ஒரு கனவு நிலம்.

ன்றை இழக்க அதன் மதிப்பு இருமடங்காகிறது. நமக்கு பிடித்த ஒரு பொருளை இழக்க நேரிட்டால் அது தரும் வேதனையும் வலியும் நினைவுகளும் அந்த பொருளின் மதிப்பை பல மடங்காக உயர்த்தி இன்னும் அதன்மேல் நேசங்கொள்ள வைக்கிறது. உறவுகளுக்கும் இது ஏகப் பொருந்தும். பிரிந்துபோன உறவுகளின் மதிப்பு ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே செல்லும். இந்த குறும்படத்தில் வரும் பெரியவரும் ஒரு உறவை இழக்கிறார். அதன் தாக்கம் அவருக்கு எத்தகைய பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை கொஞ்சம் புதுமையாகவும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடனும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
   
THIS NO LAND
Directed by - Alexandar Decommere
Written by - Jean Ryckebosch
Music by - Koasta Panagiotou
Cinematography - Jorge Piquer Rodriguez
Country - Belgium 
Language - Dutch 
Year - 2018.

கல்லரைத் தோட்டத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பும் பெரியவர் ஒருவர் தனது காரிலேறி பக்கத்து இருக்கையில் இருக்கும் எட்டு வயது நிரம்பிய அவரது பேத்தியிடம் தற்போது நாம் டிஸ்னி லேன்டிற்கு செல்கிறோம் என்கிறார். பேத்தியும் அதில் உற்சாகமாக அவர்களது கார் நெடுஞ்சாலையில் பயணிக்கிறது. அவர்களுடன் மேலும் இரண்டு ஜோடிகள் அதே நெடுஞ்சாலையில் வெவ்வேறு கார்களில் பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரும் கேஸ் ஸ்டேஷன் எனப்படும் எரிபொருள் நிரப்பும் இடத்தில் சந்திக்கின்றனர். அப்பொழுது அங்கு விபரீதம் ஒன்று நிகழ்கிறது. அது பெரியவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. 



வெஸ்ட்டர்ன் ஸ்டைல் எனப்படும் கௌபாய் கதாபாத்திரங்களைக் கொண்டு 1960 -களின் இத்தாலிய தோற்றத்தால் இந்த குறும்படம் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களை விழிம்பிற்கு கொண்டுவரும் திரைக்கதை மற்றும் முடிவை அவர்களே யூகிக்கும் விடுகதை போன்ற யுக்தி குறும்படத்தை சிறப்பாக்கிறது. சில இடங்களில் தேவையற்ற உரையாடல்கள் குறும்படத்தின் வேகத்தை குறைத்தாலும் ஜார்ஜ் பிக்கர் ரோட்ரிக்கஸின் பரந்த ஒளிப்பதிவு அதனை சரிசெய்கிறது. தாத்தா சுடோகு மற்றும் பேத்தி லாரா  கதாபாத்திரங்கள் அற்புதமாக இருக்க அவர்களே குறும்படத்தை செலுத்துகின்றனர். ஒரு குறும்படத்தின் முடிவு என்பது தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டும். அதனை கொஞ்சம் மாற்றி அசாதாரணமாக புரிந்துகொள்ளும் வகையில் ஒரு கனவுபோல் இந்த குறும்படத்தின் முடிவு இருப்பது ரசிக்க வைக்கிறது. This No Land என பெயர் வைத்ததற்கு காரணம் இந்த குறும்படம் எடுக்கப்பட்ட பெல்ஜியத்தின் ஸ்பானிஷ் பாலைவனைத்தை கருத்தில் கொண்டதாக இருக்கலாம்.