திருந்த பாதுகாப்பு முகாமை நோக்கி திரண்டனர். ஐ.நா விதித்த கட்டுப்பாடுகளை மீறிய செர்பிய இராணுவம் கிராமங்களில் தாக்குதல் நடத்த, மக்கள் முகாமை அடைந்தனர். அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் ஆரம்பித்து ஆயிரக் கணக்கையும் தாண்டியது. அவர்களை சமாளிக்க முடியாமல் ஐ.நா பாதுகாப்பு குழுவினர் செய்வதறியாது விழித்தனர். தங்களுக்கு மேலும் சில வீரர்களும், அதிகாரமும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் தேவையென மேலிடத்தில் முறையிட்டனர். இதற்கிடையில் தங்களை நாடி வந்த மக்களை காப்பாற்ற தாக்குதல் நடத்திய செர்பிய இராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர். முகாமிற்கு வெளியே தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இருளில் நம்பிக்கை ஒளிக்காக காத்திருந்தனர்.
அடுத்தநாள் காலை ஐ.நா பாதுகாப்பு முகாமிற்கு வெளியே தங்கியிருந்த மக்களை வேறிடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல பேருந்துகள் வந்து சேர்ந்தன. முதல்நாள் பேச்சுவார்த்தையில் ஏதோ முடிவு கிட்ட, அதற்கு போஸ்னிய செர்பிய இராணுவத்தினர் பொறுப்பேற்றிருந்தனர். முதலில் குழந்தைகளையும் பெண்களையும் பிரித்து பேருந்தில் அனுப்பிவைத்த அவர்கள், ஆண்களையும் இளைஞர்களையும் கிடைத்த வாகனங்களில் ஏற்றிக்கொண்டு ஐ.நா பாதுகாப்பு முகாமை சுத்தமாக காலிசெய்துவிட்டு சென்றனர். பல மாதங்களுக்குப் பின்பு போஸ்னியா போர் ஓய்ந்து அமைதி திரும்பிய நாட்களில், போரினால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்க, ஸ்ரெப்ரெனிக்கா நகரை ஒட்டிய பகுதிகளில் வசித்துவந்த சுமார் "8372" போஸ்னிய முஸ்லிம் ஆண்களும் இளைஞர்களும் காணாமல் போனது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் ஐ.நா பாதுகாப்பு முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்நாளில் வெவ்வேறு இடங்களில் கூட்டாக சுடப்பட்டு இனப் படுகொலை செய்து புதைக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 2012 ஆண்டில் படுகொலை செய்து புதைக்கப்பட்ட குழியிலிருந்து எடுக்கப்பட்ட உடலுறுப்புகளை DNA பகுப்பாய்வு செய்ய, "6838" நபர்களை பற்றிய முழு விபரங்கள் கிடைத்தது. உலகத்தின் பார்வைக்கு இந்த படுகொலை தெரியவந்து அதற்கு காரணமான செர்பிய இராணுவமான ரிபப்ளிகா ஸ்ர்ப்ஸ்காவின் தலைவராக இருந்த "ராட்கோ மிலாடிக்" பெயரளவிற்கு தண்டிக்கப்பட, அந்த இனப் படுகொலை நிகழ்வை ஒரு பெண்ணின் தாய்மையுடன் சித்தரிக்கும் திரைப்படம்தான் "Quo Vadis Aida? (எங்கே போகிறாய் ஐடா?)".
நாற்பது வயதை கடந்த "ஐடா" என்பவள் ஸ்ரெப்ரெனிக்கா
நகரத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறாள். கூடவே ஐ.நா பாதுகாப்பு குழுவிற்கு மொழிபெயர்ப்பாளராகவும் செயல்படுகிறாள். போஸ்னிய செர்பிய இராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி மக்கள் ஐ.நா முகாமிற்கு வெளியே திரள, அதில் ஐடாவின் கணவரும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். முகாமிற்கு உள்ளிருக்கும் ஐடா மொழிபெயர்ப்பாளர் வேலையை தொடர, தனது குடும்பத்தை எப்படியாவது முகாமிற்குள் கொண்டுவரவும் முயற்சிக்கிறாள். அதில் வெற்றியும் பெறுகிறாள். இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்கும் அவள் தனது மக்களுக்கான விளக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கச் செய்கிறாள். அவளது குடும்பம் மற்றும் சக மக்கள் இவர்களது எதிர்காலம் மீட்பு அல்லது மரணம் எதைக் கொண்டிருக்கிறது? என்பதுதான் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் கதை.
எந்தவொரு முன்கதையும் தெரிந்து கொள்ளாமல், intro என்ற அறிமுகமும் இல்லாமல் வெறுமையாக இந்த திரைப்படத்தை முதலில் பார்க்க நேர்ந்தது. பதட்டத்துடன் இறுக்கத்தை சுமந்து ஐடாவாக நடித்த "ஜஸ்னா டூரிசிக்கின்" நடிப்பு, ஐ.நா. முகாமிற்குள் பல கோணங்களில் சுற்றிவரும் "கிரிஸ்டின் ஏ மேயரின்" கேமரா, அடுத்தது என்ன? தொடர்ச்சியான படக் கோர்வை, "அன்டோனி லாசர்கிவிச்சின்" இசை, இவற்றில் மனம் ஒன்றிப்போக என்ன நடக்கிறது? எங்கு நடக்கிறது? நடந்ததா? நாடகமா? என்ற ஆராய்ச்சியெல்லாம் திரைப்படத்தை பார்த்த பிறகு தேடித்தேடி அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு நல்ல திரைப்படம் அப்படித்தான் அது முடிந்த பிறகு எதையாவது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த திரைப்படம் போரின் உக்கிரத்தை, இனப் படுகொலையை, போர் பாதுகாப்பு என்ற அமைப்பை, அவர்களது கையாளாகாத தனத்தை வேறோரு கண்ணோட்டத்தில் உணரச் செய்கிறது. இன்றைய நிலவரப்படி உலகமே ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் நிகழும் போரை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து என்ன என்ன கிடைக்கும் என்ற நிகழ்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலகில் எந்த மூலையில் யாருக்கு எதிராக போர் என நிகழ்ந்தால் இழப்பு என்ற ஒன்றே பொதுவானதாக இருக்கும். அதுவே இறுதியில் நிலைத்திருக்கும். அத்தகைய இழப்பை தாய்மையின் வழியே இந்த திரைப்படத்தில் காணமுடிகிறது, "மண்ணில் யார் வீழ்ந்தாலும் ஒரு தாய் அழுவாள்" என்பது இத்திரைப்படத்தின் மூலம் நிசர்சனமாகிறது.
Quo Vadis Aida?
Directed by - Jasmila Žbanić
Written by - Jasmila Žbanić
Cinematography - Christine A. Maier
Music by - Antoni Łazarkiewicz
Country - Bosnia and Herzegovina
Language - Bosnian, Serbian, Dutch
Year - 2020
துளிகள்:
✏️... Quo Vadis? என்பது பழமையான இலத்தீன் சொல். இதற்கு "எங்கே அணிவகுத்து செல்கிறீர்கள்?" என்று பொருள். Where are you going? எங்கே போகிறீர்கள்? அல்லது போகிறாய்? என நேரடியாகவும் பொருள் கொள்ளலாம்.
✏️... இயேசுவின் சீடர்களில் முதன்மையானவர் "புனித பீட்டர்" (புனித பேதுரு அல்லது புனித இராயப்பர்). இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு நீரோ மன்னனின் ஆட்சி காலத்தில் இவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கென அவர் தப்பித்து ஓடுகையில் ரோம் நகரத்திற்கு வெளியே உள்ள சாலையில் உயிர்தெழுந்த இயேசுவை பீட்டர் சந்திக்கிறார். அப்போது "Quo Vadis? எங்கே போகிறீர்கள்?" என கேட்கிறார். அதற்கு இயேசு "நான் மீண்டும் சிலுவையில் அறையப்படுவதற்கு ரோம் செல்கிறேன்" என்று பதிலளிக்கிறார். படத்தின் தலைப்பு இதனை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது.
✏️... "ஜஸ்மிலா ஸ்பானிக் (Jasmila Žbanić) போஸ்னியாவைச் சேர்ந்த பிரபல பெண் இயக்குனர் ஆவார். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் போரின் தாக்கங்களை கொண்டிருக்கும். இவரது பிற திரைப்படங்கள்
Men Don't Cry (2017)
Love Island (2014)
On the Path (2010)
Grbavica (2006)
✏️... 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 1995 டிசம்பரில் முடிந்த போஸ்னியா போரில் 101000 மக்கள் கொள்ளப்பட்டனர். அதில் பெரும்பான்மையினர் போஸ்னிய முஸ்லிம்கள் ஆவர்.
✏️... "ஹசன் நுஹானோவிக்" என்பவர் எழுதிய "Under the UN Flag: (The International Community and the Srebrenica Genocide)" என்ற புத்தகத்தை முன்னுதாரணமாக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
✏️... ஐடாவாக நடித்த நடிகை ஜஸ்னா டூரிசிக் செர்பியாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்வியாளர். இவரது கணவர் "போரிஸ் இசகோவிக்கும்" நடிகரே. இத்திரைப்படத்தில் அவர் செர்பிய இராணுவமான ரிபப்ளிகா ஸ்ர்ப்ஸ்காவின் தலைவரும், இனப் படுகொலைக்கு காரணமானவருமான ராட்கோ மிலாடிக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.