திருமுகம் - முஸ்தஃபா மஸ்தூர்.
ஒரு புத்தகத்தை இப்படி அறிமுகம் செய்தால் என்ன? ... அந்த புத்தகத்தின் வாசிப்பில் லயித்து அதை இவ்வாறு சிலாகித்தால் என்ன?... அதை எழுதியவரை இதைப்போல கௌரவித்தால்
என்ன?... இப்படி என்ன? என்ன? கேள்விகளுக்கு பிறகு எண்ணத்தில் தோன்றியதுதான் மயிலிறகு பக்கங்கள். அதாவது ஆசையாக மயிலிறகு வைத்து வாசித்த புத்தகத்திலிருந்து சில பத்திகள். இந்த பொதுவெளியில் பக்கம் பக்கமாய் எழுதுவதை விட, அதை விரல் அசையும் நேரத்தில் கவனிக்க வைப்பதை விட, அதை கொட்டாவி வராமல் படிப்பதை விட இது கொஞ்சம் எளிமையாகவும் புதுமையாகவும் இருக்குமல்லவா!. முதலாவதாக சமீபத்தில் வாசித்த முஸ்தஃபா மஸ்தூர் என்பவரின் "திருமுகம்" என்ற ஈரானிய நாவலிருந்து சில.
இந்தப் பிரபஞ்சத்தில்
மிக மர்மமான
புலம்பெயர் பறவை ஒன்றிலிருந்து
விடுபட்ட
எடைமிகுந்த சிறகே! பறவைகளின்
நகரம் எங்கே?...
அந்த வீடுகளுள் ஒன்றில்
அவனது இதயம்
எரிந்து கொண்டிருக்கிறது.
உன் வீட்டின்
மேல்தளத்திலிருந்து பார்த்தால்
ஒரு வீட்டின்
ஜன்னல்கள் வழியாகத்
தீச்சுவாலை கிளம்புவது தெரியும்...
உன் கண்களுக்குள்
புதைந்துபோகும்
ஒருவன் இருக்கிறான்.
உனது விரல்களின் இடுக்குகளில்
திசை தவறித் தடுமாறும்
ஒருவன் இருக்கிறான்.
உனது தீயில்
வெந்துருகும்
ஒருவன் இருக்கிறான்...
உன்னை
அருந்தியபோதெல்லாம்
என் தாகம்
அதிகரித்தது.
என் தாகத்திற்குக்
காரணமான தீர்த்தமே!
மதுரத்தின் கசப்பே!...
என் வாழ்வின்
மகழ்ச்சிகளில்
அதிக சோகம்
நீதான்.
எனது இருப்பின் சோகம் ஆனந்திக்கப் பெரும்
காரணமும் நீதான்...
உன்னிரு விழிகளும்
பச்சை இமைகளுக்குள்ளிருந்து
தமது மந்திரத்தை நிகழ்த்தின.
இதயத்தை
அதன் இடத்திலிருந்து
பெயர்த்தெடுக்கும்
பிரளயமாய் அது இருந்தது...