வில்லன் மரங்கள் (வெடிக்கும் மரம் சாண்ட்பாக்ஸ்.

லிபோர்னியாவின் ஒயிட் மலைத்தொடரிலிருக்கும் "மெத்தூசலா" என்ற மரத்தைத்தான் உலகின் மிக வயதான மரம் என்கின்றனர். பைன் மரத்தின் பிரிஸ்டல் கோன் பைன் வகையைச் சார்ந்த இதன் வயது சுமார் "4852" ஆண்டுகள். ஒயிட் மலையில் இருக்கும் இந்த மரத்தினை மக்கள் கண்ணுக்குத் தெரியாமல் மிகவும் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர். இந்த மரம் மோசமான காலநிலையைத் தாக்குப்பிடித்து வளரும் தன்மை கொண்டது. 

"திராசினா திராக்கா" - ஏதோ தமிழ் திரைப்படத்தின் பாடலின் முதல்வரி என நினைக்க வேண்டாம். கேனரித் தீவுகளில் இருக்கும் "டிராகன் மரத்தின்" பெயர்தான் அது. 70 அடி உயரம் 13 அடி விட்டம் கொண்ட இம்மரத்தின் வயது சுமார் "6000" ஆண்டுகள். மரங்களின் மதிப்பைப் பற்றி பார்த்தோம் அல்லவா! அதை வைத்து உலகின் வயதான இந்த மரங்களின் மதிப்பை  கணக்கிட்டால்?.... 

மரம்
இறை வரம். 

"Ancient trees are precious. There is little else on Earth that plays host to such a rich community of life within a single living organism." 

அத்தகைய மரங்களில் சிலவற்றை ஆபத்தான மரங்கள் என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அதாவது மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இந்த மரங்கள் வில்லன் மரங்களாக கருதப்படுகின்றன. ஹீரோக்களை விட வில்லன்கள் கதை இன்னும் சுவாரசியம்தானே அவற்றைப் பற்றி பார்த்து வர அதன் தொடர்ச்சியாக: 

வெடிக்கும் மரம் - சாண்ட்பாக்ஸ் 

பார்ப்பதற்கு கரடுமுரடான தோற்றம், பயம் கொள்ளும் அளவிற்கான உயரம், உள்ளுக்குள் கொஞ்சம் விஷம், மற்றவர்களை நெருங்கவிடாத தன்மை இவற்றால் "சாண்ட்பாக்ஸ்" மரம் என பொதுவாக அழைக்கப்படும் "ஹூரா கிரெபிட்டன்" மரம் வில்லன் மரங்கள் பட்டியலில் இணைந்திருக்கிறது. 

அமேசான் உட்பட தென் அமெரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் இது அதிகமாக காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் தான்சானியாவிலும் இம்மரம் பெருமளவில் இருக்கிறது. இம்மரத்தின் உடல் கூர்மையான பல முட்களைக் கொண்டது. அதனால் சில விலங்குகளும் உயிரினங்களும் இம்மரத்தில் ஏறுவதற்கு தயங்குகின்றன. 'மங்கி நோ கிளைம்ப்' என்ற வேடிக்கையான பெயரும் இதற்கு இருக்கிறது. 30 முதல் 40 மீட்டர் வரை கூம்பு வடிவத்தில் வளரும் இம்மரம் தனது இடத்தை ஆக்கிரமிக்கும் வல்லமை கொண்டது. பார்ப்பதற்கு இதய வடிவிலிருக்கும் இதன் இலைகள் நச்சுத் தண்மை கொண்டது. இலை மட்டுமல்லாது மரத்தின் பிசினும், காய்களும், விதைகளும் விஷத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இதன் பிசின் தோலில் பட்டால் சிவப்பு நிற தடிப்புகளை ஏற்படுத்துவதோடு கண்பார்வையையும் இழக்கச் செய்யும். ஒரு சிறிய பரங்கிக்காய் போன்று இருக்கும் இதன் காய்கள் பழுத்து உதிர்கையில் வெடிக்கும் தன்மை கொண்டாக மாறுகிறது. மணிக்கு 250 கி.மீ வேகம் அளவிற்கு (70 m/s) அது வெடித்து விதைகளை பரப்புகிறது. அதனால் இம்மரம் "வெடிக்கும் மரம்" என பெயர் பெற்றிருக்கிறது. இதன் விதைகளை சாப்பிட்டால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் மரணமும் ஏற்படலாம். 

கரீபியன் மக்கள் இந்த மரத்தை வெட்டி அழகிய தட்சுப் பொருட்கள் செய்திருக்கின்றனர். இன்றளவும் இம்மரம் அத்தகைய தட்சு வேலைகளுக்கு பயன்படுகிறது. "ஹுரா" என்பது தட்சு மர வகைகளில் பிரபலமானது. இம்மரத்தின் எரிச்சலூட்டும் பிசின் ஒரு காலத்தில் வாத நோய்க்கும் தொழுநோய்க்கும் நாட்டு மருந்தாக இருந்திருக்கிறது. அது கண்ணீர் புகை குண்டு தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இம்மரத்தின் இலைகளை உப்புடன் சேர்த்து துணியில் கட்டி வீக்கம் மற்றும் வலி நிறைந்த இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும். இதன் விதைகள் அம்புகளில் விஷம் தேய்க்கவும் அதனைக் கொண்டு மீன்களை பிடிக்கவும், அனகோண்டா போன்ற பெரிய மற்றும் ஆபத்தான விலங்குகளைக் கொல்லவும் பயன்பட்டது. இதன் காய்களை மெக்காக் கிளிகளும் சில பறவைகளும் விரும்பி சாப்பிடுகின்றன. இன்று பூங்காக்களிலும் சாலையோரங்களிலும் அழகிற்காகவும் நிழலுக்காகவும் இயற்கை சமநிலைக்காகவும் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 

முன்பொரு காலத்தில் கரீபியன் தீவின் பழங்குடி மக்களின் கலினா என்ற இனத்தில் அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளை திருமணம் செய்துகொள்ள பல ஆண்கள் போட்டியிட, தனக்கு யார் ஒருவன் விலைமதிக்க முடியாத, புதுமையான பரிசை கொடுக்கிறார்களோ அவனை மணமுடிப்பதாக அந்த அழகுப் பெண் அறிவித்திருந்தாள். அத்தீவிலிருந்த மேட்ரிமோனி ஆண்கள் அவளுக்காக விலங்குகளின் தோல், மீனின் பல், அறிய பூக்கள், பளபளக்கும் கற்கள் என பல பரிசுகளை கொண்டுவந்து கொடுத்தனர். அதில் அழகிய மரத்தாலான நெக்லஸ் மற்றும் தோடு இவற்றை பரிசளித்த ஒருவனை அந்த அழகி திருமணம் செய்துகொண்டாள். அந்த நெக்லஸ் மற்றும் தோடு சாண்ட் பாக்ஸ் மரத்தின் காயினால் செய்யப்பட்டது.

சிறு குறிப்பு: மையினைக் கொண்டு எழுதுவதற்காக இறகிற்கு பின்பு மரத்தாலான பேனா பயன்படுத்த தொடங்கிய காலத்தில் அந்த பேனாவை வைப்பதற்காக வளைய வடிவிலிருக்கும் பெட்டியினை உபயோகப்படுத்தினர். அதற்கு "சாண்ட்பாக்ஸ்" என்று பெயர். அந்த பெட்டி இம்மரத்தினால் செய்யப்பட சாண்ட்பாக்ஸ் மரம் என அழைக்கப்படுகிறது. பாஸம் வுுட், ஜபிலோ என்ற வேறு பெயரையும் கொண்டது.