143, சஹாரா தெரு, அல்ஜீரியா.


லக மக்களின் இயக்கமே முடங்கிப் போகும் அளவிற்கு ஒரு கிருமி ஆட்டுவித்த தருணம் அதாவது கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது அவரச அவசரமாக திருப்பூர் நோக்கி செல்ல வேண்டியிருந்தது. இ-பாஸ் என்ற நடைமுறையெல்லாம் பழக, வெகு இயல்பாகச் சென்றுவந்த சாலையில் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படங்களில் வருவதுபோல் பயத்துடன் பயணிக்க நேர்ந்தது. ஒரு டீ குடித்தால் தேவலாம் சார்.. தம் அடித்தால் இதமாக இருக்கும்... என்ற நினைப்பில் பயணத்தின்போது சாலையோரத்தில் கடையைத் தேடினோம். ஆனால் பொது முடக்கம் என்பதால் அனைத்து கடைகளும் மூடியிருந்தது. பெட்ரோல் நிரப்பிய இடத்திலிருந்தவரிடம் இங்கு ஏதாவது கடை இருக்கிறதா? என கேட்க, அவர் சிறிதுதூரம் சென்றதும் ஒரு கடை இருப்பதாகவும் அடையாளத்திற்கு புளியமரத்தையும் சூலாயுதம் நிறைந்த கோவிலையும் சுட்டிக் காட்டினார். அவ்விடத்தில் ஒரு குடிசைவீடு மட்டுமிருந்தது. அதுதான் டீக்கடை என தெரியவந்தது. எங்கள் வாகனம் அந்த குடிசையின் முன் நிற்க அந்த குடிசையின் கதவு அவசரமாக மூடப்பட்டது. அதிலிருந்து ஒரு வயதான பெண்மணி வெளிவந்து ஓடத் தொடங்கினாள். எங்களை ஏதோ அரசாங்க அதிகாரிகள் என நினைத்து கடையை மூடிவிட்டு ஓடிய அவளைப் பிடித்து தேற்ற வெகுநேரமானது. பிறகு எங்களுக்கென சூடாக தேனீரை தயாரித்துக் கொடுத்தாள். அவளது சிறிய டீக்கடையில் முறுக்கு சிப்ஸ் போன்ற சில தின்பண்டங்களை வாங்கிக் கொண்டோம். அவைகள் அனைத்தும் பழைய சரக்குகள் என நினைத்திருக்க புதியதாகவும் சுவையாகவும் இருந்து. தண்ணீர் பாட்டில், சிகரெட் (எப்போதும் புகைவிடும் பிராண்ட் உட்பட) சில இனிப்புகளும் அவள் கடையில் கிடைத்தது. சரி! இந்த பொது முடக்கத்தில் இதெல்லாம் எப்படி உங்களுக்கு கிடைக்கிறது என கேட்க அந்த முதியவள் பதிலளிக்க மறுத்துவிட்டாள். கடைசியில் அழகான புன்னகையை அவள் உதிர்க்க அதையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். அசாதாரண சூழ்நிலையைத் தவிர்த்து சாதாரண நிலையில் அந்த வயதான பெண்மணி வைத்திருக்கும் கடைக்கு சென்றிருப்போமா என்பது சந்தேகமே... சரி.. இந்த கதைக்கும் இந்த டாகுமெண்டரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றால்? .. நிச்சையம் இருக்கிறது. இந்த டாகுமெண்டரியிலும் ஒரு வயதான பெண்மணி நெடுஞ்சாலை ஒன்றில் கடை வைத்துள்ளாள். அது எத்தகையது?.. அதில் என்ன கிடைக்கும் (அனுபவங்கள் உட்பட)? என்பதை தெரிந்துகொள்ள 143, சஹாரா தெரு, எல் மெனியா மாவட்டம், அல்ஜீரியா என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும் வாருங்கள். 

வடக்கே மத்திய தரைக்கடலிருந்து சஹாரா பாலைவனத்தின் ஒரு பகுதியை கடந்து அல்ஜீரியாவின் தெற்கு நோக்கி நேஷனல் 1 என்ற சாலை செல்கிறது. நாட்டின் வடக்கு தெற்கை இணைக்கும் மிக நீண்ட அந்த சாலையில் எல் மெனியா என்ற மாவட்டத்தில் தரிசு நிலத்தில் இருக்கிறது மலிகாவின் தேனீர் விடுதி. செவ்வக வடிவ கட்டிடம், அதில் தடுக்கப்பட்ட சிறிய இரண்டு அறைகள், ஒழுங்கற்ற சன்னல்கள், ஒரு மேசை, இரண்டு மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்ட அந்த தேனீர் விடுதியை 1994 ஆம் ஆண்டு முதல் தன்னந்தனியாக மலிகா நடத்தி வருகிறார். நகரத்திலிருந்தும் உறவுகளிடமிருந்தும் ஒழுக்கம் கெட்டவள் என்ற தனக்கு கிடைத்த அவப்பெயரிலிருந்தும் விலகியிருக்கும் அவளுக்கு இரண்டு நாய்களும் மிமி என்ற பூனையும் மட்டும் துணையாக இருக்கிறது. டீ, சிகரெட், முட்டை, தண்ணீர் மற்றும் பழங்கள் கிடைக்கும் அவளது விடுதிக்கு நேஷனல் 1 சாலையில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டிகள், சாகசம் விரும்பும் சுற்றுலா பயணிகள் என சிலர் அவ்வபோது வந்துபோகிறார்கள். தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை எதிர்பார்த்தும் ஒவ்வொரு நாளும் அமைதியாக ரசிக்கும் அவளுக்கு அருகில் வரப்போகும் எரிவாயு நிலையமும் உணவு விடுதியும் ஆபத்தாக இருக்கப்போகிறது. இந்த டாகுமெண்டரி மலிகாவிற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை மறைமுகமாகவும் அவளது தினசரி வாழ்வை நேரடியாகவும் காட்டுகிறது. 


மலிகாவின் தேனீர் விடுதிக்கு உள்ளேயும் வெளியோயும் ஓரிடத்தில் கேமராவை நிலையாக நிறுத்தி எடுக்கப்பட்ட காட்சியமைப்பே இந்த டாகுமெண்டரியை சிறந்ததாக்குகிறது. சஹாராவின் சுட்டெரிக்கும் சூரியன் செரிந்த பகலும், அதற்கு நேர்மாறான நிலவு குளிரும் இரவும், காட்சிகளை அழகாக்குகிறது. அவைகள் ஓரிடத்தில் கண்காட்சிக்காக குவிக்கப்பட்ட கேன்வாஸ் ஓவியங்கள் போன்று இருக்கிறது. இயக்குனரின் நண்பரும் எழுத்தாளருமான "சவ்கி அமாரி" என்பவரது "நேஷனல் 1" என்ற புத்தகத்தில் வரும் பெண்மணியைத் தேடிய பயணம் இந்த டாகுமெண்டரி. 

143 rue du desert
(143 Sahara Street) 
Directed by - Hassen Ferhani
Written by - Hassen Ferhani
Cinematography - Hassen Ferhani
Country - Algeria
Language - Arabic
Year - 2019.

பாலைவனத்தில் தனியாக இருக்க விரும்பும் ஒரு பெண் எத்தகைய அனுபவங்களை பெறுகிறாள். அவள் சந்திக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், அவளது கடந்த காலத்தின் கடினமான நிகழ்வுகள் மற்றும் நிகழ்காலத்தின் எதிர்பார்ப்புகள் எத்தகையது என இந்த டாகுமெண்டரி காட்டுகிறது.  மலிகாவிடம் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு மௌனம் பதிலாக இருக்க அவ்வபோது அவளிடம் நகைச்சுவையும் மிளிர்கிறது. பௌசியா என்ற தனக்கு ஒரு பெண் இருந்ததாகவும் அவள் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் இறுதியாக அவள் கூறும் கதை நெகிழச் செய்கிறது. பாலைவனம் போன்ற பகுதியில் நீண்ட ஒரு பயணத்தில் இளைப்பாறும் அவளது கடையைப் போன்று அவளது கதையும் ஆசுவாசமளித்தாலும்  இவையெல்லாம் சிறிது காலத்தில் மாறிவிடப்போகிறது என்பது சற்று நெருடலாக இருக்கிறது. 

❗சவ்கி அமாரியின் புத்தகத்தை தழுவி ஹென்றி-ஜாக் போர்ஜியாஸ் என்பவர் நேஷனல் -1 என்ற பெயரில் எடுத்த டாகுமெண்டரியிலும் மலிகாவின் தேனீர் கடையை காணலாம்❗

"வலியது வாழ் கலி" யில் கிடைத்ததையெல்லாம் விழுங்கும் வாய்களுக்கு மத்தியில் சிறு பூச்சியென மலிகாவைப் போல், அந்த பெயர் தெரியாத தேநீர் கடை பெண்மணியைப் போல் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

டாகுமெண்டரியைக் காண