முதல் வாரம்
வாரத்திற்கு ஒன்றென வாரா வாரம் ஸ்நாக்ஸ் பாக்ஸ் பதிவுகளை எழுதும் எண்ணம் இருக்கிறது. கரீம் தூக்கிச் செல்லும் கதவு போல முடியுமா? என தெரியாவில்லை. இருந்தும் முதல் வாரத்தை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறேன்.
கரும்பின் பூ. 📌 கொஞ்ச(சு)ம் தமிழ்
மலரப்போகும் கரும்பின் பூ கருவுற்றிருக்கும் பச்சை பாம்பைப் போல இருக்குமாம்.
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ நுண்ணுறை யழிதுளி தலைஇ தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.
நாம் நின்று நோக்காததை நோக்குபவர்களே கவிஞர்கள் (மழை வந்தால் தெரியும்). கழார்க் கீரனெயிற்றியார் நோக்கியதுதான் இந்த குறுந்தொகை பாடல். கருவுற்றிருக்கும் பச்சை பாம்பைப் போல இருக்கும் கரும்பின் பூ, மழைக்காலம் முடிந்ததும் எஞ்சியிருக்கும் காற்றின் துளிகளால் மலரும். அப்போது குளிர்காலம் தொடங்கும். வாடைக்காற்று வீசும் காலமது (புதிதாக திருமணம் முடித்த ஜோடிகளுக்கு காலம் மது). அந்த காலத்தில் தலைவனின் பிரிவை நினைத்து தலைவி கண் கலங்குகிறாள். ஒரு காலத்தில் தலைவன் பிரிந்து செல்ல புறப்பட்ட வேளையில் 'பார்த்து பத்திரமாக போய்ட்டு வாங்க' என Send off கொடுத்தவள். தற்போது கண்கலங்க கண்ணே உனக்கு வெட்கம் இல்லையா? என தனது நிலைக்கு தன் கண்களை தானே குறை கூறுகிறாள்... சரி!..கரும்பின் பூ எப்படி இருக்கும்?..கடைசியாக அதனை பார்த்த நியாபகம் உங்களுக்கு இருக்கிறதா?
எதிரி 📌 குட்டி ஸ்டோரி
எதிரிக்கு யோசிக்கவே நேரம் கொடுக்க கூடாது. அதிலும் இந்த இடத்தில் எதிரிக்கு தலை வாழை விருந்து கொடுத்தால் நிச்சயமாக தலை தப்பாது. ஆனாலும் ஒரு சில நிமிடம் யோசிக்கும் அந்த மனிதநேயம் மறு பக்கமும் இருந்திருந்தால் உலகில் எங்கும் சண்டைகளே நிகழாது, போர் என்ற வார்த்தையே இருக்காது. எதிரிகளும் பிறக்க மாட்டார்கள். அதுபோக இதுதான்பா தற்போதைய காலம் என சொல்லாமல் சொல்கிறது. ஆமாம்! ஏன் இந்த குறும்படத்தை "In the name of God" என இயக்குனர் தொடங்கியிருக்கிறார்?
கடல் பார்த்தல் 📌 பயாஸ்கோப்
அமைதி, தியானம், ஜென் நிலை, சுழியம் அல்லது கொஞ்சம் இறங்கி குழந்தைத் தன்மை, இவைதான் கடல் பார்த்தல்.
பெரும்புனல் நிலையும், வானிற் பிணைந்தஅக் கரையும், இப்பால் ஒருங்காக வடக்கும் தெற்கும் ஓடு நீர்ப் பரப்பும் காண இருவிழிச் சிறகால் நெஞ்சம் எழுந்திடும்; முழுதும் காண ஒருகோடிச் சிறகு வேண்டும் ஓகோகோ எனப்பின் வாங்கும்.
- அழகின் சிரிப்பு.
கடல் உங்களுக்குச் சலிக்கவே சலிக்காதா? காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா.
- தண்ணீர் தேசம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடல் பார்த்தல்.
கதவு 📌 ஸ்கிரீன் ஷாட்
கரீம் நல்லவன், நேர்மையானவன், பொறுப்பான குடும்பத் தலைவன், கவனமுள்ள தந்தை. ஆனால் பொருளாதாரம் சார்ந்த நவீன வாழ்க்கை அவனை அங்கலாய்க்க அவன் இறுதியில் எதை வாழ்க்கை என உணர்கிறான் என்பதை காட்டிய அற்புதமான திரைப்படத்தில் வரும் அழகான காட்சியின் ஸ்கிரீன் ஷாட் இது. பழைய கதவுதானே என அவனது மனைவி கொடுத்துவிட அது ஒன்றும் இலவசம் அல்ல என கரீம் அதனை மீட்டுக் கொண்டுவருகிறான். ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் இயல்பான நடத்தை தானே!.
இது எந்த திரைப்படம் என யூகியுங்கள்..
ஸ்டீவ் ஹார்வி 📌 இவர்தான்
எதுக்குடா இந்த சேனல்? என ரிமோட்டில் கடந்துபோகும் சில ஆங்கில சேனல்களில் "ஸ்டீவ் ஹார்வியை" பார்க்கலாம். ஸ்டீவ் ஹார்வி ஒரு நடிகர், எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், அற்புதமான வானொலி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். The Steve Harvey Morning Show, Family Feud, Celebrity Family Feud, NFL Honors, WWE Special என இவரது நிகழ்ச்சிகள் பிரபலம். ஸ்டீவ் ஆரம்பகாலகட்டத்தில் ஸ்டாண்டப் காமெடியில் கலக்கியவர் அதனால் நகைச்சுவையுணர்வு மற்றும் முகபாவனைகள் அவருக்கு இயல்பாகவே வரும். "Little Big Shots" என்ற இவரது நிகழ்ச்சியின் மூலம்தான் அவர் அடியேனின் மனம் கவர்ந்த தொகுப்பாளர் ஆனார். குழந்தைகளை மையமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சியில் அவரும் ஒரு குழந்தையாகவே மாறியிருப்பார். ஒரு குட்டி கணக்குப் புலியிடம் மாட்டிக்கெள்ளும் அவரை நீங்களும் பாருங்களேன்.
1996 Titan Cup கிரிக்கெட் 📌 பிளே கிரவுண்ட்
கிரிக்கெட் கிரிக்கெட்டாகவும் விளையாட்டாகவும் இருந்த காலத்தில் 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த Titan Cup இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியை (போட்டி எண் ODI No:1129) ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியில் டெய்லர் மட்டும் சதமடிக்க இந்தியாவிற்கு 216 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் வந்தவுடன் நடையைக்கட்ட சச்சின் மட்டும் 88 ரன்களை குவித்தார். பிறகு அவரும் அவுட்டாக 164 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா தடுமாறத் தொடங்கியது. ரசிகர்கள் மைதானத்தில் ஆர்பாட்டம் நடத்தியதால் இருபது நிமிடங்கள் போட்டி தடைபட, ஆஸ்திரேலிய வீரர்களின் முகத்தில் வெற்றியின் பல்புகள் பிரகாசமாக எறியத் தொடங்கியது. அப்போதுதான் அந்த அதிசயமும் தொடங்கியது. அந்த இருவரும் சேர்ந்து பிரகாச பல்புகளை நொறுக்கித்தள்ள இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சச்சின் அறிவிக்கப்பட்ட போது மைதானத்திலிருந்தவர்கள் அதனை மறந்து (மறுத்து) அந்த இருவரின் பெயரை உச்சரித்தனர் என்பதுதான் இந்த போட்டியின் சிறப்பு. அந்த போட்டியைப் பற்றி பல நாட்கள் பள்ளிக்கூடத்திலும் வெளியிலும் நண்பர்களுடன் பேசிப் பேசி சிலாகித்தது இன்றும் நினைவிருக்கிறது. அது ஒரு அழகிய கிரிக்கெட் காலம்.
White Mughals 📌 பு(து)த்தகம்
La Camarista
(Spanish)
The Chambermaid
📌 டிரைலர் டைம்
நாம் மட்டுதான் என்றில்லாமல் நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களின் வாழ்வியலை காட்டும் திரைப்படங்கள் நிச்சையம் உள்ளுக்குள் ஏதோவொரு மாற்றத்தை ஏற்படுத்தும். சார்.. ரூம் சர்விஸ்... என வருபவர்களிடம் ஒரு புன்னகையாவது வீசிவிட்டு... எஸ் ப்ளிஸ்... என சொல்லவும், (டிப்ஸ் தருவதில் அடியேன் மிஸ்டர் பீன் ரகம். இருமினால் விக்ஸ் மாத்திரை கிடைக்கும்), மேலும்... அதான் காசு வாங்குரானுகளே... அவனே சுத்தம் செய்யட்டுமே... என்ற அலட்சியத்துடன் புகைத்தது குடித்தது கடித்தது கிழித்தது என அசுத்தப்படுத்துதலை விட்டொழித்து "இருக்குமிடமெல்லாம் எம்மிடம்" என நினைக்கச் செய்த திரைப்படம் இது. எல்லாம் ஒகே.. ஏதாவது தேவைன்னா கூப்பிடுகிறேன்... ஆமாம்!...உங்க பேரு என்ன? ... தவறாமல் கேட்கும் பழக்கத்தையும் இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு தொடங்கியிருக்கிறேன். அதில் யாராவது ஒருவர் "ஈவ்" என்ற பெயருடையவராக இருக்கலாம்.
Genda Phool (Delhi-6)
📌 ஹெட்செட் ப்ளீஸ்
காடு தொலைத்த யானைக்கு ரேஷன் அரிசி கிடைத்தது போன்ற சந்தோஷமான மனநிலை. இல்லையென்றால் சோதனைக்கு சென்று எதுவும் கிடைக்காமல் ரோஸ் மில்க் குடித்ததோடு திரும்பிய போதாத நிலை. இதனையும் தவிர்த்து "இங்கிருப்பதுதான் அங்கிருக்கிறது..அங்கிருப்பதுதான் இங்கிருக்கிறது" என்ற அமைதியான ஜென் நிலை என எந்த நிலையிலிருந்தாலும் இந்த பாடலை கேட்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அடடா! என ரேகா பரத்வாஜின் குரல், கூடவே வி.என்.மஹதி, ஷ்ரத்தா பண்டிட், சுஜாதா மஜும்தாரின் கோரஸ் குரல்கள், இவர்களுக்கு பின்னணியில் இசைப்புயல் இருந்தால் சொல்லவா வேண்டும். பாரம்பரியமான இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு அதுவும் திருமணமான பெண்ணுக்கு புகுந்தவீடு என்பது சவால்கள் நிறைந்ததுதான். அவையெல்லாம் இருந்தும் தான் புகுந்த வீடு அதாவது எனது கணவரது வீடு சாமந்தி பூவைப் போன்றதென மாமியார் மற்றும் நாத்தனாரை வைத்துக்கொண்டு பெண்ணொருத்தி வேடிக்கையாக பாடுவதாக அமைந்தது இந்த பாடல். Genda phool என்றால் "சாமந்தி பூ". எளிமையான இந்த சாமாந்தி பூ அனைவருக்கும் கிடைத்தால் ஆசிர்வாதமாக இருக்கும் அல்லவா?.
வைரி.
📌 கிளிக்ஸ், 📌 புள்ளினம்,
உறுதியாக செயற்பட்டு இலக்கை அடைபவன் வைரி. மன உறுதி உள்ளவன். வைரி என்பதற்கு பகைவன் - எதிரி என்ற அர்த்தமும் உள்ளது. சரியான பெயர்தான் இந்த பறவைக்கு வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Shikra, தமிழில் வல்லூறு என்றால் எளிதில் புரியும். வில்லேத்திரன், பறப்பிடியான் என்ற அழகு பெயர்களும் இருக்கிறது. அதில் வைரியும் ஒன்று. (சினிமாவிற்கு தாய்மொழி தலைப்பு வைக்க ஏற்ற பெயர்கள்) பறந்தபடியே இரையை பிடிக்கும் இது கழுகு மற்றும் பருந்து குடும்பத்தை சேர்ந்ததுதான். இரைக்கோ அல்லது எதற்கோ ஒற்றைக்காலைத் தூக்கி காத்திருந்தபோது கிளிக்கிய புகைப்படம் இது. கரும்பழுப்புநிற மேல் இறக்கை, வரிவரியான வால், மஞ்சள் நிற கண்கள், அழகான அமைப்பான உடலை வைத்து பார்க்க இது பெண் பறவையாக இருக்கலாம். பெண் வைரி அல்லது வைரியாள் அல்லது வைராள்.
இடையில்
📌 அண்டர் லைன்
நிமிர்த்துவதற்கும் வளைப்புதற்கும் இடையில்,
விழுங்குவதற்கும் துப்புவதற்கும் இடையில்,
ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையில்,
போவதற்கும் திரும்புவதற்கும் இடையில்...
கோணல் புத்திக்காரனுக்கும் நேர்மையானவருக்கும் இடையில், முட்டாளுக்கும் அறிவாளிக்கும் இடையில்,
இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில்,
சிரிப்புக்கும் அழுகைக்கும் இடையில்,
நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் இடையில்,
சாத்தானின் ராஜ்ஜியத்துக்கும் கடவுளின் ராஜ்ஜியத்துக்கும் இடையில்...
கதை போகிற போக்கில் இடையில் இடையில் இப்படி அடித்து நொறுக்குவதுதான் கூகி வா தியாங்கோவின் ஸ்டைல். அவரது
சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவல் படித்துக் கொண்டிருந்த இடையில்.
கடைசி முகலாயன் (The Last Mughal)" என பல நூற்றாண்டுகள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த மிகப் பெரிய சாம்ராஜ்யம் வீழ்ந்த கதையை துள்ளியமான தகவல்களுடன் பதிவு செய்த "வில்லியம் டால்ரிம்பின்" அடுத்த படைப்பு "White Mughals". இந்த புத்தகத்தில் பிரிட்டீஷ் ஆட்சியில் பத்தொன்பதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த "ஜேம்ஸ் அகில்லெஸ் கிரிக்பாட்ரிக் - கைர் அன் நிஷா" என்ற ஜோடியின் காதல் கதையின் விவரங்களை வில்லியம் டால்ரிம்பிள் தந்திருக்கிறார். காதல் கதையில் என்ன இருக்கப்போகிறது என்றால்?. இந்த கதையில் வரும் ஜோடியின் பெயரை வைத்து இவர்களது கதையை ஒருவாறு யூகித்துவிடலாம். சென்னையில் பிறந்திருந்தாலும் கிரிக்பாட்ரிக் ஒரு ஆங்கிலோயர். நிஷா ஹைதராபாத்தின் பிரதம மந்திரியாக இருந்த நவாப் மஹ்முத் அலிகானின் பேத்தியான பதினான்கு வயது இசுலாமிய பெண். மேலும் காலகட்டமும் சிக்கலானதுதான். வரலாற்று காதல் அந்த காதலுடன் துரோகம் Love and Betrayal in India. வழக்கம்போல் அந்த பழுப்பு நிற டிஷ்னரியை வைத்துக் கொண்டு இந்த புத்தகத்தை படித்து முடித்தாயிற்று. வழக்கம்போல் படித்ததும் அதுதான் தோன்றியது. "யாரேனும் தமிழில் மொழிபெயர்க்கலாம், அல்லது பெயர்த்துக் கொண்டு இருக்கலாம்".