உழைப்பிற்கும் மரணத்திற்கும் இடையில்.
"மக்கள் எல்லோரும் ஒரு பொருளை வாங்குகிறார்கள்; அந்தப் பொருளை உற்பத்தி செய்ய பல தொழிலாளர்களின் உழைப்பு அதில் அடங்கியுள்ளது; ஆனால், அந்தப் பலனை முதலாளி மட்டும் எவ்வாறு அனுபவிக்க முடியும். அந்தப் பொருளை உருவாக்க கஷ்டப்பட்டு வேலை செய்த தொழிலாளர்கள் மட்டும் எப்படி வறுமையில் வாழ முடியும்."
- என்ற கேள்வியைத்தான் கார்ல் மார்க்ஸ் மக்களின் முன்பு வைத்தார். அந்த கேள்விக்கான விடை ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னமும் பிடிபடவில்லை என்பதே நிதர்சனம். மேலும் இன்று உலகம் தொழில்நுட்பத்தில் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எத்தனையோ இயந்திரங்கள் அதனை இயக்க ரோபோக்கள் என வந்துவிட்ட பிறகும் கைகளால் செய்யக் கூடிய வேலைகள் எனவும் இருக்கின்றன, உடல் உழைப்பு தொழிலாளர்கள் என பலரும் இருக்கவும் செய்கிறார்கள். இந்த டாகுமெண்டரி உலகின் சில இடங்களில் இருக்கும் அத்தகைய உடல் உழைப்பு தொழிலாளர்கள் பலரின் வாழ்க்கையை கொண்டிருக்கிறது.
இந்த டாகுமெண்டரி வித்தியாசமான தலைப்புகளை கொண்டு ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஐந்து தலைப்புகள் உலகெங்கிலும் இருக்கும் கடும் உடல் உழைப்பாளிகளின் அபாயகரமான வாழ்க்கையை சித்தரிக்கிறது.
முதல் தலைப்பு "ஹீரோக்கள்"
இது உக்ரைன் நாட்டில் உள்ள டோனெட்ஸ் பேசின் என்ற சட்டவிரோத சுரங்கத்தில் குறுகிய இடத்தில் உடலை வளைத்து பணிபுரியும் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் எவ்வாறு பணயம் வைக்கிறார்கள் என்பதை பின்தொடர்கிறது.
இரண்டாவது தலைப்பு "பேய்கள்"
இந்தோனேஷியாவின் இஜென் சுரங்கத்தில் எரிமலை சீற்றத்திற்கு இடையில் கந்தகத்தை (சல்பர்) வெட்டியெடுக்கும் தொழிலாளர்களின் புகை படிந்த மூச்சுவிட முடியாத இருண்ட வாழ்க்கையை கொண்டிருக்கிறது.
மூன்றாவது தலைப்பு " சிங்கங்கள்"
இது நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் இருக்கும் இரத்தமும் சதையும் முடைநாற்றமும் கொண்ட கசாப்பு கடைக்காரர்களின் வாழ்க்கையை காட்டுகிறது.
நான்காவது தலைப்பு "சகோதரர்கள்"
பாகிஸ்தானில் உள்ள கடானி என்ற கப்பல் உடைக்கும் தளத்தில் கைவிடப்பட்ட எண்ணெய் கலனை உடைக்கும் வெல்டர்களைப் பற்றியது.
ஐந்தாவது தலைப்பு " எதிர்காலம்"
இது சீனாவின் லியோனிங்கில் இருக்கும் ஆபத்தான எஃகு தொழிற்சாலையின் தொழிலாளர்களின் கேள்விக்குறியான எதிர்காலத்தை காட்டுகிறது.
ஆறாவது தலைப்பு சற்று ஆறுதலாக ஜெர்மனியிலிருக்கும் ஓய்வு பூங்காவாக மாற்றப்பட்ட ஒரு முன்னால் தொழில்துறை வளாகத்திலிருக்கும் இளைஞர்களைப் பற்றியதாக இருக்கிறது.
கடினமான உடல் உழைப்பு என்பது சமூகத்தின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரியாமல் மறைக்கப்படலாம். உடல் உழைப்பே உண்மையான வேலை. உடல் உழைப்பு தொழிலாளர்கள் தங்களிடம் இருக்கும் கருவிகளோடு தங்களையும் கருவிகளாக்கிக் கொள்கின்றனர்.
அத்தகையவர்களை ஆறு தலைப்புகளில் ஆறு பகுதிகளைக் கொண்ட இந்த டாகுமெண்டரியில் இனம் காணலாம். Physical Labor என ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய அப்படிப்பட்டவர்களை பொதுவெளியில் அடையாளம் காண்பது என்பது எளிது. அவர்களை எங்காவது காணும்போது அவர்களின் மீது தனி மதிப்பும் மரியாதையும் இந்த டாகுமெண்டரி மூலம் ஏற்படலாம்.
Workingman's Death
Directed by - Michael Glawogger
Screenplay - Michael Glawogger
Cinematography - Wolfgang Thaler
Music - John Zorn
Country - Austria, Germany
Language - Pashto, Yoruba,
German, English,
Igbo, Indonesian,
Mandarin, Russian
Year - 2005.
உங்களைப் பற்றி ஏதாவது செய்ய நீங்கள் "தீவிரமான வேலையைச் செய்ய வேண்டும்" என்று எங்கள் பெற்றோர்கள் எங்கள் தலையில் முழக்கமிட்டார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய தலைமுறையின் சமூகத்தில் உடல் உழைப்பு மிகவும் மதிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் நான் செய்யவில்லை என்பது எனக்கு ஒரு மோசமான மனசாட்சியைக் கொடுத்தது என்பதை நான் நினைவில் கொள்கிறேன். குறைந்த பட்சம் நான் உண்மையில் வேலை செய்கிறேன் என்ற உணர்வு எனக்கு இருந்ததில்லை என்ற உணர்வுடனே இந்த டாகுமெண்டரியை இயக்குனர் "மைக்கேல் கிளாவோகர்" படைத்திருக்கிறார். அவரைப்போல இருப்பவர்களுக்கும், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டு ஒரு துளி வியர்வை சிந்தாமல் வேலை செய்பவர்களுக்கும், நாம் செய்யும் வேலை யாருக்காக அல்லது எதற்காக என தெரியாமல் இருப்பவர்களுக்கும் இந்த டாகுமெண்டரி நிச்சையம் ஆச்சரியத்தை தரும்.
டாகுமெண்டரியைக் காண:
குறிப்புகள்:
...🛠️... உக்ரைனின் டான்பாஸ் பகுதியிலிருக்கும் 70% நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டுவிட்டன. மீதமிருப்பவைகளில்தான் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கும் தொழில் நடைபெறுகிறது. அதன் வர்த்தகம் கணக்கிடமுடியாத அளவு கொண்டது. மிக சிறிய அளவு கொண்ட அந்த சுரங்கங்கள் "கோபங்காஸ் (Kopankas)" என அழைக்கப்படுகிறது.
...🛠️... இந்தோனேஷியாவின் ஜாவா எரிமலை தீவிலிருக்கிறது "கவா இஜென்" சல்பர் ஏரி. இயற்கையான ரசாயன மாற்றத்தல் அந்த ஏரியில் கந்தகம் பெருமளவு கிடைக்கிறது. அதை எடுத்துவர போதிய வசதிகளும் அனுமதியும் கிடையாது. ஆகையால் சட்டவிரோத மனித உழைப்பு அங்கு தேவைப்படுகிறது. ஏரியில் வீசும் கந்தக நொடி ஒரு யானையைக் கூட மயக்கமடைச் செய்யும் அதை பொருட்படுத்தாது பலர் அந்த இடத்திலிருந்து கந்தகத்தை வெட்டி தங்களது தோலில் சுமந்து கொண்டு சுமார் 4 மைல்கள் பயணிக்கின்றனர். ஒருவர் 80 முதல் - 100 கிலோ கந்தகத்தை மூச்சுவிட சிரமப்பட்டு தினமும் குறைந்தது நான்குமுறை சுமக்க அவை சீனாவிற்கு விற்கப்படுகின்றன.
...🛠️... கோழி, ஆடு, மாடு, பன்றி, மீன் என மனிதன் சாப்பிடும் அனைத்தின் இறைச்சிகளும் கிடைக்கும் இடமான "போர்ட் ஹார்கோர்ட்" சந்தையிலிருந்து நைஜீரியா நகரம் முழுவதிற்கும் இறைச்சி செல்கிறது. தினமும் அங்கு வெட்டப்படும் ஜந்துக்களை கணக்கிட நினைத்தால் வானில் இருக்கும் நச்சத்திரதத்தை எண்ணுவதை போன்றதாகும். கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்தால் மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி இறைச்சியும் அங்கு கிடைக்கும்.
...🛠️... கடற்கரையில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது பெரிய கப்பல் உடைக்கும் தளம்தான் பாகிஸ்தானின் "கடானி" கப்பல் உடைக்கும் தளம். கராச்சியிலிருந்து 40 கி.மீ தூரத்திலிருக்கும் இது 10 கி.மீ நீளம் கொட்டது. இதில் 132 கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்தி உடைக்கலாம்.
...🛠️... 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி சீனாவின் டைலிங், லியானிங்கில் க்கிங்கே மாவட்டத்தில் இருந்த ஸ்பெஷல் ஸ்டீல் கார்ப்பரேஷன் என்ற எஃகு தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடு காரணத்தில் விபத்து ஏற்பட்டது இதில் 32 தொழிலாளர்கள் எஃகுவைப் போலவே உருக்குலைந்தனர். பலர் காயமடைந்தனர்.