வில்லன் மரங்கள் (தற்கொலை மரம்).


கெட்டியான, தடிமனான நடுத்தண்டுடன் உயரமாக வளரும் தாவர இனம் மரம். விருட்சம், தரு என இதற்கு வழங்கும் வேறுபெயர்கள் எல்லாம் வடமொழி சொற்கள். 2015 ஆம் ஆண்டு கணக்குபடி சுமார் 3.04 டிரில்லியன் மரங்கள் இந்த பூமியில் இருக்கின்றன. 12000 வருடங்களுக்கு முன்பு இதன் எண்ணிக்கை இருப்பதைவிட இருமடங்கு அதிகம். கிட்டத்தட்ட 370 மில்லியன் வருடங்களாக மரங்கள் பூமியில் இருக்கின்றன. தனி மரமோ தோப்போ காடோ மரங்கள் இல்லாத பூமியை கற்பனை செய்ய இயலாது. அதுபோல் மனிதர்களையும் சேர்த்து மரங்கள் இல்லாது இப்புவியில் உயிரினங்களால் வாழ முடியாது. 

மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம்,
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின் உபயம்,
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்,
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்,
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,

When great trees fall
in forests,
small things recoil into silence,
their senses
eroded beyond fear.

அத்தகைய மரங்களில் சிலவற்றை ஆபத்தான மரங்கள் என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அதாவது மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இந்த மரங்கள் வில்லன் மரங்களாக கருதப்படுகின்றன. ஹீரோக்களை விட வில்லன்களின் கதை இன்னும் சுவாரசியம்தானே அவற்றைப் பற்றி பார்த்துவர அதன் தொடர்சியாக; 

தற்கொலை மரம் - காட்டு அரளி. 

பார்ப்பதற்கு சமத்து போல் இருக்கும் இதுவும் வில்லன் மரம்தான். பெயரிலே இருக்கிறது அதன் ஜாதகம். இதன் பிறந்த வீடு இந்தியாவாக இருக்க, கேரளா மற்றும் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. உப்பு நிறைந்த நிலம் மற்றும் சதுப்பு நிலங்களில் இது வளரக் கூடியது. "செர்பெரா ஓடொல்லாம்" என்ற அறிவியல் பெயர் கொண்ட இது கேரளாவில் ஓதலம், தமிழ்நாட்டில் காட்டு அரளி, தென்கிழக்கு ஆசியாவில் பாங் பாங், புட்டா புட்டா, பிண்டாரோ, பொதுவாக "தற்கொலை மரம் (Suiside Tree)" என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு மாங்காய் போன்று இருக்கும் இதன் காயினால் இந்த அவப்பெயரைப் பெற்றிருக்கிறது. இந்த காயில் இருக்கும் நச்சுப்பொருளை "செரிபெரின்" என்கிறார்கள். இது ஒருவகை கார்டியாக் கிளைக்கோசைடு ஆகும். ஸ்டீராய்டு என்ற இயற்கை வேதிப்பொருளான இது வாந்தி வயிற்றுப்போக்கு, தலைவலி, கோமா மட்டுமல்லாது இதயத்தின் செயலை நிறுத்தக்கூடிய அளவிற்கு நச்சுத்தன்மை கொண்டது. மூன்றாம் தர நாடுகளில் அதாவது நமது நாட்டில் தற்கொலை செய்து கொள்ளவும் அல்லது கொலை போன்ற செயலுக்கும் இந்த காயை பயன்படுவதால் இதன் மரம் ஆபத்தானவை என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு கேரளாவின் ஆலப்புழா மருத்துவமனையில் அபர்ணா என்ற இளம்பெண் அனுமதிக்கப்பட்டாள். அவளது இரத்தத்தில் பொட்டாஷியம் அளவு திடீரென கூடிக்கொண்டே சென்றது. இதனை "Hyperkalemia" என்பார்கள். சில நேரங்களுக்கு பிறகு இதயத்தின் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோக, செயற்கை இதயமும் பொருத்தப்பட்டது. ஆனாலும் அவள் இறுதியில் இறந்துபோனாள். அவளைப் போன்றே மேலும் மூன்று பெண்கள் கவலைக்கிடமான நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆலப்புழாவில் இருக்கும் அரசாங்கத்தின் விளையாட்டு பயிற்சி மையத்தில் இரவு உணவு சாப்பிட்டதால் அந்த பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்தது. அது கொலை என்றும் தற்கொலை என்றும் அலசி ஆராயப்பட்டது. பழைய விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விடுதியின் சமையல்காரர், பெற்றோர்கள், நண்பர்கள் என அனைவரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த இளம்பெண்கள் சாப்பிட்ட உணவில் "ஒத்தலங்கா" என அழைக்கப்படும் இந்த மரத்தின் காய் சேர்க்கப்பட்டிருந்தது பிறகுதான் தெரியவந்தது. 2016 ஆம் ஆண்டு கணக்குபடி கேரளாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மட்டும் இந்த மரத்தின் காய்களை சாப்பிட்டு 102 நபர்கள் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பெண்கள். இன்றளவும் கேரளாவில் நிகழும் பத்தில் இரண்டு தற்கொலைகள் இந்த மரத்தின் காய்களை சாப்பிட்டதால் ஏற்பட்டவையாக இருக்கிறது. 

2005 ஆம் ஆண்டில் நகரமாக்குதலுக்காக இந்தோனேஷியாவில் காடுகள் அழிக்கப்பட்ட போது "டானிம்பர் கோரெல்லா" என்ற வெள்ளை கிளிகள் இந்த வில்லன் மரத்திடம் தஞ்சமடைந்தன. மேலும் இதன் காய்களை சாப்பிட்டு அவைகள் உயிர் வாழவும் பழகிக்கொண்டன. தற்கொலை மரத்திற்கும் வெள்ளைக் கிளிகளுக்குமிடையேயான கூட்டுறவு இன்றளவும் அப்படியே தொடர்கிறது.  

இயற்கை வழியில் பூச்சிக்கொள்ளி மருந்து, எலி மருந்து தயாரிக்கவும், 'விட்டா இவனும் செஞ்சுரி போட்டுருவான்' ஏதாவது மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டுமென பயோ டீசல் தயாரிப்பிற்கும் இதன் விதைகளை பயன்படுத்தி சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த மரத்தின் பூக்களைக் கொண்டு வாசனை திரவியம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தோனேஷியா உட்பட சில நாடுகளில் அழகிற்காக இந்த மரம் வளர்க்கப்பட்டுவர காய்கள் காய்ததும் அவை தனியாக பறிக்கப்பட்டு விடுகின்றன. 

சிறு குறிப்பு: இந்த காய்களை நல்லெண்ணெய் விட்டு அரைத்து சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் என்ற வதந்தியை சமுதாய அக்கறை கொண்ட பிரபல சோஷியல் மீடியா நிறுவனம் ஒன்று 2020 ஆம் ஆண்டு மாங்கய் போன்று இருக்கும் ஒரு காயின் படத்துடன் வெளியிட்டது. அதனைப் பார்த்த பலரும் அதே அக்கறையில் பலருக்கும் அந்த செய்தியைப் பரப்ப, அந்த காய்கள் காட்டரளியின் காய்கள் எனத் தெரிந்து அரசு சார்பாக சித்த வைத்திய நிபுணருடன் 'அடப்பாவிகளா!... அப்படி எதுவும் செஞ்சி தொலைச்சிடாதிங்க'.. என பின்னர் விளக்கம் கொடுக்கப்பட்டது.  

- தொடரும்.