ஒலிம்பிக் மெடல் எல்லாம் சுத்த வேஸ்ட்.

'ந்த ஒலிம்பிக் மெடல் எல்லாம் சுத்த வேஸ்ட்'

வேற நல்ல டிசைன் இருந்தா காட்டுங்க என்பதோடு தங்கத்தின் கனவு நிற்க...ஏதோ இரண்டு வெள்ளி... கஷ்டப்பட்டு மூன்று வெண்கலம் மட்டும் நமது கைக்கு கிடைத்திருக்கிறது. இதுவே பெருசு என போதும் என்ற பொன் செய்யும் மருந்திற்காக மனதை தேற்றிக் கொள்ளும் இந்த வேளையில்  ஒலிம்பிக் மெடல் எல்லாம் வேஸ்ட் என சொன்னால் எல்லோருக்கும் கோபம் வரலாம். ஆனால்  உண்மையாகவே அவையெல்லாம் சுத்த வேஸ்ட்தான். 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 53 மில்லியன் டன் e-waste என சொல்லக்கூடிய மின்னணு கழிவுகள் உலகம் முழுவதும் உற்பத்தியாகின்றன. சில வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த "ஜோ ரஷ்" என்பவர் இத்தகைய மின்னணு கழிவுகளைக் கொண்டு G7 மாநாட்டு முக்கிய தலைவர்களை முன்னிருத்தி "Mount Recyclmore" என்ற வேடிக்கையான சிலையை செய்தார். அதில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவின் சிலையும் இருந்தது. அதனை கண்ட ஜப்பான் நாடு அத்தகைய மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யவும், அதன் ஆபத்தைப்பற்றி உலகிற்கு எடுத்துக்காட்டி தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு நடத்தவும் நினைத்தது. அதே வேலையில் 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பும் அதற்கு கிடைத்தது. 

ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, 2017 ஆம் ஆண்டு "Tokyo 2020 Medal Project" என்ற ஒரு திட்டத்தை ஜப்பான் நாடு தொடங்கியது. அத்திட்டத்தின்படி நாட்டிலிருக்கும் மின்னணு கழிவுகளை தனியாக சேகரிக்கத் தொடங்கினர். முதற்கட்டமாக அரசாங்க ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், என அவர்கள் பயன்படுத்திய உபயோகத்தில் இல்லாத செல்போன்கள், லேப்டாப், கம்பியூட்டர் போன்ற மின்னணு பொருட்களை இத்திட்டத்திற்காக ஒப்படைத்தனர். பழைய செல்போன்...லேப்டாப்... ஐ பேடிற்கு....டையோஸ்பிரோஸ் காக்கி (ஜப்பான் பேரிச்சம்பழம்) வாங்கலையோ... என கூவிக் கூவி அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் இணைந்து பொதுமக்களிடம் இருக்கும் மேலும் பல மின்னணு கழிவுகளையும் சேகரித்தனர். கிட்டதட்ட இரண்டு வருடத்தில் அனைத்து பெரும் நகரங்கள்,1621 நகராட்சிகள், 90 சதவீத கிராமங்கள் என ஜப்பான் முழுவதும் இத்திட்டத்தின்படி 78985 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அதில் 6.21 மில்லியன் செல்போன்கள் அடங்கும். அவைகள் அனைத்தும் சட்டப்படி முறையாக வகைப்படுத்தப்பட்டு அதிலிருக்கும் உலோகக்கூறுகளை தனியே பிரித்து சுத்திகரிக்கப்பட்டன. இந்த செயல்முறையில் 32 கிலோ தங்கம், 3500 கிலோ வெள்ளி, 2250 கிலோ வெண்கலம் கிடைத்தது.  அதனை கொண்டு 2020 ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெரும் வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களை (2500 பதக்கங்கள்) அந்நாடு தயாரித்தது. 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று அச்சத்தால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமல் போக, தற்போது நிகழும் ஒலிம்பிக்கில் வெற்றிபெரும் வீரர்களின் கழுத்தை மின்னணு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அந்த பதக்கங்களே அலங்கரிக்கின்றன. இப்ப சொல்லுங்க 'இந்த ஒலிம்பிக் மெடல் எல்லாம் சுத்த வேஸ்ட்' தானே

பதக்கம் மட்டுமல்லாது ஒலிம்பிக் போட்டியின் விழாக்களிலும் அரங்கங்களிலும் பயன்படுத்தும் மேடைகள், நாற்காலிகள், மேசைகள், தரை விரிப்புகள், உடைகள் என பலவற்றையும் அந்நாடு பிளாஸ்டிக் மற்றும் மற்ற கழிவுப் பொருட்களிலிருந்து தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.