உலகின் முதல் குடும்பம்.

நீ நான் நமது குழந்தை என்பது மட்டுமே குடும்பம் என்றாகிப்போன இந்த காலகட்டத்தில் தாத்தா - பாட்டி, சித்தப்பா - சித்தி, அத்தை - மாமா என உறவுகளோடு, இன்பம் - துன்பம், பிறப்பு - இறப்பு, சண்டை - சமாதானம், லாபம் - நஷ்டம் என எது வந்தாலும் அதை சமமாக பாவித்து சமாளித்து வாழ்க்கையை நடத்தும் அதிசயமான ஒரு கூட்டுக் குடும்பத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?.. ஒரு காலத்தில் இந்த அமைப்புதான் குடும்பம் என இருந்தது. உறவுகளோடு இணைந்ததுதான் வாழ்க்கை என அமைந்தது. சரி! போகட்டும் விடுங்கள்... உலகின் முதல் குடும்பம், அதாவது மனித இனத்தின் முதல் குடும்பம் எப்படி இருந்திருக்கும்?... அதனை வேடிக்கையாக காட்டிய அனிமேஷன் திரைப்படம்தான் "தி க்ரூட்ஸ் (The Croods)".  

கற்பனையான விலங்குகள் தாவரங்கள் உயிரினங்கள் நிறைந்த வரலாற்றிற்கு முந்தைய "க்ரூடேசியஸ்" எனப்படும் "ப்ளியோசீன்" காலத்தில் கதை நிகழ்வதாக இந்த திரைப்படம் அமைக்கப்பட்டது. அக்காலத்தில் வாழும் ஒரு குடும்பம் இயற்கை பேரிடர்களிலிருந்தும், உலக மாற்றங்களிலிருந்தும் தங்களை எவ்வாறு காத்துக் கொள்கிறார்கள் என்பதை சுவாரசியமாக இந்த திரைப்படம் காட்டியது. "கிர்க் டெமிக்கோ" மற்றும் "கிறிஸ் சாண்டர்ஸ்" எழுதி இயக்கி 2013 -ல் வெளிவந்த இந்த அனிமேஷன் திரைப்படத்தை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு "தி க்ரூட்ஸ்: எ நியூ ஏஜ்" என அதன் இரண்டாம் பாகமும் வெளியிடப்பட்டது. ஆஸ்கார் உட்பட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது. திரைப்படம் மட்டுமல்லாது வீடியோ கேம் விளையாட்டிலும் தி க்ரூட்ஸ் குடும்பம் கலக்க, "டான் ஆஃப் தி க்ரூட்ஸ்" என்ற பெயரில்  தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டது. 

Down of the Croods

தி க்ரூட்ஸ் திரைப்படத்தை தயாரித்த டிரீம் ஒர்க்கர்ஸ் அனிமேஷன் நிறுவனமே டான் ஆஃப் தி க்ரூட்ஸ் கார்டூன் தொடரையும் தயாரித்திருக்கின்றனர். திரைப்படத்தின் கதையைத் தழுவியே இந்த கார்டூன் தொடரும் எடுக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் வரும் "க்ரக், ஈப், உக்கா, தங்க், சாண்டி" மற்றும் வயதான பாட்டி "கிரான்" போன்ற முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றிருக்கின்றனர். மொத்தம் 4 சீசன்கள், 52 எபிசோடுகளை கொண்ட இந்த கார்டூன் தொடர் 2015 ஆம் ஆண்டு Netflix -ல் வெளியிடப்பட்டது, அதனை தற்போதும் காணலாம். 


சரியா? தவறா? எனத் தெரியாது நவீன காலத்தில் நாம் வாழும் இன்றைய வாழ்க்கையை, கற்காலத்திற்கு முந்தைய காலத்தோடு ஒப்பிட்டு பகடி செய்ததுதான் தி க்ரூட்ஸ் திரைப்படத்தின் பலமே. நகைச்சுவை கலந்த புத்திசாலித்தனமான உறையாடல்கள் அதற்கு பெரிதும் உதவின. குறிப்பாக இன்றைய இயல்பான நடத்தையாக இருக்கும் மீட்டிங், டேட்டிங், அவுட்டிங், பார்ட்டி கலாச்சாரத்தையும், கல்விமுறை, வியாபார யுக்தி, அரசியல், தேர்தல், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றையும் இந்த திரைப்படம் ஒரு பிடி பிடித்திருந்தது. மேலும் "குடும்பம் என்பது அன்பால் நிறைந்தது" என்பதையும் திரைப்படம் காட்டியது. அவற்றை எல்லாம் கொஞ்சம் கூடுதலாக இந்த கார்டுன் தொடர் முழுவதிலும் ரசிக்கலாம். உலகின் முதல் குடும்பம் தி க்ரூட்ஸ் குடும்பத்தைப் போன்று இருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். ஆனால் முதல் குடும்பத்திற்கும் தற்போது நாம் வாழும் குடும்ப அமைப்பிற்கும் தலைகீழ் மாற்றங்கள் இருக்கிறது.  அதனை காண உலகின் முதல் குடும்பத்தை நீங்களும் சந்தியுங்களேன்.