குடும்பினி.
House wife, Homemaker, இல்லத்தரசி, இல்லாள் என்பதற்கு வேறு வார்த்தையாக சமீபத்தில் தெரிந்துகொண்டதுதான் "குடும்பினி". குடும்பம் இனி என்பதாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் வீட்டிற்குள்ளிருந்து வெளிவந்து எல்லா துறையிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருந்தாலும் இல்லத்தரசி, Homemaker என்ற அவர்களது அர்ப்பணிப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை. ஏனென்றால் புகழ் உட்பட தனக்கென எதையுமே எதிர்பாராது கணவன் குழந்தைகள் குடும்பத்தார்கள் என பிறர்க்கென மட்டுமே அவள் சிந்திக்கிறாள். நாட்காட்டியையும் கடிகாரத்தையும் மறந்து காலநேரம் பாராது அதற்கென தன்னை முழுமையாக ஒப்படைக்கிறாள். இல்லத்தரசிகளுக்கு அரசாங்கமே சம்பளம் கொடுப்பது, போனஸ் கொடுப்பது, TA, PA, ESI, EPF கொடுப்பதென அரசியல் கூத்து ஒருபுறம் இருக்க, இந்த குறும்படம் அத்தகைய இல்லத்தரசி ஒருவரின் ஒரு நாள் காலைப் பொழுதையே காட்டுகிறது.
இந்தோனேஷியாவின் நடுத்தர குடும்பம் ஒன்றின் காலைப் பொழுதில் இந்த குறும்படம் தொடங்குகிறது. கணவன் தூங்கிக்கொண்டிருக்க குடும்பத்தலைவியான அவனது மனைவி அவர்களது மகளை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
வளர்ந்ததும் நீஎன்ன ஆகப் போகிறாய்?...
டாக்டர்?...
டாக்டரா!...ஏன்?...
நிறைய பணம் சாம்பாதிக்க...
பணமா... எதுக்கு?...
பைக் வாங்க...
உன் தம்பிக்கு ஒன்னு வாங்கித் தருவியா?...
மாட்டேன்...
என்ற இயல்பான உரையாடலுடன் புத்தகங்களை அடுக்குவது, உடை மாற்றுவது, உணவு கொடுப்பது என பரபரப்பாக அவள் மட்டும் இயங்கிக் கொண்டிருக்க கணவன் படுக்கையிலே இருக்கிறான். அவனை எழுப்பும் முயற்சியிலும் அவள் ஈடுபடுகிறாள். மேலும் தனது இளைய மகனையும் காலைக் கடன்களை முடிக்க உத்தரவிடுகிறாள். ஆனால் அவன் மீன் பிடிக்க வெளியே செல்கிறான். அவனை பிடிக்க அவளும் ஓடி தோற்றுப்போகிறாள். தற்போதும் அவளது கணவன் தூங்கியபடியே இருக்க, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்படி கூறுகிறாள். ஒரு வாளி நிறைய தண்ணீரை அவனது முகத்தில் கொட்டியும் பலிக்காததால், இறுதியில் கோபத்துடன் அவளே தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறாள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் விழித்து தேனீரையும் ஒரு சிகரெட்டையும் அமைதியாக அனுபவித்து கொண்டிருக்க, சிறிது நேரத்திற்கு பின்பு பள்ளிக்குச் சென்ற அவள் தன் மகளுடன் சோகமாக திரும்பி வருகிறாள். அன்றையநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என அப்போதுதான் அவளுக்கு தெரிய வருகிறது.
மேலோட்டமாக பார்த்தால் வேடிக்கையாகத் தோன்றினாலும். அப்பட்டமான உண்மை இந்த குறும்படத்தில் பொதிந்திருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை இயந்திரத்தைப் போல இல்லத்தரசி என்பவள் ஓடி உழைத்துக் கொண்டே இருக்கிறாள் என்பதை இக்குறும்படம் காட்டுகிறது. அந்த இயந்திரத்தை இயக்க எவரும் தேவையில்லை. அதுபோல் அந்த இயந்திரத்திற்கு ஞாயிறு மட்டுமல்லாது மற்ற கிழமையும் நாளும் நேரமும் தெரிவதில்லை.
Sonday story
Directed by - Adi Marsono
Written by - Adi Marsono
Cinematography - Ujel Bausad
Country - Indonesia
Language - Javanese, Indonesian
Year - 2017.
ஏமாற்றமா, தோல்வியா, அவமானமா, கழிவிறக்கமா இல்லை ஆசுவாசமா எனத் தெரியாது கடைசி நிமிடத்திற்கு முன்பு சில நிமிடத்தில் தோன்றும் இல்லத்தரசி இபுவாக நடித்த எரித்தினா பாஸ்கோராவதியின் முகபாவனைதான் இந்த குறும்படத்தின் மிகப்பெரிய பலமாக தெரிகிறது (அதில்தான் உயிரோட்டமே இருக்கிறது). அவரைப்போன்று இயல்பான முகங்களின் தேர்வும், பொருத்தமான வண்ணங்களின் காட்சியமைப்பும், அளவான வசனங்களும் இன்னும் ஒரு படி சிறந்ததாக காட்டுகிறது.