நூரன் சிஸ்டர்ஸ்.

மேடையில் ஒரு பெண் உட்ச கதியில் பாட அவரது சகோதரி அருகிலிருந்து அதற்கு தலையாட்ட அவர்களை கலாய்த்து மீம்ஸ் என்ற பெயரில் வீடியோக்கள் உலாவந்ததைக் கண்டு நாம் சிரித்திருப்போம். வீடியோ மட்டுமல்ல புகைப்படமாகவும் அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக கேலி செய்து விமர்சிக்கப்பட்டவர்கள் அவர்களே ஆவார். சித்தம் கலங்கியவர்களை தெளிவானவர்களாகவும்,  தெளிவானவர்களை சித்தம் கலங்கியராகவும் காட்டுமிடம் (கருதுமிடம்) இந்த பொதுவெளி என்பதற்கு அவர்களே சாட்சி. உண்மையில் அந்த பெண்கள் இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் பிரபலமான பாடகர்கள் என்பதுதான் முரண்பாடு. அவர்கள்தான் "ஜோதி நூரன்" மற்றும் "சுல்தானா நூரன்". செல்லமாக நூரன் சிஸ்ட்டர்ஸ். 

Nooran Sisters

நூரன் சகோதரிகள் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இஸ்லாமிய இறைநிலை நடைமுறையாக கருதப்படும் சூஃபி பாடல்களை பாடக் கூடியவர்கள்.  இவர்கள் "ஷாம் சௌராசியா கரானா" என்ற பாரம்பரிய இசை மற்றும் “மிராசி” என்ற இசை மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். இவர்களது தந்தை "உஸ்தாத் குல்ஷன் மீரும்" ஒரு பாடகர். இவர்களது தாத்தா மறைந்த "உஸ்தாத் சோஹன் லால்" மற்றும் பாட்டி "பிபி நூரனும்" அவர்களது காலத்தில் நன்கு அறியப்பட்ட பாடகர்களாவார். நூரன் என்பது அவர்களது குடும்பப் பெயராக இருக்க, அது ஒரு அழுகிய இசைக் குடும்பம். 

என்னதான் இசைக் குடும்பமாக இருந்தாலும் நூரன் சகோதரிகளின் சிறு வயது மற்றும் இளமை காலங்களில் கடினமான சூழல்களே நிழவியது. அந்த சூழலிலும் அவர்களது தந்தை இசைப் பாடங்களுக்கு பயிற்சியளித்தார். சுல்தானுக்கு ஏழு வயது, ஜோதிக்கு ஐந்து வயது இருக்கும்போது இவர்களின் திறமையை தந்தை கண்டுகொண்டார். அவரே அவர்களுக்கு குரு ஆனார். பின்னர் சிறுமிகளான நூரன் சகோதரிகள் தனது பாட்டியின் பிரபல பாடலான "குல்லி விச்சோ நி யார் லேப் லே' என்ற "புல்லே ஷா கலாம்" பாடலை தபேலா மற்றும் ஆர்மோனியம் வாசித்தபடியே பாடி ஜலந்தர் முழுவதும் புகழ்பெற்றனர். 2010 ஆம் ஆண்டு "இக்பால் மகால்" என்ற கனடாவைச் சேர்ந்த இசை விளம்பரதாரர் இவர்களை வெளிஉலகத்திற்கு காட்டினார். நிக்கி ஆவாஸ் பஞ்சாப் தி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியும் இவர்களுக்கு புகழைச் சேர்த்தது. 2013 ஆம் ஆண்டு நகோடரில் உள்ள பாபா முராத் ஷா தர்காவில் நடந்த நிகழ்ச்சியில் "அல்லாஹ் ஹூ" என்ற பாடலை இவர்கள் நேரடியாக பாட அது யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக மாறியது. எ.ஆர்.ரஹ்மானின் இசையில் "ஹைவே" திரைப்படத்தில் வெளிவந்த "படகா குட்டி" என்ற பாடல் இவர்களை திரையுலகத்திற்குள் கொண்டுவந்தது. அதற்குபின் தங்கல், சுல்தான், மிர்ஷியா, ஜப் ஹாரி, டைகர் ஜிந்தா ஹை, சாஹேப், ஸீரோ, பாரத் போன்ற ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழில் போகன், பாயும்புலி போன்ற தமிழ் திரைப்படங்களிலும் இவர்கள் பாடல்களை பாடியிருக்கின்றனர். திரைப்படங்கள், திருவிழாக்கள், உலகமெங்கும் நிகழும் இசை நிகழ்ச்சிகள், தனி ஆல்பம் என நூரன் சகோதரிகள் நமது கேலி கிண்டல்களுக்கு அப்பாற்பட்ட அளவிற்கு இன்று பெயரையும் புகழையும் சேர்த்து வைத்திருக்கின்றனர். கிமா, மிர்ச்சி, ஸ்கிரீன், பிலிம்பேர், போன்ற பல இசை விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள். 

மீம்ஸ்கள், கலாய்த்தல் வகை வீடியோக்கள் இவற்றிற்கு மத்தியில் நூரன் சகோதரிகளைப் பற்றி அறிந்துகொண்டது மட்டுமல்லாது அவர்களது பாடல்களை கேட்கும்படியும் நேர்ந்தது. அவற்றில் சிலவற்றை தொகுத்தும் வைத்திருக்கிறேன். அவைகள் நிச்சையம் உங்களுக்கும் பிடிக்கும், அது அவர்களைப்பற்றி இதுவரை இருந்த கண்ணோட்டத்தை மாற்றும் என நினைக்கிறேன். 

பாடல்களைக் காண: