நேற்று மட்டுமே...
அனிமேஷன் திரைப்படங்கள் என்றால் குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும். விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் கற்பனை கதாபாத்திரங்கள் அதில் சாகசம் செய்வதாக இருக்கும். அதனையும் தவிர்த்து உண்மைக் கதைகள், வரலாறு, நாவல்கள், காமிக்ஸ் இவற்றைக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களும் இருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களை எடுப்பது ஜப்பானியர்களுக்கு கைவந்த மன்னிக்கவும் கணினி வந்த கலை. அதில் ஒன்றுதான் "Omoide Poro Poro
(Only Yesterday)". அனிமேஷன் திரைப்படங்களுக்கான விதியை மீறி அனைவரையும் கவரும் வகையில் குறிப்பாக இளைஞர்கள் அதிலும் பெண்களை கவரும் வகையில் இந்த திரைப்படம் எதார்த்தமாக அமைக்கப் பட்டிருக்கிறது.
''டேகோ ஒகாஜிமா'' என்பவள் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். அன்றாடம் செய்யும் அதே அலுப்புத்தட்டும் வேலை ஒருபுறம், ...27 வயதாகிறது, அப்புறம் எப்ப கல்யானம்?'... என்ற பார்ப்பவர்களிடமிருந்து வரும் பரிதாப கேள்வி ஒருபுறம், ஒரு சொடுக்கில் எல்லாம் கிடைத்தாலும் நெருக்கித் தள்ளும் நகர வாழ்க்கை ஒருபுறம், இவற்றிலிருந்து விலகி சிறிது நாட்கள் தனது கிராமத்திற்குச் செல்ல அவள் முடிவெடுக்கிறாள். அந்த வருடத்தின் சாப் பூக்கள் அறுவடை காலத்திற்கு (Safflower - சூரியகாந்தி பூவைப் போன்றது, குங்குமப்பூவின் சைனா மேக்) தனது அண்ணன் குடும்பத்திற்கு உதவவும், தன்னை புதுப்பித்துக் கொள்ளவும் கிராமத்தை நோக்கி ஓர் இரவில் இரயிலில் அவள் புறப்படுகிறாள். இரயில் முன்னேற ஒரு பள்ளி மாணவியென அவள் நினைவு இருபது வருடம் பின்னோக்கி பயணிக்கிறது. தனது தோழர்களுடன் பள்ளி முடிந்து விடுமுறைக்கு செல்லும் சிறுமியாக அவள் மாறுகிறாள். திரைக்கதையில் கற்பனையான பத்துவயது சிறுமி கதாபாத்திரம் இணைகிறது. அதாவது நிகழ்கால வளர்ந்த டேகோ ஒகாஜிமாவா மற்றும் சிறுமி டேகோ ஒகாஜிமாவா என இருவர் தோன்றுகின்றனர்.
இரயிலிருந்து இறங்கியதும் அவளை அழைத்துச் செல்ல ''தோஷியோ" என்பவன் காத்திருப்பதை நினைத்து டேகோ ஒகாஜிமா ஆச்சரியமடைகிறாள். சிறுவயது நண்பனான அவனுடன் அதே பத்துவயது கற்பனை சிறுமியும் தொடர்கிறாள். தோஷியோவுடனான பயணம் மற்றும் கிராமத்தில் அவளுக்கு கிடைக்கும் அனுபவம் இவற்றினூடே தனது நினைவுக்குள் அவள் மீண்டும் நுழைகிறாள். குழந்தை தன்மையான மனம், அதற்குள் ஏற்படும் ஏக்கம், பள்ளி வாழ்க்கை, விளையாட்டு, பொழுதுபோக்கு, பருவமடைதல், அதனால் ஏற்படும் சிக்கல்கள், காதல், நிராகரிப்பு, பிரிவு என கற்பனை சிறுமி அவளது நினைவுகளை தூண்டி விடுகிறாள். மேலும் தான் தற்போது இருக்கும் நிலைக்கு தோஷியோவின் அன்பும் அக்கறையும் ஒருவிதத்தில் உதவியாக இருந்ததையும் அவள் உணர்கிறாள். இறுதியில் கற்பனை சிறுமியை விடுத்து தனது சுயத்தை உணரும் அவள் தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் எப்படி பார்க்கிறாள்?... இயற்கையோடு இசைந்து வாழும் கிராமத்தை விட்டு மீண்டும் அவள் நகரத்திற்கு சென்றாளா?... தோஷியோவின் அன்பை எவ்வாறு எதிர்கொள்ள தயாரானாள்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
1982 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த காமிக்ஸ் புத்தகத்தின் கதையை ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற அனிமேஷன் நிறுவனம் "ஸ்டுடியோ கிப்லி (Studio Ghibli)" திரைப்படமாக தயாரித்திருந்தனர்.
இதன் கதை ஜப்பானின் "யமகாடா" பிராந்தியத்தின் என்ற மாவட்டத்தின் பகுதிகளில் நடப்பதாக இருந்ததால் அப்பகுதியின் இரயில் நிலையம், நகர அமைப்பு, கிராமம், இயற்கை காட்சிகள் அனைத்தும் அனிமேஷன்தானே என்றில்லாமல் அப்படியே மாறாமல் படைக்கப் பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் முகபாவனைகள் மற்றும் வாயசைப்பு இவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக கற்பனை சிறுமிக்கும் 27 வயதான உள்ள இளம் மற்றும் முதிர்ந்த டேகோ ஒகாஜிமாவின் குரலின் ஒற்றுமையை உதாரணமாக சொல்லலாம். ஐப்பானிய நாட்டுப்புற பாடல்களுடன் ஹங்கேரி மற்றும் பல்கேரியா நாட்டு பாடல்களின் கலவையான இசை நேர்த்தியாக இருக்கிறது. 1991 -ஆண்டு வெளிவந்த இந்த அனிமேஷன் திரைப்படம் அனைவரையும் கவர்ந்து அதிக வசூலையும் பொற்றது. மேலும் திரைப்படத்தின் இறுதியில் வரும் ...ஐ வா ஹனா கிமி வா சோனோ டேனே... என்ற பாடல் (இதற்கு ...காதல் ஒரு மலர் நீ தான் விதை... என்று பொருள்) இளைஞர்களின் விருப்பமாக அமைந்தது. 2016 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
"இயற்கையிலிருந்து மக்கள் தங்களைப் பிரித்துக் கொள்ளும் அளவிற்கு, அவர்கள் மையத்திலிருந்து மேலும் மேலும் சுழல்கிறார்கள்".... என்ற ஜப்பானின் இயற்கை விவசாயி "மசனோபு புக்குவோக்காவின்" இயற்கை மற்றும் அது சார்ந்த விவசாய முறைகளை இந்த திரைப்படம் மறைபொருளாக கொண்டிருக்கிறது. அது இளைஞர்களை நகரங்களிருந்து கிராமங்களுக்கு ஈர்க்கத் தூண்டுகிறது.
Omoide Poro Poro
(Only Yesterday)
Directed by - Isao Takahata
Written by - Hotaru Okamoto
Yuko Tone
Cinematography - Hisao Shirai
Music - Katz Hoshi
Country - Japan
Language - Japanese
Year - 1991.
நமக்கான ஒவ்வொரு நாளையும் நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவே பிறந்த நாளின்போது மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பதுபோல் ஒரு வயதையே ஊதிவிடுகிறோம். இருந்தபோதும் வாழ்க்கை என்றால் வாழனும்...ப்பா என எதையோத் தேடி எங்கோ ஓடிக் கொண்டிருக்க அல்லது பறக்க கடைசியில் நமக்கு மிஞ்சுவதெல்லாம் நேற்று மட்டுமே. அதாவது கடந்தகால நினைவுகள் மட்டுமே. இந்த திரைப்படத்தில் வரும் டேகோ ஒகாஜிமாவின் கற்பனை சிறுமியைப் போல் எல்லோறிடமும் வெளித்தெரியாமல் இருக்கும் சிறுமியோ சிறுவனோ அதை அவ்வபோது நினைவுபடுத்த தவறுவதில்லை.