ச்...சே!...என்ன வாழ்க்கை...இது...

ச்சே! என்ன வாழ்க்கை இது? ... 

சலிப்புடன் இந்த வார்த்தையை உச்சரிக்காதவர் யாருமே இல்லை எனலாம். இந்த சலிப்பு எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். பருவகாலம் மாதிரி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அது வந்துபோயிருக்கும். உளவியலின் படி ஏதோ ஒன்றின்மீது ஏற்படும் கவலையால் இந்த சலிப்பு தோன்றுகிறது என்கின்றனர். இந்த சலிப்பு மிகவும் ஆபத்தானது. எலும்புருக்கி நோயைப் போல மனதை உருக்கி உடலையும் பாதிக்கக் கூடியது. சரி!.. இந்த சலிப்பிலிருந்து விடுபடுவது எப்படி?... 

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதுவே அக்காட்டிற்கு ராஜாவாகவும் இருந்தது. சிங்கத்தை ராஜாவாக பெற்ற காடுகள் செழிப்பாகத்தான் இருக்கும். அப்படியிருக்கும் அந்த காட்டிலிருந்த சிங்கத்திற்கு சில நாட்களாகவே ஒரு புதுவித கவலை பிடிக்கத் தொடங்கியது. அதாவது, காட்டில் தொலைவில் ஏங்கோ ஓரிடத்திலிருந்து சேவல் கூவுவதை கேட்டு சிங்கத்தின் உடல் நடுங்கும், வியர்த்துக் கொட்டும், ஒருவித பயம் தொற்றிக்கொள்ள, அதிகாலையின் தூக்கத்தை தொலைத்து அது கண் விழிக்கும். தினம் தினம் இது தொடர, கண்ணுக்குத் தெரியாத சேவலின் கூவலுக்கு சிங்கம் பயப்பட தொடங்கியது. 

ச்சே! என்ன வாழ்க்கை இது?... 

இந்த காட்டிற்கே ராஜா நான். என் பலத்திற்கு ஈடு இணை கிடையாது. காட்டில் உள்ள அனைத்து மிருகத்திற்கும் இது தெரியும். அப்படியிருக்க ஒரு கோழி கூவும் போது எனக்கு பயமாக இருக்கிறதே!... இப்படி பயந்து பயந்து எத்தனை நாள்தான் வாழ்வது?. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? என நினைத்து அது கவலைப்பட்டது. 

சிங்கத்தின் கவலை அதிகரிக்க அதன் நடையும் தளர்ந்து போனது. அதே தளர்வுடன் ஒருநாள் அது நடந்து செல்ல, ஒரு யானை தன் காதுகளை ஆட்டிக்கொண்டு முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அதன் எதிரில் வந்தது. அதைப் பார்த்த சிங்கம், என்னப்பா ஏதோ சோகமா இருப்பதுபோல் தெரிகிறது?... உன் உருவத்தைப் பார்த்தால் எல்லா மிருகங்களும் விலகிப் போய்விடுமே... எவ்வளவு பெரிய ஆளு நீ... உனக்கு என்ன கவலை...  முகத்தை ஏன் இப்படி வைத்திருக்கிறாய்?... என்றது. 

என்னத்த சொல்ல... என் உடம்புதான் பெரிதாக இருக்கிறது... இதோ பார்! என் காதுகளுக்கு அருகில் பறக்கும் சிறு குளவியைக் கண்டு நான் பயப்படுகிறேன். குளவி மட்டுமல்ல அதைப் போன்று சிறிய உயிரினங்கள் எதுவானாலும் என் காதுக்குள் புகுந்தால் நான் இறந்தே விடுவேன். அதற்காகத்தான் எப்போதும் நான் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறேன். என் படைப்பே அப்படித்தான். சில நேரங்களில் அது வெறுப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. ச்சே! என்ன வாழ்க்கை இது?... என சொல்லிவிட்டு யானை அங்கிருந்து சென்றது. 

காதை ஆட்டிக் கொண்டு யானை செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சிங்கத்திற்கு தெளிவு பிறந்தது. சிறியது பெரியது பாகுபாடில்லாமல் இந்த உலகில் பிறந்த அனைத்திற்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால் மனம்தான் பாழாகும். அதனால் தனது பலம் என்பது மறைந்து போகும், இறுதியில் வாழ்க்கை என்பது சூன்யமாகும். இனிமேல் நான் கவலைப்படவே போவதில்லை. கெட்டதை விடுத்து நல்லதையே நினைக்கப் போகிறேன். தினம் தினம் புதிதாக வாழப் போகிறேன் என சிங்கம் தன்னை தேற்றிக்கொண்டு பழைய நடை போடத் தொடங்கியது. அன்றிலிருந்து அது ச்சே! என்ன வாழ்க்கை இது? என்ற  வார்த்தையை வேறு விதத்தில் சொல்லத் தொடங்கியது. அதாவது காட்டிலிருக்கும் ஒரு உயர்ந்த இடத்திற்கு தினமும் அது செல்லும். அங்கிருந்து காடு முழுவதையும் அது பார்க்கும். இந்த காட்டிற்கு நான்தான் ராஜா என மனதில் நினைத்துக் கொள்ளும். கண்களை மூடி மூச்சை ஆழ்ந்து இழுத்துவிடும். பிறகு கேள்விக்குறியை நீக்கிவிட்டு நீட்டி நிதானமாகச் சொல்லும். அதில் ஆனந்தம் மட்டுமே இருக்கும். 

ச்...சே!...என்ன வாழ்க்கை...இது...