இனி இதுதான் ஆப்கானிஸ்தான்.



ந்த வீடியோ பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க, மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க, என சொல்லும் யூடியூப் சேனல்கள் எக்கச்சக்கம் இருக்கின்றன. ஆன்மீகம் தொடங்கி அடுப்பங்கரை சமையல் வரை எல்லாவற்றையும் காட்டவும் கற்றுத்தரவும் இருக்கும் அந்த சேனல்களை, ஒரு ரூபாய் செலவில்லாமல் தொடங்கி, பின்நாட்களில் வீடு வாசல் தோட்டம் பங்களா சொகுசு கார் என வாங்கி, கோர்ட் கேஸ் ஜெயில் சென்று பலவற்றை சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள்.... நிற்க... அத்தகைய யூடியூப் சேனல்களில் சுற்றுலா தொடர்பான சிலவற்றையும், தெரு உணவகங்களைப் பற்றிய சேனல்களையும், இயற்கை சார்ந்தவைகளையும் அடியேன் சேமித்து வைத்திருக்கிறேன். கேஸ் அடுப்பு அடைப்பு நீக்குவது... பிரிட்ஜ் சுத்தம் செய்வது... வாசிங் மிஷின் டிரம் கழுவுவது... திடீர் ரசம் வைப்பது... கோதுமை தோசை சுடுவது... எல்லாம் எப்படி செய்வது என கற்றுத்தரும் சேனல்களை கு/த என்ற முறையில் அவற்றையும் பார்த்து வருவது வேறு விஷயம். அந்த வகையில் சமீபத்தில் ரசித்த ஒரு யூடியூப் சேனல்தான் "Afghanistan HD". இந்த யூடியூப் சேனலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் வீடியோக்கள் பலவற்றை தொகுத்து வைத்திருக்கின்றனர். 

ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கெல்லாம் இரட்டை கோபுர தாக்குதலும், தாலிபான்களை அழிப்பதாக தொடங்கிய போரும், 
அந்த போரின் விளைவுகளும், 
அந்த போருக்கு முக்கியஸ்தராக கருதப்படும் பின்லேடனும், டர்பனும் தாடியும் கொண்ட தீவிரவாதிகள் என கருதப்படுபவர்களும் நியாபகம் வரும். மேலும் ஆப்கானிஸ்தான் நாடு என்பது ஓபியம் என்ற போதைப்பொருள் விளையுமிடம், உலகின் ஏழ்மையான மற்றும் வாழத் தகுதியற்ற நாடு, கலவரம் கழுத்தறுப்பு எப்போதும் துப்பாக்கி - டுமீல், வெடிகுண்டு - டமால் சப்தம் கேட்கும் நாடு என்ற பிம்பங்களையே நாம் கண்டுவந்திருக்கிறோம், அல்லது அவ்வாறு நமக்கு காட்டப்பட்டிருக்கிறது. தற்போதுகூட உள்நாட்டு கலவரங்கள் நிகழ்ந்து மீண்டும் தாலிபான்களின் கைக்கு ஆட்சி சென்றிருக்கிறது. செய்திகள், ஆவணங்கள் என்ற வகையில் அவ்வாறான அய்யோ! பாவம் வீடியோக்களை தவிர்த்து இந்த யூடியூப் சேனலில் இதுதான் ஆப்கானிஸ்தான் என்ற வகையில் பல வீடியோக்கள் இருக்கின்றன. அவைகள் முறையே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் இயல்பான வாழ்க்கையை காட்டுகின்றன. அவற்றுள் ஒன்றிலாவது நாட்டின் போர் பாதிப்போ, அதனை சார்ந்த வாழ்வியலோ, நடப்பு அரசியல் நிலவர கலவரமோ எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

🪶 ஆப்கானிஸ்தானின் காபூல், ஜலாலாபாத், காஷினி, பெஷாவர், கந்தஹார், ஹெராத், பல்கு, பாமியான் போன்ற பெரும் நகரங்களில் இருக்கும் பரபரப்பான தெருக்கள், அங்கிருக்கும் சந்தைகள், உணவகங்கள், மக்கள் கூடும் இடங்கள், நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் இவைகள் சார்ந்த வீடியோக்கள்... 

🪶 அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானின் சப்ரஹர், லால்பூர், பக்திகா, சாவ்கே, சுரோபி, குனார், தோரா போரா மாவட்டங்களின் அடித்தட்டு கிராமத்தில் இருக்கும் எளிமையான கடைகள், விவசாய பண்ணைகள், அதில் விளையும் பொருட்கள், கால்நடை சந்தைகள், அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை சார்ந்த வீடியோக்கள்...  

🪶 நாட்டின் கொடிநாள் மற்றும் சுதந்திரதின கொண்டாட்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள், கிராமம் தொடங்கி நகரம் வரை வெவ்வேறு பொருளாதார நிலையிலிருக்கும் மக்களின் திருமண கொண்டாட்டங்கள் (அத்தனையும் அழகு), ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களின் வீடியோக்கள்... 

🪶 வெளிச்சத்தின் நிறம் என போற்றப்படும் "நூரிஸ்தான்" பள்ளத்தாக்கின் கண்கவர் இயற்கை காட்சிகள் மற்றும் தோராபோரா மலைத்தொடரின் காட்சிகள், KPK என செல்லமாக அழைக்கப்படும் ஆப்கன்- பாகிஸ்தான் எல்லையான கைபர் பக்துன்க்வாவின் காட்சிகள்  அடங்கிய வீடியோக்கள்... 

🪶 காஃபா நீர்த்தேக்கம், காமா பிக்னிக் ஸ்பாட், தருந்தா  அணைக்கட்டு, காபூலின் பூங்கா என கவலைகளை மறந்து மக்கள் பொழுதுபோக்கும் இடங்களைப் பற்றிய வீடியோக்கள்... 

🪶 உணவை எடுத்துக்கொண்டால் பூண்டு இஞ்சி சேர்த்து செய்யப்படும் பெஷாவர் மட்டன் கறி, மாடு அல்லது ஆட்டுக்கறியில் செய்து காரட் சீவலை கொண்டு அலங்கரிக்கப்படும் காபுல் புலாவ், ஆட்டுக்கறியுடன் கொழுப்பையும் சேர்த்து முழு தக்காளி, உருளைக்கிழங்கு, இன்னபிற கலந்து செய்யப்படும் பெஷாவர் தம் புக்த், பாகிஸ்தான் புகழ் சாப்ளி கபாப், தந்தூரியில் காயும் மாட்டிறச்சி டிக்கா, சம்சாவை போல பிரபலமான போலானி போன்ற ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற உணவுகள் கிடைக்குமிடங்களைப் பற்றிய வீடியோக்கள்... 

🪶 ஆச்சரியமாக ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த புத்தக திருவிழா, உடற்பயிற்சி நிலையம், 2020 புத்தாண்டு கொண்டாட்டம், கார்காலம், இலையுதிர் காலம்,  கோடைக்காலம் என வெவ்வேறு காலநிலைகள் சார்ந்த வீடியோக்கள்...

🪶 ரோடு டிரிப் என சொல்லக்கூடிய பயண வீடியோக்கள்

என குட்டி குட்டியாக பத்து அல்லது பன்னிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஓடும் வீடியோக்கள் இந்த சேனலில் இருக்கின்றன. HD மற்றும் 4K தொழில்நுட்பத்திலிருக்கும் அந்த வீடியோக்களை டிவி போன்ற பெரிய திரையில் ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய இசையின் பின்னணியில் பார்ப்பது கூடுதல் அழகைத் தருகிறது. சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இவற்றைத் தவிர இதிலென்ன இருக்கிறதென இந்த வீடியோக்களை அவ்வளவு எளிதாக ஒதுக்க முடியாது. ஏனென்றால் இதில் காணப்படும் மக்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் கடவுள், தலைவர்கள், ஆழ்பவர்கள் இவர்களின் துணையின்றி எதோவொரு நம்பிக்கை தெரிகிறது, அது நாளையைப் பற்றிய வெளிச்சத்தை எங்கும் பரப்புகிறது. அதுமட்டுமல்லாது ஒரு நாடோ ஒரு இனமோ ஒரு குழுவோ அல்லது தனிப்பட்ட ஒருவனோ அவர்கள் வீழ்ந்த கதையை ஆராய்வதைவிட எழுந்து நடைபோடும் நிகழ்கால வாழ்வை அறிந்துகொள்வது மேம்பட்ட பன்பாடாக இருக்கும் அல்லவா!. 

இனி இதுதான் ஆப்கானிஸ்தான் என்ற கண்ணோட்டத்தில் இருக்கும் வீடியோக்களைக் கொண்ட அந்த 

யூடியூப் சேனலை காண :