வில்லன் மரங்கள் - ('எட்டி'யே இரு).

ருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காற்று மாசு என இயற்கை சார்ந்த ஆபத்துகளைப் பற்றி பேசும்போதெல்லாம் "மரம் வளப்போம்" என்ற குரல்கள் சப்தமாக ஒலிக்கும். மனிதன் மற்றும் மற்ற உயிரினங்கள் வெளியிடும் கரியமில வாயுவையும், தொழிற்சாலை, வாகனங்கள் என இயந்திரங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்ஸைடு, கந்தக டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களையும் மரங்கள் கிரகித்து பிராண வாயுவை கொடுக்கின்றன. ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் ஒன்னரை டன் கரியமில வாயுவை கிரகித்து ஒரு டன் பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதுமட்டுமல்லாது 20 டன் தூசியினையும் அப்புறப்படுத்துகின்றன. மேலும் பத்து மீட்டர் அளவிலிருக்கும் மரங்கள் 1.6 முதல் 1.8 டெசிபல் அளவு ஒலி மாசையும் குறைக்கிறது. அதனால்தான் சுற்றுச்சூழல் சீர்கேடு என வரும்போது மரங்களைப் பற்றிய பேச்சு முதன்மை வகிக்கிறது.

*தன்னை வெட்டும் கோடாரியிலும் சந்தன வாசம்* 

*Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago*

அத்தகைய மரங்களில் சிலவற்றை ஆபத்தான மரங்கள் என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அதாவது மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இந்த மரங்கள் வில்லன் மரங்களாக கருதப்படுகின்றன. ஹீரோக்களை விட வில்லன்கள் கதை இன்னும் சுவாரசியம்தானே அவற்றைப் பற்றி பார்த்துவர அதன் தொடர்ச்சியாக: 

எட்டி'யே' இரு - எட்டி மரம். 

ஆங்கிலத்தில் பாய்ஸன் நட் மற்றும் கியூக்கர் பட்டன், பிரெஞ்சு மொழியில் நக்ஸ் வாமிகா, வியட்னாமில் கே மா டியன், டேனிஷில் பிரேக்னூட்,  ஜப்பானில் மச்சின், ஹிந்தி, குஜராத்தி, மொழியில் பொதுவாக குச்லா, மராத்தியில் காரோ, வங்க மொழியில் கச்சிலா, தெலுங்கில் முசாடி, மலையாளத்தில் காஞ்சிரம் என இந்த வில்லனுக்கு இடத்திற்கு தகுந்தாற்போல வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. "எட்டி காய்த்தென்ன ஈயாதார் வாழ்தென்ன" என்ற பழமொழி இருக்க தமிழில் இது "எட்டி மரம்" என அழைக்கப்படுகிறது. கிட்ட வராதே 'எட்டி'யே இரு என்பதற்காக இருக்கலாம்.

விஞ்சுதன்பிகுதலென்பவிஞ்சையென்பதுவேகல்வி
கஞ்சுகர்மெய்காப்பாளர்காஞ்சிகைதானேயெட்டி

இது சிந்தாமணி நிகண்டில் வருகிறது. "காஞ்சிகை" என்ற பழமையான பெயரும் இதற்கு உண்டு. 

எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

இது மூதுரையில் ஔவையார் கூறியாதாகும்.

காட்டரளியைப் போல தற்கொலை மற்றும் கொலைக்கு உகந்ததால் இந்த மரமும் வில்லன் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறது. ஆடு மாடு போன்ற வீட்டு விலங்குகளுக்கு இவை ஆபத்தானவையாக இருக்கின்றன. குரங்குகளும் பறவைகளும் விதையைத் தொடாமல் ஆரஞ்சு நிற தோலைக் கொண்ட இதன் பழங்களை சாப்பிடுகின்றன. இந்த மரத்தின் விதைகளில் புரோட்டோஸ்ட்ரிச்னைன், வோமிசின், N- ஆக்ஸிஸ்ட்ரிச்னைன், சூடோஸ்ட்ரிச்னைன், ஐசோஸ்ட்ரிச்னைன், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கிளைகோசைடு போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியிருக்கிறது. அளவிற்கு அதிகமானால் அவை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. Arrow Poison என சொல்லக் கூடிய வீஷ அம்புகள் தயாரிக்கவும், நானே ராஜா என்ற நாற்காலி சண்டைக்காக உடன்பிறந்தவராயினும் Soft death என கொலை செய்யவும் இந்த மரத்தின் விதைகள் ஒரு காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது இந்த மரத்தின் விதைகள் மட்டுமல்லாது பூக்கள் பட்டைகள் என அனைத்தும் மருத்துவத்துறையில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஒடிசாவிலிருக்கும் மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் இந்த மரத்தின் அனைத்து பாகங்களிலிருந்து ஸ்டிரிக்னைன், புரூசைன் என்ற அல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. எட்டிமரம் வளர்த்தல் என்பது அந்நியச் செலாவணியயையும் அள்ளித் தருகிறது. 

எட்டி மரத்தை சித்த வைத்தியத்தில் தெய்வீக மூலிகை என்கின்றனர். இதன் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் 'எட்டிவேர் சூரணம்'  காலரா, தொழுநோய், தோல் நோய்கள் மற்றும் பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக்கடிகளுக்கு மருந்தாக இருக்கிறது. வயிற்றுவலி, வாந்தி, குடல் எரிச்சல், மன அழுத்தம், தலைவலி, மூச்சுத்திணறல், போன்றவற்றிற்கும் எட்டியிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், தீவினை, செய்வினை, செயற்பாட்டு வினை இவற்றில் நம்பிக்கை இருந்தால் ஒரு மஞ்சள் துணியில் எட்டி மரத்தின் வேரைக் கட்டி வீட்டில் தொங்கவிட்டால் அனைத்தும் கெட்ட சக்திகளும் வீட்டை நெருங்காது என்ற வியாபாரமும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. எட்டி மரம் காளிக்கு உகந்த மரம். 

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி ஆளுக்கொரு பக்கமாக நின்று பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளிப்பட்ட விஷத்தை சிவபெருமான் விழுங்க, பார்வதி பதறிப்போய் பாதியிலே ஸ்டாப் என தடுத்து நிறுத்த அந்த விஷத்தின் அப்டேட் வெர்ஷன் இந்த எட்டி மரம் என்ற கருத்தும் இருக்கிறது. நம்பிக்கையின் படி கெட்ட சக்திகளும், அறிவியலின் படி எந்த நோயும் நம்மை அண்டாது 'எட்டி'யே இருக்கும் என்பதற்காக இந்த மரத்திற்கு எட்டி என்ற பெயர் வந்திருக்கலாம். 

சிறு குறிப்பு: எட்டி மரக் கட்டைகளை கரையான்கள் அரிக்காது. கொதிக்கும் வெந்நீரில் ஒன்றிரண்டு எட்டி மர பட்டையைப் போட்டு மாலை வேளையில் குளித்தால், உடல் வலி நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும். 

- தொடரும்.