ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை.

ஃபுக்குஷிமா
2011 ஆம் வருடம் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.36 மணிநேரத்தில் ஜப்பானின் செண்டாய் தீவுகளில் எற்பட்ட நிலஅதிர்வு ஆழிப்பேரலை என்ற சுனாமியை தோற்றுவித்தது. அது ஜப்பானின் கிழக்கு பசிபிக் கடற்கரை முழுவதையும் தாக்கியது. ரிக்டர் அளவில் 8.9 - 9.2 என பதிவான நிலநடுக்கமும் அதனை தொடர்ந்த சுனாமியும் பல சேதங்களை ஏற்படுத்த ஃபுக்குஷிமாவிலிருந்த டாய்ச்சி அணுஉலையையும் (Fukushima Daiichi Nuclear Power Plant) அது ஆட்டிவிட்டுச் சென்றது. அணுஉலை இருக்குமிடத்தில் கடல்அலைகள் புகுந்ததால் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் நின்றது. மின்சாரம் தடைபட, தானியங்கி குளிரூட்டும் அறை செயலிழந்தது. அதனால் அணுஉலையில் யுரேனியம் சுவர்களில் வெப்பம் சுழற்சி முறையில் வெளியேற்றப்படுவது நடைபெறவேயில்லை. Reactors Pressure Vessel (RPV) என சொல்லக்கூடிய அமைப்பில் அதிக நீராவி உருவாக அணுஉலையின் மொத்த இயக்கமும் நின்றது. அன்றைய இரவு அவசரநிலை பிரகடனம் செய்ய உச்சகட்டமாக Corium fuel and control rod என்ற எரிபொருள் அமைப்பு வெடித்தது. அணுஉலையின் வெப்பம் 2800 °C க்கு உயர்ந்தது. அடுத்தநாள் மார்ச் 12 அன்று ஜப்பானின் நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்த அலையின் ஆட்டமும் ஒருவழியாக நிற்க அணுஉலையின் ஹைட்ரஜன் கலன் வெடித்து தீப்பற்றி காற்றில் பரவி ஒரு பேராபத்தாக முடிந்தது. இந்த பேராபத்தை தொடர்ந்து ஃபுக்குஷிமா பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கதிர்வீச்சு என்ற கண்ணுக்குத் தெரியாத அரக்கனால் புதிய அச்சமும் ஏற்பட்டது. செர்னோபில்லிற்கு பிறகு உலகம் சந்தித்த மாபெரும் அணுஉலை விபத்தாக அது மாறியது. அணுவை கையாளத் தெரியாத கையாளாகத்தனத்திற்கு எடுத்துக்காட்டானது.
நிலநடுக்கம், சுனாமி, அணுஉலை விபத்து என அக்காலகட்டத்தில் ஜப்பான் சந்தித்த மூன்று சோதனைகளையும் அனுபவித்த சாட்சிகளில் ஒருவரான "மிக்காயேல் ஃபெரியே" தனது அனுபவங்களையும், தான் திரட்டிய ஆதாரங்களையும் துணிவுடன் உலகிற்கு தெரியப்படுத்திய பிரஞ்சு புத்தகத்தின் (Fukushima recit d' un desastre) தமிழாக்கம்தான்
ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பிரஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் மிக்காயேல் ஃபெரியே, 2011 ஆம் ஆண்டு அங்கு நிகழ்ந்த பேரிடரின் போது மற்ற சில வெளிநாட்டவர்களைப் போல தப்பித்துச் செல்லாமல் அங்கு நிலவிய நிலமையை அறிந்துகொள்ள நினைத்தார். அதனால் பேரிடர் பாதித்த இடங்களுக்குச் செல்லத் துணிந்தார். இயற்கை விளையாடிய ஆட்டம் ஒருபுறம், மனிதன் தனக்குத்தானே நிர்ணயித்துக் கொண்ட ஆட்டம் மறுபுறம் இவற்றை அவரால் நேரடியாக காண முடிந்தது. நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு உயிர்ப் பிழைத்தவர்களையும் அவர்களின் அனுபவங்களையும் அவரால் கேட்க முடிந்தது. மேலும் அணுஉலை விபத்தின் ஆபத்தை கதிர்விச்சு பகுதிகளுக்கு அருகிலிருந்து அனுபவிக்க முடிந்தது. அவற்றையெல்லாம் தன்னையொரு சாட்சியாக பாவித்துக்கொண்டு நேர்மையாக அரசியல் மற்றும் அழகியலோடு இந்த புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
அடுத்த நாள், மெட்ரோவில், தண்டவாளத்தின் ஆட்டத்தில் தூங்கிவிழும் வயதான மனிதர் ஒருவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். யாரையோ திட்டுகிறார். உற்றுக் கவனித்தேன். கதிரியக்கப் பொருட்களின் பெருக்கம், அதைத் தொடர்ந்து வரும் நச்சு, புதிதாய் வெடி விபத்துகள் வரக்கூடிய வாய்ப்புகள் அகியவைப் பற்றி ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தார். அவரது முணுமுணுப்பில், ஒரு வாக்கியம் மட்டும் மீண்டும் மீண்டும் வருவதைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. “ஷின்போட்சு... தையேன் நா கோட்டோ நீ தாருதாரோ.” னியோனா ஷிம்போட்சு சுருஸோ”..... “பயங்கரமான விஷயம். இது ஜப்பானின் பேரழிவு.” ..... இப்படித்தான், அணுஉலை நம் கனவு வரை ஊடுருவி இருக்கிறது. பேரிடர், நம் கற்பனைகளையும் ஆக்கிரமித்துவிட்டது.
-புத்தகத்திலிருந்து
கட்டுரை, ஆவணம், வாக்குமூலம் இவற்றைப் போலில்லாமல் ஒரு கதைசொல்லியைப் போல இந்த புத்தகத்தை மிக்காயேல் தொடங்கியிருக்கிறார். நிலநடுக்கம், சுனாமி, அணுஉலை விபத்து என மூன்று பேரிடர்களையும் மூன்றாக பிரித்து ஜப்பானின் இயற்கை காட்சிகள், பருவநிலைகள், நில அமைப்புகள், கலாச்சார கூறுகள், தொன்மங்கள், வரலாறு, இலக்கியங்கள், அது சார்ந்த ஆளுமைகளின் அறிமுகங்கள் இவற்றை கலந்து, எள்ளல், அறச்சீற்றம், பச்சாதாபம், பாலியல் உணர்வுகள் உட்பட தனது தனிப்பட்ட நடத்தைகளையும் சேர்த்து பன்முக கலவையாக புத்தகத்தை முடித்திருக்கிறார். அச்சமும் நெகிழ்ச்சியும் துயரமும் பரிதாபமும் நிறைந்த மக்களின் குரலோடு
இலக்கியத்தனத்துடன் அமைந்த வரலாற்று பதிவாக இருக்கிறது இந்த புத்தகம்.
ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை
மிக்காயேல் ஃபெரியே
தமிழில் - சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர்
தடாகம் வெளியீடு.
அலட்சியம், அறியாமை, சுயநலம் மற்றும் நுகர்வுவெறி இவற்றால் மனிதன் தனக்குத்தானே பேராபத்துகளை உருவாக்கிக் கொள்கிறான். அத்தகைய பேராபத்துகள் அவனுக்கு அவ்வபோது படிப்பினைகளை கற்றுத் தந்துகொண்டே இருக்கிறது. ஃபுக்குஷிமாவும் ஒரு படிப்பினைதான். அது ஒரு குறியீடு. அணுஉலைகளின் ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கை குறியீடு. சமூகத்தின்மீதும், இயற்கையின் மீதும், வருங்காலத்தைப் பற்றியும், அக்கறை கொண்ட எவரும் அந்த குறியீட்டை அலட்சியப்படுத்த இயலாது. அதனை விரிவாக அலசும் இந்த புத்தகத்தையும்தான்.