வில்லன் மரங்கள் (விஷமகார வில்லன்).
பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மீன்கள் என உயிரினங்களின் வினோதங்களைப் பற்றி நான்கைந்து பதிவுகளை எழுதிவிட்டேன். அதனைத் தொடர்ந்து மரங்களைப் பற்றி எழுதும் எண்ணம் உதித்தது. இடப்பெயற்சிக்கு உட்படாவிட்டாலும் மரங்களுக்கும் உயிர் இருக்கிறது. அவைகளும் இந்த புவியின் சூல்நிலை காரணிகளை ஒழுங்குபடுத்துகின்றன. நான் பெரியவன் தான் சிறந்தவன் என நான் தான் போட்டியில்லாமல் உலகில் எல்லா இடங்களிலும் இருக்கும் ஒவ்வொரு மரங்களும் தங்களால் இயன்றதை இயற்கைக்கு செய்துவருகின்றன.
மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சிரியகுறி,
Trees are poems that the earth writes upon the sky.
அத்தகைய மரங்களில் சிலவற்றை ஆபத்தான மரங்கள் என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அதாவது மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இந்த மரங்கள் வில்லன் மரங்களாக கருதப்படுகின்றன. ஹீரோக்களை விட வில்லன்களின் கதை இன்னும் சுவாரசியம்தானே அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.
விஷமகார வில்லன் - மஞ்சீனில்.
அவனுக்கு உடம்பெல்லாம் விஷம் என சொல்வோம் அதுபோல வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவின் கடற்கரையோரம் அதிகமாக காணப்படும் "மஞ்சீனில்" என்ற மரத்திற்கு உடம்பெல்லாம் விஷம் நிறைந்திருக்கிறது. உலகின் விஷமகார வில்லன் மரத்திற்கான முதல் பரிசும் இதற்குத்தான். இதன் தாயகம் கரீபியன் தீவு. Manchineel என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் "சிறிய ஆப்பிள்" என்று பொருள். "மரணத்தின் ஆப்பிள் (little apple of death) Manzanilla de la muerte" என்பதுதான் இந்த மரத்தின் முழுப் பெயர். இந்த மரத்தின் இலை கிளை காய் கனி பிசின் அசின் என அனைத்து பாகங்களும் விஷம் நிறைந்தவை. அதில் 12- டியாக்ஸி -5-ஹைட்ராக்ஸிஃபோர்போல் -6- காமா -7- ஆல்பா - ஆக்சைடு மற்றும் ஹிப்போமினின்கள், மான்சினெல்லின் மற்றும் சப்போஜெனின், ஃப்ளோராசெட்டோபீனோன் -2-4-டை மெத்தில் ஈதர், பைசோஸ்டிக்மைன் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. அவை தோல் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. மழைப் பொழியும் தருணம் கவிதையெல்லாம் கிறுக்காமல் இந்த மரத்திற்கு அடியில் ஒதுங்கினால் மரத்தில் பட்டு விழும் மழை நீரும் தோலில் கொப்பளங்களை ஏற்படுத்தும். அந்த நீர் நமது வாகனங்களில் விழுந்தால் கூட வண்ணப்பூச்சுகளை நிறமிழக்கச் செய்யும். இந்த மரத்தின் கிளைகளை எரித்தால் அதிலிருந்து வரும் புகை கண் பார்வையை இழக்கச் செய்யும். "பீச் ஆப்பிள்" என அழைக்கப்படும் இதன் பழங்களைச் சாப்பிடும்போது ஆரம்பத்தில் சுவையாக இருப்பது போல தோன்றினாலும் போகப்போக தொண்டையை இறுக்கும் அளவிற்கு கடுமையாகவும் மாறும். அது இரத்தப் போக்கு, இரைப்பை குடல் அழற்சி, பாக்டீரியா தொற்று மற்றும் எடிமா என்ற சதை வீக்கத்தை ஏற்படுத்தும். ஆதாமும் அவன் துணை ஏவாளும் ஆரம்பத்தில் இந்த பீச் ஆப்பிளை சாப்பிட்டிருந்தால் அத்தனை துன்பமும் இல்லாதிருக்கும் என்பதற்கேற்ப மரணத்தை உண்டாக்கும். X குறியீடு, Danger, Don't Touch, தொட்டால் இரத்தம் கக்கி சாவான் என்ற எச்சரிக்கைப் பலகையைத் தாங்கியே இந்த மரங்கள் வளர்ந்து வருகின்றன. இருந்தபோதிலும் "இகுனா (Black Spined Iguana)" என்ற ஒருவகை பல்லிகள் மட்டும் இந்த மரத்தின் பழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. மேலும் அவைகள் வீடு கட்டி முட்டை பொறித்து குடியும் குடித்தனமுமாக இந்த மரத்திலேயே வசிக்கின்றன.
விஷமக்காரனிடம் விசயம் இருக்குமில்லையா! அதுபோல இந்த மரத்தின் பட்டையை உரித்து பெறப்படும் பிசினில் எடிமா நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் உலந்த பழங்கள் டையூரிக் எனப்படும் சிறுநீர் பிரச்சனைக்கு மருந்தாக இருக்கிறது. கடற்கரையோரம் காணப்படும் அலையாத்தி மரமான இது காற்றழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு கடற்கரையோர (Coastal Erosion) மணல் அரிப்பையும் தடுக்கிறது. அதிகபட்சம் 50 மீட்டர் வளரும் இந்த வில்லன் மரத்தை வெட்டி வெயிலில் காயவைத்து கரீபியன் மக்கள் வீட்டிற்கு தேவையான தட்சுப் பொருட்களை செய்திருக்கின்றனர்.
'ஜுவான் போன்ஸ் டி லியோன்' என்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இராணுவ அதிகாரி, பயணி மற்றும் புது இடங்களை கண்டுபிடிப்பவர் ஒருவர் இருந்தார். 1521 ஆண்டு வாக்கில் மதபோதகர், விவசாயிகள், கருவிகள் செய்பவர், படைவீரர்கள் என சுமார் 200 ஆட்களுடன், 50 குதிரை நாய் பூனை மாடு போன்ற வளர்ப்பு பிராணிகளைச் சேர்த்துக்கொண்டு காலணியாதிக்கத்தை நிறுவவேண்டி அவர்களை குடியமர்த்த அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவின் கடற்கரைக்கு இரண்டு கப்பலில் வந்திறங்கினார். ஆனால் தெற்கு புளோரிடாவின் கடற்கரையோரம் வசித்த பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரோடு சண்டையிட்டனர். அந்த சண்டையில் போன்ஸ் டி லியோனின் தொடையில் அம்பு ஒன்று பாய்ந்து, இதனால் இரண்டு கப்பலும் பின்வாங்கி கியூபாவிற்கு சென்றது. சண்டையில் தொடையில் அம்பு பட்டு காயமடைந்த போன்ஸ் டி லியோன் சிறிது நாட்களில் உயிரிழந்தார். அவரது உடலை துழைத்த அம்பு மஞ்சீனில் மரத்தின் வேரினால் செய்யப்பட்டது. மேலும் பிறகுவந்த காலங்களில் ஸ்பானிஷ் குடியேற்றம் அந்த கடற்கரையில் நிகழ அங்கிருந்த பழங்குடி மக்கள் குடிக்கும் தண்ணீரில் மஞ்சீனில் காய்களின் விஷத்தை கலந்து பழிக்குபழி தீர்க்கப்பட்டதாகவும் சொல்வதுண்டு.
சிறு குறிப்பு: உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் 2011 ஆம் உலகின் ஆபத்தான மரமென மஞ்சீனல் இடம்பெற்றது. மேலும் புயல் சூராவளி சுனாமி என இயற்கை பேரிடர்களில் தற்காத்துக்கொள்ள கடற்கரையோரம் இந்த மரங்களை வளர்க்க வருடந்தோரும் பல மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு செலவு செய்து வருகிறது.
- தொடரும்.