காய்கறிகளின் வேடிக்கையான உண்மைகள்.
காடுகளுக்குச் சென்று வேட்டையாடி திரும்பியவர்கள் அங்கிருந்து கொண்டுவந்த செடியை தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நட்டுவைக்கத் தொடங்கியபோது காய்கறிகள் தோன்றின. கி.மு 10000 முதல் கி.மு 7000 வருட காலகட்டத்தை புதிய விவசாய காலம் என்கின்றனர், அக்காலத்தில்தான் காய்கறிகளும் அதிக அளவில் பயிறிடப்பட்டன. அதுவரை நான்வெஜ் என்றிருந்த மனித சாப்பாட்டு இனத்தின் நடுவே நான் - வெஜ் என ஒரு கோடு விழுந்ததும் அப்போதுதான். மரக்கறி எனப்படும் இந்த காய்கறிகள் மட்டும் இல்லையென்றால் இன்று உலகில் இருக்கும் மற்ற உயிரினங்கள் மனிதனின் ருசிக்கு இரையாகியிருக்கும். அதுமட்டுமல்லாது டைனோசர் காலத்தைப் போன்று மனிதன் மனிதனையே அடித்துத் தின்று எப்போதோ அழிந்திருப்பான். காய்கறிகள் மனிதகுல வாழ்க்கைக்கு இன்றியமையாதது. என்னதான் விலைவாசி ஆட்டம் காட்டினாலும்
அன்றாட வாழ்க்கைக்கு அது அவசியமானது. நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் காய்கறிகளை சாப்பிடுவது என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். ஆரம்ப காலத்திலிருந்து தற்போதைய காலம் வரை சில காய்கறிகள் மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவை தங்கம், பணம், மற்றும் நமக்கு சொந்தமான வேறு பொருட்களைவிடவும் மதிப்புடையதாக இருந்திருக்கிறது. அத்தகைய காய்கறிகளைப் பற்றி சுவாரசியமாக பார்க்கலாம் வாருங்கள்.
விண்வெளிப் புகழ்:
அதிகம் தின்றால் அதைப் போலவே ஆகிவிடுவாய் என எச்சரிக்கப்பட்டாலும் உலக அளவில் அதிக மக்களால் உண்ணப்படும் காய்கறி உருளைக் கிழங்கு. உலகில் அதிகமாக பயிறிடப்படும் காய்கறியும் அதுதான். 2020 ஆண்டு மட்டும் "359 மில்லியன் மெட்ரிக் டன்" உருளைக் கிழங்கு அறுவடை செய்யப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பூமியில் மட்டுமல்லாது விண்வெளியிலும் உருளைக் கிழங்கு விளைவிக்கப் பட்டிருக்கிறது. 1995 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவும் விஸ்கான்சின் - மாடிசன் பல்கலைக்கழகமும் இணைந்து விண்வெளியில் (Space Station) தாவரங்கள் வளருமா என்ற ஆராய்ச்சிக்காக உருளைக் கிழங்கை விதைத்தனர். தி மார்ஷியன் என்ற திரைப்படத்தில் செவ்வாய் கிரகத்தில் தனித்து விடப்பட்ட நாயகன் அறுவடை செய்தது போன்று இல்லை என்றாலும் ஓரளவிற்கு அது விளைந்தது. விண்வெளிக்குச் சென்று அங்கு விளைந்த முதல் காய்கறி என்ற பெருமையையும் பெற்றது. விண்வெளியில் ஆராய்ச்சி இன்றும் தொடர, வியாழன் கிரக உருளைக் கிழங்கு விலை ரூபாய் ----- என வருங்காலத்தில் விற்பனைக்கு வந்தாலும், வெள்ளி கிரக உருளை சாகுபடியில் நாலு ஏக்கரில் நாற்பது இலட்சம் வருமானம் என பசுமை புத்தகத்தில் ஏலியன் கட்டுரை வெளிவந்தாலும் ஆச்சரியப்பட அவசியமில்லை.
காயா? பழமா?
உருளைக் கிழங்கிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்குச் சென்ற காய்கறி தக்காளி ஆகும். ஆமாம்!.. தக்காளி காய்கறியா?... பழமா?... இந்த சந்தேகம் அனைவருக்கும் உண்டு. காயா?பழமா? பட்டிமன்றம் மட்டுமல்லாது "தக்காளி கேஸ்" என நீதிமன்றத்தில் வழக்கு நிகழ்ந்த வரலாறும் இருக்கிறது. சந்தேகமில்லாமல் தக்காளி என்பது பழம்தான். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்றுமதி வரிவிதிப்பில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. நியூயார்க் துறைமுகத்திலிருந்து செல்லும் காய்கறிகளுக்கு மட்டும் வரி விதித்திருந்தனர். பழங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. காய்கறிகள் பட்டியலில் தக்காளி ஏற்கனவே இருக்க, அது எப்படி! அது பழம்தானே... என ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர் நீதிமன்றம் வரையும் சென்றது. இறுதித் தீர்ப்பில் தக்காளி காய்கறிகளின் பட்டியலிலே சேர்க்கப்பட்டது. தக்காளி மட்டுமல்ல கத்தரிக்காய், ஆலிவ், பட்டாணி, வெள்ளரிக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், குடை மிளகாய் மற்றும் சீமை சுரைக்காய் என இவை அனைத்துமே பழம்தான்.
குளுமை இனிமை:
காய்கறிகள் சிலவற்றை பச்சையாக உண்ணலாம். பெரும்பாலும் அவை விதவிதமாக சமைத்து உண்ணக் கூடியவையே. சமைக்கவே முடியாத காய்கறி ஒன்று இருக்கிறது. அதுதான் வெள்ளரிக்காய். அதனை சமைத்தால் சுவையாகவே இருக்காது. இருந்த போதிலும் உலகில் அதிகமாக பயிறிடப்படும் காய்கறி வரிசையில் வெள்ளரிக்காய் நான்காவது இடத்தில் இருக்கிறது. எழுதுவதற்காக மை கண்டுபிடித்து, பேனா புழக்கத்திற்கு வந்த காலத்தில், எழுதியதை அழிக்க வெள்ளரிக்காய் உபயோகப் படுத்தப்பட்டது. கண்ணாடி, பீங்கான் போன்ற பொருட்கள், மற்றும் தோலினால் செய்யப்பட்ட பைகள், காலணிகள் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காயைக் கொண்டு தேய்க்கலாம். "Cool as Cucumber" என்ற சொல்லாடல் உண்டு அதன்படி உடலை குளிர்விக்கும் அதனை இரண்டு துண்டுகள் சாப்பிட்டுவிட்டு படுத்தால் அதிகாலையின் விழிப்பு அமைதியாக இருக்கும்.
ஆரஞ்சு மதம்:
இலை வகை, பூ வகை, வேர் வகை, விதை வகை என காய்கறியில் வகைகள் உண்டு. அதில் கேரட் வேர் வகையைச் (கிழங்கு) சார்ந்தது. கிழங்கில் உலக அளவில் பிரபலமானதும் முதன்மையானதும் இதுவே. கேரட்டின் தாயகம் ஈரானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் ஆகும். அது மட்டுமல்லாது கேரட்டின் உண்மையான நிறம் purple எனப்படும் கத்தரிப்பூ நிறமாகும். இது தெரிந்தால் ஆரஞ்சு மதம் பிடித்தவர்களுக்கு கேரட் பிடிக்காமல் கூட போகலாம். ஆரம்ப காலகட்டத்தில் கேரட் மருத்துவத்திற்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது. பண்டைய கிரீஸ் மற்றும் ரோம் நாட்டை சேர்ந்தவர்கள் கேரட் அந்த விசயத்திற்கு உகந்தது என நம்பி வந்தனர். அவர்களது நம்பிக்கையின் படி கேரட்டினால் பலன் பெரிதானதா என தெரியவில்லை. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த "ஜோ அதர்டன்" என்பவரது தோட்டத்தில் விளைந்த நீளமான கேரட்டினால் அவருக்கு பெரிதான புகழ் கிடைத்தது. அவரது தோட்டத்து கேரட்டே உலகின் மிக நீண்ட கேரட்டாக இருக்கிறது. அதன் நீளம் 6.245 மீட்டர், அதாவது 20 அடி 5.86 அங்குலம் அகும்.
இதுவும் அதற்குதான்:
பன்டைய ரோம் நகரான பாம்பீயில் இருந்த "லுபனாரியம் (அல்லது லுபனர்)" என்ற விபச்சார விடுதி ஒன்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த விடுதியின் அறைகளில் வரையப்பட்டிருந்த ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஓவியங்கள் உலக புகழ்பெற்றது. அந்த ஓவியங்கள் சிலவற்றில் பீட்ரூட்டும் இடம்பெற்றிருந்தது. அப்படி என்றால் அதற்கும் பீட்ரூட்டிற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால்? ... ஆம் இருக்கிறது. பீட்ரூட்டில் அதிக அளவு "போரான்" உள்ளது. அது பாலியல் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. கிரேக்க புராணத்தில் வரும் அழகு, காதல், காமம் இவற்றின் "A" கிளாஸ் பெண் தெய்வமான "அப்ரோடைட்" தனது கவர்ச்சியை அதிகரிக்க பீட்ரூட்டை சாப்பிட்டார் என்ற நாட்டுப்புற கதை இருக்கிறது. அதுபோல் மற்ற காய்கறியை விட அதிக அளவு சர்க்கரை அதில் உள்ளது. பீட்ரூட்டிலிருந்து இயற்கையான சர்க்கரை தயாரிக்கப்பட, திராட்சை ஒயினுக்கு போட்டியாக பீட்ரூட் ஒயினும் புகழ்பெற்றது. வழக்கத்திற்கு மாறாக ரெண்டு பெக் அதிகம் சாப்பிட்டு காலையில் ஹேங் ஓவர் தொல்லை இருந்தால் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
பழைய காலத்து ஆள்:
அவர் பழைய காலத்து ஆளுப்பா என்பதுபோல் வெங்காயத்தை அது பழைய காலத்து காய்கறிப்பா எனலாம். உலகின் மிகப் பழமையான காய்கறியும் அதுவே. அதில் மருத்துவ குணங்கள் பல நிறைந்திருக்கிறது. கிரேக்கத்தை சேர்ந்த மருத்துவரான "டியோஸ்கோரைட்ஸ்" என்பவர் வெங்காயத்தின் மருத்துவ பயனை உலகறியச் செய்தார். அவர் காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்ற வீரர்களுக்கு போட்டி தொடங்குமுன் கடிக்கவும் ஜூஸாகவும் வெங்காயம் கொடுக்கப்பட்டது. அது ஆற்றலும் வலிமையும் நம்பிக்கையும் அளிக்கிறது என அரைத்து வீரர்களின் உடலிலும் பூசப்பட்டது. எகிப்தில் வெங்காயம் புனித பொருளாக கருதப்பட்டது. நித்தியத்தின் உருவகமாகவும் வழிபாட்டு பொருளாகவும் இருந்தது. மறு உலகம் என்ற நம்பிக்கை எகிப்தியர்களுக்கு உண்டு. வெங்காயம் தாகத்தை தடுக்கும் என்பதால் மறு உலக பயணத்திற்கு பயன்படுமே என இறந்தவர்களோடு சேர்த்து அது புதைக்கப்பட்டது. லிபியா நாட்டில் உள்ளவர்களுக்கு வெங்காயம் என்றால் உயிர். ஒரு லிபியர் சராசரியாக ஒரு வருடத்தில் 30.3 கிலோ வெங்காயத்தை காலி செய்கிறார். ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான நெப்ரஸ்காவின் புளூ ஹில் பகுதியில் வசிக்கும் பெண்கள் தொப்பி அணிந்துகொண்டு வெங்காயம் சாப்பிட மாட்டார்கள்.
பெரிய ஆள்:
காய்கறிகளிலேயே பெரிய ஆள், வெயிட்டான பார்ட்டி, பலே ஆசாமி, எல்லாம் பரங்கிக்காய்தான். ஒரு பரங்கிக்காயின் சராசரி எடை 6 கிலோ. அதிகபட்சமாக 2016 ஆம் ஆண்டு ஜெர்மனியில் விளைந்த ஒரு பரங்கிக்காயின் எடை 1190 கிலோ 490 கிராம் இருந்தது. அதை அடுத்து 960.70 கிலோ பூசணிக்காய் அமெரிக்காவில் விளைந்தது. அதேபோல் காய்கறிகளில் இதுவரை தனியாக பெரிதாக விளைந்தவைகளின் பட்டியலும் இருக்கிறது.
சுரைக்காய் - 174.41 கிலோ
முட்டைகோஸ் - 138.25 கிலோ
காலே - 48.04 கிலோ
சர்க்கரை வள்ளி - 38 கிலோ
முள்ளங்கி - 31.1 கிலோ
காலிபிளவர் - 27.48 கிலோ
புரோக்கோலி - 15.87 கிலோ
பீட்ரூட் - 23.995 கிலோ
கருணைக் கிழங்கு - 21 கிலோ
டர்னிப் - 17.7 கிலோ
வெள்ளரிக்காய் - 12.9 கிலோ
கேரட் - 10.17 கிலோ
வெங்காயம் - 8.5 கிலோ
கிளைக்கோசு - 8.3 கிலோ
உருளைக் கிழங்கு - 4.98 கிலோ
தக்காளி - 4.377 கிலோ
கத்திரிக்காய் - 3.06 கிலோ
பூண்டு - 1.19 கிலோ.
கண்ணுக்கு எட்டாதது:
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என சொல்வார்கள். அதுபோல் கண்ணுக்கு எட்டாத காய்கறிகளும் உண்டு. அதாவது உலகிலேயே அதிக விலையுள்ள காய்கறிகள்தான் அவைகள். நம்மால் வாங்க முடியாதது மட்டுமல்லாது, வாங்க நினைத்துப் பார்க்க இயலாத காய்கறிகள். அட! ஏன்? அவற்றை நம்மால் பார்க்கக்கூட முடியாது. அவைகளில் முதலில் இருப்பது "தைவான் நாட்டு காளான்" ஆகும்.
காளான்களும் காய்கறிகள் பட்டியலில் இருக்கிறது. தக்காளிக்கு ஏற்பட்ட வரி சோதனை அதற்கும் ஏற்பட்டிருக்கிறது. தைவான் காளான் என்றதுமே அவர் நியாபகம் வரும் என நினைக்கிறேன். உண்மைதான் அவர் தினமும் 5 தைவான் காளான் சாப்பிடுவாராம் (ஏழைப் பங்-காளான் ). அதன் ஒன்றின் (One Piece) விலை 80000 ரூபாய்.
காளானுக்கு அடுத்து அதிக விலையுள்ள காய்கறி "ஹாப் ஷுட்ஸ்" ஆகும். பீர் தயாரிக்கப் பயன்படும் ஹாப்ஸ் என்ற பூவின் வகைதான் இந்த ஹாப் ஷூட்ஸ். ஹாப்ஸ் பூ பச்சை நிறம் கொண்டது. கசப்புத் தன்மை நிறைந்தது. பீர் கசக்க இதுவே காரணம். பீர் மட்டுமல்ல சில அரியவகை உணவிலும் இது சேர்க்கப்படுகிறது. ஜெர்மனியை தாயகமாகக் கொண்ட இதன் விலை கிலோ 71013 ரூபாய்.
சிப்ஸ் விளம்பரத்தில் நல்ல உருளைக் கிழங்கை எப்படித்தான் கண்டுபிடிப்பது என ஒருவர் கவலைப்படுவார். நிஜத்தில் நல்ல உருளைக் கிழங்கு தேவையென்றால் மேற்கு பிரான்சின் நோயர் மூட்டியரின் கரையோரத்தில் இருக்கும் தீவிற்குச் செல்ல வேண்டும். அற்புதமான சீதோஷ்ண நிலை, இயற்கை விவசாயம், கூடுதல் சுவை கொண்ட உருளைக் கிழங்கு அங்குதான் கிடைக்கும். "லா பொன்னொட் உருளைக் கிழங்கு" என்ற பெயர் கொண்ட அதனை வாங்க இந்திய மதிப்பில் கிலோவிற்கு 53344 ரூபாய் கொடுக்க வேண்டிவரும்.
ஜப்பானின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று "சுஷி". அரிசி சோற்றுடன் இறைச்சி, மீன், காய்கறிகளை நிரப்பி செய்யப்படும் சுஷியில் "வசாபி" வேரினைக் கொண்டு செய்வது ஐரோப்பாவில் அரிதாக கிடைக்கக் கூடிய உணவு பதார்த்தமாகும். அதில் சேர்க்கப்படும் தனித்துவமான வசாபி வேர்களுக்கு பண்ணைகளில் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும். அதன் விலை கிலோ 12175 ரூபாய்.
கீரைகளில் மிகப் பிரபலமானது பசலைக்கீரை. பிரான்சில் விளையும் ஒருவகை பசலைக்கீரை தினமும் 7 முக்கிய நபர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. அதன் விலை கிலோ 2167 ரூபாய்.
பிஞ்சு நிலையிலேயே பறித்து விற்கப்படும் பட்டாணி வகையைச் சேர்ந்த ஒருவகை அவரைக்காய் மேற்கத்திய உணவகங்களில் அதிகம் சமைக்கப்படுகிறது. அதன் விலை ஒரு கிலோ 1690 ரூபாய்.
சாலடுகளில் அதிகம் சேர்க்கப்படும் "லெட்டூஸ்" என்ற இலைக்கோசில் சிவப்பு நிறம் கொண்ட புதிய கண்டுபிடிப்பு தற்போது பிரபலமாகி வருகிறது. அதன் விலை கிலோ 1680 ரூபாய்.
விருப்பு வெறுப்பு:
எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என அவசியமில்லை. காய்கறிகளுக்கும் இது பொருந்தும். சில காய்கறிகளை சிலருக்கு பிடிக்காது. எங்கள் அவாக்கள் அந்த காய்கறியை தொடவே தொட மாட்டார்கள் என்ற கூட்டங்களும் இருக்கிறது. அதன்படி உலகிலேயே அதிக மக்களால் வெறுக்கக் கூடிய காய்கறி எது? என்ற கருத்துக்கணிப்பை 2020 ஆம் ஆண்டு இணையம் மூலம் நடத்தினர். அதில் "பிரஸ்ஸல்ஸ் ஸ்பார்ட்ஸ்" எனப்படும் குட்டி முட்டைகோசு முதலாவதாக 19% மக்களால் பெரும்பான்மையாக வெறுக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து
கூனைப்பூ - 14%
செலரி - 13%
கத்தரிக்காய் - 13%
பீட்ரூட் - 10%
செலரியாக் கிழங்கு - 10%
பட்டர்நட் சுரைக்காய் - 10%
போக் சோய் ( சைனா முட்டைகோசு) - 10%
ப்ரோக்கோலி - 9%
கருணைக் கிழங்கு - 9%
பெருஞ்சீரக தழை - 9%
வெண்டைக்காய் - 8%
மேரவ் பரங்கிக்காய் - 8%
ஜெருசலேம் கூனைப்பூ - 8%
பட்டன் காளான் - 8%
பரங்கிக்காய் - 7%
முட்டைகோசு - 7%
பெரும்பாளைக் கீரை -7%
காலே - 6%
சுரைக்காய் - 6%
என காய்கறிகளில் சில மக்களால் வெறுக்கப்படுகிறது.
பேபிக்கள்:
காய்கறிகளில் "பேபி காய்கறிகள் (Baby Vegetables)" என இருக்கிறது. நேரடியாக மொழிபெயர்த்தால் குழந்தை காய்கறிகள் என்று வரும். வளரும் நிலையிலேயே பிஞ்சாக பறிக்கப்படுபவையே பேபி காய்கறிகள். இவைகள் வளர்ந்த தங்கள் சகாக்களைவிட மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு பரங்கிக்காய். பிஞ்சு கத்தரிக்காயின் சுவையே தனி. பேபி உருளைக் கிழங்கு, வெள்ளரிக்காய், வெங்காயம், சோளம், சிவப்பு மற்றும் வெளிர் மஞ்சள் நிற பீட்ரூட், கேரட், ப்ரோக்கோலி, முட்டைகோசு என பேபிக்கள் ஏராளம் இருக்கிறது. 1960 களில் தொலைக்காட்சி வந்த பிறகு சமையல் நிகழ்ச்சிகளின் மூலம் இவைகள் பிரபலமானது. சரியான நேரத்தில் பார்த்து தேர்ந்தெடுத்து அறுவடை செய்தால்தான் பேபி காய்கறிகளை பெற முடியும். அளவை வைத்து அதே போல் சிறியதாக மாற்றம் செய்தவை சில பேபி காய்கறிகள் எனவும் விற்பனைக்கு வருகின்றன.
சின்ன சின்னதாய் சில:
காய்கறிகள் ஊட்டச்சத்திற்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கு சக்தி வாய்ந்த ஆதாரமாக இருக்கிறது. இதனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா? காடுகளுக்கு வேட்டையாடச் சென்று திரும்பியவர்கள் என பார்த்தோம் அல்லவா!.. அவர்கள்தான்.
காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது என கூறுவார்கள். ஆனால் சமைத்து சாப்பிடுவதே அதைவிட சிறந்தது. பச்சை காய்கறிகளில் 3% "பீட்டா கரோட்டின்" இருக்கிறது. அதுவே அதனை சமைத்து சாப்பிட்டால் 40% பீட்டா கரோட்டினை பெறலாம்.
கேரட், உருளைக் கிழங்கு, வெள்ளரிக்காய் உட்பட அனைத்து காய்கறிகளையும் தோலுடன் சேர்த்துக் கொள்வதே நல்லது.
பண்டைய எகிப்தில் பிரமிடுகளை கட்டிய தொழிலாளர்களுக்கு கூலியாக முள்ளங்கி, வெங்காயம் மற்றும் பூண்டு வழங்கப்பட்டது.
1845 - 1852 வருடத்தில் அயர்லாந்தில் பஞ்சம் ஏற்பட்டு ஒரு மில்லியன் மக்கள் இறந்தனர். அந்த பஞ்சம் ஏற்பட உருளைக் கிழங்கு முக்கிய காரணமாக இருந்தது. உருளைக் கிழங்கு சாகுபடியில் ஒருவித நோய் தாக்க அதை மட்டுமே நம்பிய மக்கள் பஞ்சத்தில் சிக்கினர். "உருளைக் கிழங்கு பஞ்சம்" என்றே அது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
காய்கறிகளிலேயே அறுவடை செய்த செடி உட்பட அனைத்தையும் உண்ணக் கூடியது பீட்ரூட் மட்டும்தான். பீட்ரூட் சாற்றைக் கொண்டு தலைக்கு வண்ணம் பூசிய வண்ணமயமான காலம் இருந்திருக்கிறது.
உங்களது குரலை பிறர் கவனிக்க வேண்டுமா? பூண்டு மற்றும் வெங்காயத்தின் சொந்தமான லீக்ஸ்ஸை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில், ரோம் மன்னன் நீரோ போன்றவர்கள் அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டனர்.
கத்தரிக்காய் என்றாலே இத்தாலியர்கள் கிலி ஆவார்கள். இத்தாலிய மொழியில் "மெலன்சானா (Melanzana)" என்பதுதான் அதன் பெயர். அதற்கு "பைத்தியக்கார ஆப்பிள் (apple of madness)" என்று பொருள்.
வெண்டைக்காய் விதையை காயவைத்து வறுத்து அரைத்து காபியைப்போல காபிக்கு மாற்றாக குடிக்கலாம். 1863 -ல் அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்த காலத்தில் காபி தட்டுப்பாடு ஏற்பட, மக்கள் காபியைப் போல வேறொன்றை தேடினர். அதில் வெண்டைக்காய் விதை காபியே சிறந்ததாக இருந்தது. காபியில் இருக்கும் காஃபின் நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தது.
புடலங்காயின் பழத்தை பார்ப்பது அரிது (விட்டுவைத்தால் தானே!). சதை நிறைந்த முற்றிய புடலங்காயை தெற்கு ஆப்பிரிக்காவில் தக்காளிக்கு பதிலாக புளிப்பிற்காக பயன்படுத்துவார்கள்.
நீண்ட காலமாக அமெரிக்கர்கள் உருளைக் கிழங்கு குதிரைகளுக்கு மட்டுமே ஏற்றது என நம்பி வந்தனர். அதுபோல் பைபிளில் ஒரு வார்த்தைக் கூட உருளைக் கிழங்கு இல்லை, அதனால் அது அவ்..வே.. என ஐரோப்பியர்கள் நினைத்திருந்தனர்.
வெங்காயமா? முட்டைகோஸா எது பழமையானது என்ற போட்டி உண்டு. போட்டியிடும் நாடு சீனா. அங்குதான் முட்டைகோஸ் அதிக அளவு விளைகிறது. முட்டைகோஸ் மட்டுமல்லாது உலகின் பெரும்பான்மையான காய்கறிகளை விளைவிப்பதில் சீனாதான் என்றுமே முதலிடம். இந்தியாவிற்கு இரண்டாமிடம்.
உருளைக் கிழங்கு, தக்காளி இவற்றை ஆங்கிலத்தில் உச்சரிக்க ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும். உருளைக் கிழங்கு (potato) கிழங்கு வம்சம். தக்காளி (tomato) செர்ரி என்ற பழ வம்சம். இரண்டும் இணைந்தால் எப்படியிருக்கும் என விஞ்ஞானிகள் யோசித்ததுதான் "போமாட்டோ (pomato)". அதாவது போமாட்டோ என்ற செடியில் மேலே தக்காளி காய்க்கும். அடியில் பிடுங்கினால் உருளைக் கிழங்கு கிடைக்கும்.
தக்காளியில் மஞ்சள், வெள்ளை, இளஞ் சிவப்பு, ஊதா, கருப்பு நிறமெல்லாம் உண்டு, நாம்தான் சிவப்பை மட்டும் பயன்படுத்துகிறோம். தக்காளி செடியில் வளரும் என நமக்கு தெரியும் அதன்படி 2006 ஆம் ஆண்டு ஒரு செடியில் 32194 தக்காளிகள் அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. அதன் எடை 522.464 கிலோ.