வில்லன் மரங்கள் (கபால மோட்சம் தரும் புன்யா பைன்).

வ்வொன்றிற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது (ஒவ்வொருவருக்கும்தான்). இல்லை என்றாலும் அதற்கும் ஒரு மதிப்பைக் கொடுத்துவிடுவோம் அல்லவா!அதுபோல் மரங்களுக்கும் மதிப்பு இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க சுமார் 356 மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. அதில் சில பழமையான பாரம்பரியமான மரங்கள் இருந்தன. அவற்றின் மதிப்பை ஆராய உச்ச நீதிமன்றம் ஐந்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு மரத்தின் மதிப்பீடு குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி ஒரு மரம் வெளியிடும் பிராணவாயுவின் மதிப்பு மட்டும் ரூ.45000 ஆகும். உரமாகவும்ம், எரிபொருளாகவும் தட்சுப்பொருளாகவும் அந்த மரத்தின் மதிப்பு ரூ.20000. இயற்கையை குளிர்வித்தல், தூசு, ஒலி மாசு இவற்றை குறைத்தல், பறவைகள், விலங்குகள், புளு பூச்சிகளுக்கு இடமளித்தல், என மரத்தின் மதிப்பு ரூ.9500 ஆகும். மொத்தத்தில்  இந்தியாவிலிருக்கும் ஒரு மரத்தின் மதிப்பு ஒரு வருடத்திற்கு ரூ.74500 என நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. நூறு வருடங்கள் கடந்து வாழும் ஒரு மரத்தின் மதிப்பை எடுத்துக் கொண்டால் ஒரு கோடியைத் தாண்டும். 

மரு‌ந்தா‌கி‌த் த‌ப்பா மர‌த்தா‌ற்றா‌ல் செ‌ல்வ‌ம் 
பெரு‌ந்தகை யா‌ன்க‌ண் படி‌ன். 

Between every two pines is a doorway to a new world.

அத்தகைய மரங்களில் சிலவற்றை ஆபத்தான மரங்கள் என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அதாவது மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இந்த மரங்கள் வில்லன் மரங்களாக கருதப்படுகின்றன. ஹீரோக்களை விட வில்லன்கள் கதை இன்னும் சுவாரசியம்தானே அவற்றைப் பற்றி பார்த்துவர அதன் தொடர்ச்சியாக; 

கபால மோட்சம் தரும் புன்யா பைன். 

உலகில் அதிகமாக காணப்படும் மர வகைகளில் ஒன்று பைன் மரங்கள். இந்த பைன் மரங்களில்  தென்கிழக்கு குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் "புன்யா பைன்" என்ற ஒருவகை மரங்கள் இருக்கின்றன. ஹாய் ஹலோ சாப்ட்டாச்சா என டைனோசர்களுடன் குசலம் விசாரித்த ஜூராசிக் காலத்தோடு தொடர்புடைய இந்த மரங்கள் சுமார் 30 முதல் 45 மீட்டர் உயரம் வளரக் கூடியது. கூம்பு வடிவத்தில் நெடு நெடுவென ரகுவரன் கணக்காக வளரும் இந்த மரங்கள் மற்ற வில்லன் மரங்களைப்போல தங்களது உடலில் எந்த விஷங்களையும் கொண்டதல்ல. ஆனால் ஒரு கால்பந்தை விட பெரிதாக பார்ப்பதற்கு அண்ணாசிப்பழம் போல் இருக்கும் "கோன்" என சொல்லப்படும் இதன் காய்கள் ஆபத்தானவையாக இருக்கின்றன. அதிகபட்சமாக 18 கிலோ சராசரியாக 6-10 கிலோ எடை கொண்ட இந்த மரத்தின் கோன்கள் ஒருவரது தலையில் விழுந்தால் அவருக்கு கபால மோட்சம் உடனே கிட்டும். அதுவே உடலில் விழுந்தால் நிச்சையம் மாவுகட்டுதான். அந்த பயத்தில் வசந்த காலத்தில் காய்த்து அதனை உயரத்திலிருந்து இந்த மரங்கள் உதிர்க்கும் அந்நேரத்தில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் அதனை அன்டுவதில்லை. 

"Everything in Australia can kill you" spider snakes insects the sun and nuts என ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வருபவர்களிடம் வேடிக்கையாகச் சொல்வதற்கு உண்மையாக வசந்தகாலத்தில் இந்த மரங்கள் ஆபத்தானவையாக இருக்கின்றன.  

"அரகாரிய பிட்வில்லி" என அழைக்கப்படும் குடும்பத்தை சேர்ந்த இந்த மரங்கள் தங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒரு பெரும் காட்டையே உருவாக்குபவையாகும். மேலும் இந்த மரங்கள் தட்சு வேலைகளுக்கு பெரிதும் பயன்படுகின்றது. வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும் இதன் கட்டைகளைக் கொண்டு சிலவகை கிட்டார் இசைக்கருவி தயாரிக்கப்படுகிறது. தலையில் விழுந்தால்தானே ஆபத்து தரையில் விழுந்தால் என இதன் கோன்களில் இருக்கும் விதைகளை ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் சேகரித்து அதனை அபரிவிதமாகக் கருதி தங்களது உணவுகளில் சேர்த்து வந்திருக்கின்றனர். வசந்த காலத்தில் காட்டுக்குள் சென்று விதைகளை சேகரித்து அதை திருவிழாவாகக் கொண்டாடி இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக வசந்த காலத்தில் கோன் திருவிழா என உணவுத் திருவிழா இன்றுவரை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பாதாம் முந்திரி பிஸ்தா போல இந்த புன்யா பைன் விதைகள் கேக்குகள், ரொட்டிகள், ஐஸ்கிரீம்கள் தயாரிப்பதிலும் உணவை அலங்கரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது. 

2002 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு தென்கிழக்கே உள்ள "வாராகுல்" என்ற நகரத்தின் மேயராக இருந்த "டயான் பிளாக்வுட்டிற்கு" ஒல்லியாக இருந்த ஒருவர் ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார். அதனை கேட்ட மேயர் நகரத்திலிருந்த மக்களிடம் அவசரமாக ரேடியோவில் பேசினார். மக்களை ஒரு வாரத்திற்கு வெளியே வர வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்த ஒரேயொரு பள்ளிக்கூடம் மூடப்பட்டது. கடைகள் சாத்தப்பட்டன. பெட்ரோல் பங்க் மற்றும் எரிவாயு நிலையங்களில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருப்பு வைப்பது குறைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் மருத்துவர்களும் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணிக்கு தயார்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் மேயர் பயந்தது நடந்தது. வானத்திலிருந்து விமானங்களைக் கொண்டு ஏவுகணைகள் வீசுவதைப் போல ஏதோ பல கனமான பொருட்கள் வீட்டுக் கூரையின் மேல் விழுந்து கொண்டே இருந்தது. குறிப்பாக இரவில் அது அதிகமாகவும் மக்களை அச்சுருத்தவும் செய்தது. நான்கைந்து நாட்கள் நீடித்த அந்த ஏவுகணைப் போன்ற தாக்குதல் ஒருவழியாக நிற்க, வாராகுல் நகரம் போர்க்களம் போல காட்சியளித்தது. வீட்டுக் கூரைகள் சன்னல்கள் பூந்தொட்டிகள் மின் விளக்குகள் எல்லாம் உடைந்திருந்தன. ஒரு காவலருக்கு கை மட்டும் ஒடிந்திருந்தது. ஒரு சிலருக்கு சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தது. தக்க சமயத்தில் அந்த ஒல்லியான நபர் தகவலை மேயருக்கு தெரிவித்ததால்  அதிஸ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை. அந்த ஒல்லியான நபர் மேயரிடம் தெரிவித்த தகவல் என்ன தெரியுமா?

சார்... நகரத்தை சுற்றியிருக்கும் பைன் மரங்கள் எல்லாம் வழக்கத்தை விட அதிகமாக காய்த்து உதிர தயாராகியிருக்கிறது... அதிலும் அந்த மரங்களில் பெண் காய்களாக  இருக்கிறது. 

சிறு குறிப்பு: குயின்ஸ்லாந்தின் புன்யா மலைத் தொடரில் இருக்கும் ஒரு புன்யா பைன் மரம் அதிகபட்சமாக 169 அடி உயரம் கொண்டது. அதன் காய்கள் 22 கிலோ எடை கொண்டது. புன்யா மரத்திற்கு 'False Monkey Puzzle' என்ற வேடிக்கையான பெயரும் இருக்கிறது. 

- தொடரும்.