ஊடல் நிமிர்த்தம்.

ன்ன சார்?... இன்னக்கி ரொம்ப டல்லா இருக்கிற மாதிரி தெரியுது. 

அது ஒன்னுமில்ல காலையிலேயே வீட்ல சண்டை அதுதான்.

அப்பன்னா 'ஊடல் நிமிர்த்தம்' என சொல்லுங்க.

அப்படினா?...

மருத நிலத்திற்குறிய உரிப்பொருள்.

உரிப்பொருள் என்றால்?...

மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கம்.  Behavioural Sciences என்ற நடத்தை அறிவியல். தொல்காப்பியர் இதனை "மெய்பாட்டியல்" என்ற தலைப்பில் விளக்கியுள்ளார்

ஊடலுக்கு வருவோம். 

கணவன்-மனைவி, காதலன்-காதலி, இவர்களுக்கிடையே நிகழும் தற்கால பிரிவு ஊடலாகும். 

கருத்து - வேறுபாடு, 
விருப்பு - வெருப்பு,
சண்டை - சச்சரவு, 
நீயா? - நானா?
போடா - போடி 
இவற்றால் ஏற்படும் பொய்யான கோப உணர்ச்சியால் விளைவது. ஒருவகை உளவியல் சார்ந்து தோன்றுவது. 'பிணக்கு' பிணக்கிக்கொள்ளுதல் என்பது பொருத்தமாக இருக்கும். 

Just a temporary quarrel between husband and wife. 

ஊடல் சாதாரண மேகம் போல கடந்து விடக் கூடியது. இறுதியில் கூடலில் முடியக் கூடியது. ஊடல் இல்லையென்றால் தாம்பத்தியத்தில் சுவையே இருக்காது. அந்த ஊடல் மிகினும் குறையினும் பயன் தராது. 

Life is both quarreling and coming together.

ஆண்: காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா

பெண்: ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ஆண்: ரெண்டு கண்களும் ஒன்று
ஒன்றின் மேல் கோபம் கொள்வதா

பெண்: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

ஆண்: ஊடல் கூட அன்பின் அம்சம்

பெண்: நாணம் வந்தால் ஊடல் போகும் 

ஆண்: பொன் மானே கோபம் ஏனோ

என்ற அழகிய ஜோடிப் பாடலை கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். 
 
ஊடலின் வழியே பிரிவின் வலி புரியும். அது தவறுகளை உணர்ந்து கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் உதவும். ஒரு மகிழ்ச்சிகரமான ஜோடிக்கு அவ்வபோது நிகழும் ஊடலும் கூடலும் பிணைப்பை இறுக்கும். 

The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained. 

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

வள்ளுவர் சொன்னது சார். அவரே ஊடலை துனி, புலவி என பிரித்திருக்கிறார். 

துனி - ஊடலின் உச்சகட்டம்
புலவி - ஆரம்ப நிலை

ஊடல் நேரத்தில் மனம் வேறு சிந்தனைகளிலும் செயல்களிலும் ஈடுபடாது. அது பிரிந்த தன் துணையைத் தேடிக் கொண்டேயிருக்கும்.  

தன் ஆவலை தனிக்காதபோது (ஆவல் அவனது தேவையைப் பொருத்தது) தலைவன் தலைவிமீது கொள்வது ஆண் ஊடல். அது அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்காது. 

தலைவியை பிரிந்து தலைவன் வேறொரு பெண்ணை நாடி பிறகு திருந்தி வரும்போது தலைவி கொள்வது பெண் ஊடல். வேறு சில காரணங்களுக்காகவும் இருக்கலாம். 

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி: முனை எழத் 
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! 

வலிமையான கால்களை உடைய எருமைமாடு செங்கழுநீர் பூக்களை மேய்ந்த பின்பு நீர்ப்பரப்பில் பூத்திருக்கும் தாமரை மலர்களை உண்ணாது சலிப்புடன் அவற்றை பறித்து தண்டுகோலில் நாற்றை சுமந்து செல்லும் உழவரைப்போல தன் கொம்பில் சுற்றிக்கொண்டு ஒரு வீரனைப்போல நடந்து சென்று அருகிலிருக்கும் வெண்மணல் நிறைந்த குன்றில் உறங்கும். அத்தகைய ஊரினை கொண்டவனே!. தற்போது நீ என்னை விரும்புவதுபோல நடித்து என்னை அணைத்துக்கொள்கிறாய். ஆனால் நான் மறக்கவில்லை. போரில் பகைவர்களை அழித்த செவ்வேல் வீரனாகிய 'விரா அன்' என்பவனின் 'இருப்பையூர்' என்னும் ஊரைப்போல என் அழகு இருந்தது. செழித்த என் கூந்தல் அழகுபெற அரும்புகள் கோர்த்த சூடிய மாலை வாடியது போல அதை வீணாக்கிய பகைவன் நீ. உன் பழைய செயலை நான் மறக்கவே மாட்டேன். 

தாமரையை தலையில் சுமந்து தூங்கும் எருமை என்றில்லாமல்  தலைவனை நேரடியாகவே டேய் எருமை அல்லது Buffalo என மிக நாகரீகமாக திட்டியிருக்கலாம். 

சார்! இது நற்றிணையில் வரும் தலைவியின் ஊடல். பரத்தை எனப்படும் விலைமகளிடம் சென்று தலைவன் திரும்புகிறான். அவனோடு தலைவி ஊடுகிறாள். ஊடல் நிமிர்த்தம், மருதத்திணை. பரணர் என்பவர் இயற்றியது. 'யான் மறந்து அமைகலனே'- I will not forget that comfortably அல்லது I will not forget that you are my enemy!. கொஞ்சம் வலுவான ஊடல்தான். பெண் உடலாச்சே!. 

உண்பதை காட்டிலும் உண்டது செரித்தல் இன்பமாகும். அதுபோல காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தைவிட ஊடிப்பெறும் இன்பமே இனிமையானது. 

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

இதுவும் வள்ளுவர் சொன்னதுதான் சார்... 

கேட்க நல்லாதான் இருக்கு. இலக்கியத்தைத் தவிர்த்து இயல்பு வாழ்க்கைக்கு இது ஒத்துவருமா?

ஏன் வராது சார்?.. நிச்சையமாக ஒத்துவரும். 

கலைத்துவிட்டிருந்த பொருட்கள்
போட்டது போட்டபடியே
கிடக்கிறது...
நுழைந்ததும் 
கொஞ்சிக் குலாவும் பப்பி
சுணங்கியபடி 
சுருண்டிருக்கிறது...
பிடித்த பாடல்
ஒளித்துக் கொண்டிருந்த
தொலைக்காட்சி
வருகையறிந்து
மாற்றப்படுகிறது...
வாங்கி வந்த பூக்கள்
வைத்த இடத்திலிருந்து
வாசனையை
வீசிக் கொண்டிருக்கிறது...
ஆவலுடன் 
திறந்து பார்க்கும்
என்ன சமையல்
அடுப்படியில்
அதனிலிருக்கிறது...
ஒரேயொரு தலையனையைச் சுமந்த
மெத்தையில்
ஒன்றிரண்டு புதிதாக
முளைத்திருக்கிறது...
முன்னமே தூங்கிவிடும்
படுக்கயறை விளக்கு
கேலி செய்து
சிரித்துக் கொண்டிருக்கிறது...
அத்தனையும் கடந்து
நாளைக்கு விடிந்துவிடும்
நம்பிக்கையில்
கண்மூடுகிறது
காலையில்
நமக்குள் நிகழ்ந்த ஊடல்...

இறுதியாக

ஒரு Sorry அல்லது சுருக்கமாக ஒரு ஹார்ட்டின் symbol, அல்லது Emoji முத்தம் (சிலசமயம் Emoji முத்தம்கூட இனிமையானதுதான் சார்) இவற்றில் ஒன்றை உங்கள் மனைவியின் செல்போனிற்கு அனுப்புங்கள். பிறகு புரியும் உடல் நிமிர்த்தம். 

'ஊடுவதே கூடத்தான்'... சார்...