லாடுவின் நினைவுகள்.
லாடு என்ற இளைஞனே இந்த குறும்படத்தின் நாயகன். அவன் கொங்கனில் இருக்கும் பல வருடங்களாக மூடப்பட்டிருக்கும் தனது பூர்வீக வீட்டிற்குச் செல்கிறான் அங்கு தன் நினைவுகளை மீட்டெடுக்கிறான் என ஒரு வரியில் இந்த குறும்படத்தைப் பற்றி சொல்லிவிடலாம். ஆனால் லாடுவின் வருகை சாதாரணமானது அல்ல. அது மிகக் குறைந்த காலத்தில் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற நினைவுகளைக் கொண்டது.
லாடுவின் பெற்றோர்கள் கிராமத்திலிருக்கும் பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கிறார்கள். அதனை கடைசியாக ஒருமுறை பார்க்க லாடு அங்கு செல்கிறான். தூசு, குப்பை, ஒட்டடை படிந்த குழப்பமான பூட்டியிருக்கும் வீட்டிற்குள் அவன் நுழைய, அவனோடு சேர்ந்து பால்யகால நினைவுகளும் அடியெடுத்து வைக்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமாக அவன் செல்ல ஓரிடத்தில் அவனது பாட்டி தென்படுகிறாள். 'லாடு என் செல்லம்
உனக்காகத்தான் காத்திருக்கிறேன்' - என அவனை வரவேற்கிறாள். 'வீட்டை பார்த்தியா? எப்படி குப்பையாக இருக்கு' என அவனிடம் ஒரு வாறுகோலை நீட்டி சுத்தம் செய்ய சொல்கிறாள். லாடுவும் வீட்டை சுத்தம் செய்ய, ஒரு பெட்டியிலிருந்து கோலிகுண்டுகள் நிறைந்த பாட்டிலை எடுக்கிறாள். லாடுவும் அவனது பாட்டியும் கோலி விளையாடத் தொடங்குகின்றனர். பிறகு லாடு சிறுவயதில் செய்த சேட்டைகள் அனைத்தையும் பாட்டி அவனிடம் கூறுகிறாள். இருவரும் மாங்காய் பறிக்கிறார்கள், தெருவில் வரும் ஐஸ் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஒருகட்டத்தில் லாடு சிறுவயதில் விளையாட பயன்படுத்திய பொருட்கள் முதல் கம்பளி வரை அனைத்தையும் பத்திரமாக வைத்திருப்பதாக பாட்டி அவனிடம் காட்டுகிறாள். ஒரு அழகான முதுகு உரசும் சாய்வில் மன்னிப்பை, நலம் விசாரிப்பை, தவறவிட்டதை, உறவை, வாழ்க்கையைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பொழுது சாய்கிறது. மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு லாடுவிடம் பாட்டி கூறுகிறாள். தீப்பட்டி எங்கிருக்கிறது என சமையல் கட்டில் லாடு தேடிக்கொண்டிருக்க, ஒரு டப்பாவில் அவனுக்கு பிடித்த பலகாரம் இருக்கிறது. 'எனக்குத் தெரியாமல் இதை ஒளித்தா வைத்திருக்கிறாய் உன்னை என்ன செய்கிறேன் பார்' என லாடு பாட்டியைத் தேடுகிறான். அப்போது வீடெங்கும் இருள் சூழ்கிறது.
இந்த குறும்படம் லாடுவின் வழக்கமான கதை இல்லை. அது லாடுவின் நினைவுகளின் உலகம், அதில் உள்ள எதார்த்தம் அதனை சொன்ன விதம்தான் இந்த குறும்படத்தை தனித்து நிற்கச் செய்கிறது. பூட்டிய வீட்டிற்குள் மர்மப்படம் போல தொடங்கியதும், நினைவுகளை கருப்பு வெள்ளையில் காட்டியதும், என சுனில் குராவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. பாட்டிக்கு பேரனுக்குமான நெருக்கம், சின்ன சின்ன விளையாட்டுகள், இறுதியாக உணர்வுகளால் நிரப்பும் இருவரின் உரையாடல்கள் மனதை நெகிழச் செய்கிறது. அதற்கு பிரசாந்த் காம்ப்ளேவின் பின்னணி இசையும் ராகுல் சால்வே எழுதிய அழகிய தாலாட்டும் உதவியிருக்கிறது.
Laadu
Directed by - Kiran Vijay Sashte
Written by - Kiran Vijay Sashte
Cinematography - Sunit Suresh Gurav
Music by - Prashant Kamble
Country - India
Language - Marathi
Year - 2019.
பால்யகாலம் என்பது பெரும்பாலும் எல்லோருக்கும் இனிமையானதுதான். அதில் லாடுவிற்கு கிடைத்தது போல பாட்டியோ தாத்தாவோ உடனிந்தால் சொல்லவே வேண்டாம். இந்த குறும்படம் லாடுவின் நினைவுகள் மட்டுமல்ல அத்தகைய பால்யத்தை பெற்ற அனைவரின் நினைவுகள்தான்.