நல்ல பூர்த்தியாகாத தாகங்கள்.

சிறுவயதில் குமுதம் ஆனந்த விகடன் குங்குமம் மாலைமதி கல்கிகளை புரட்டும்போது தென்பட்ட பெயர் சுஜாதா. எல்லோரையும் போல அது பெண்தான் என நினைத்திருக்க பின்நாட்களில் சுஜாதா என்ற பெயர் அவ்வளவு பிரியமாகிப் போனதெல்லாம் தீவிரமான வாசிப்பால் நிகழ்ந்தது. இன்று அடியேனிடம் இருக்கும் புத்தகங்களில் தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் அதிக புத்தகங்கள் சுஜாதாவுடையது. அனேகமாக அவரது அனைத்து படைப்புகளும் இருக்கிறது. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் விஞ்ஞானம் மெய்ஞானம் பொய்ஞானம் என இருக்கிற எல்லா ஞானத்தோடு எழுதுபவர்கள் யாருமில்லை எனலாம். அப்படி யாராவது எழுதினால் கூட அவர்களுக்கு வாத்தியார் சுஜாதாவாக இருப்பார். அதனால்தான் அவரை செல்லமாக வாத்தியார் என்கிறார்கள் போலும். அத்தகைய வாத்தியாரின் சொல்லை அசைபோட்டுப் பார்க்காமல் இருந்தால் எப்படி?. அதனால்தான் இந்த பகுதி. இதில் சுஜாதாவின் தனித்துவமான மயாஜால எழுத்துகளும் கருத்துக்களும் கேள்வி பதில்களும் இருக்கும். 
பெரிய இலக்கியத்திற்கு முதலில் தீவிரம் வேண்டும். கோபம் வேண்டும். என்னைப்போல் ஸாலிங்கர் படித்திருக்க வேண்டும். முண்டகோபனிஷத் தலைகீழாகத் தெரிய வேண்டும். பத்துப்பேர் செய்யும் பேரிரைச்சலுக்கு மத்தியில் அமைதி இருப்பதை அறிய வேண்டும். பார்வையில் கூர்மை வேண்டும். காலையில் பட்சிகளுக்கு முன்னால் எழுந்து பெர்க்ஸன் படிக்க வேண்டும். சங்கீதத்தில் லயிப்பு வேண்டும். பெண்களிடத்தில் லயிப்பு வேண்டும்.
லலிதாவை இப்பொழுது பார்த்தால் பழைய லலிதா என்று சொல்ல முடியாது. குழந்தை மூன்று பெற்று விட்டாள். வயிறு பெரிசாகி உட்கார்ந்து போய்... ஏகப்பட்டதைச் சாப்பிட்டாள். உடம்பு பெருத்து ஒரு சிறிய யானைக் குட்டிப் போல் இருக்கிறாள். நான்? முன் மயிர் உதிர்ந்து இளந்தொந்தி விழுந்து சொத்து பாதியாய்க் கரைந்து தற்போது கத்யத்ரயம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பழைய நெருப்புகள் மனசில் இன்னும் சஞ்சரிக்கின்றன. மனசு அலைகிறது. நல்ல பாட்டுக்காக நல்ல எழுத்துக்காக, நல்ல காப்பிக்காக - நல்ல பூர்த்தியாகாத தாகங்கள். 
உமா மாலையைக் கழற்றினாள். கழுத்துப் பட்டை தாங்க்ஸ் என்றது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த பத்து மணிநேரக் கணவனை மறுபடி மறுபடி பார்த்து 'இவன் என் கணவன் இன்று எனக்குக் கல்யாணமாகி விட்டது' என்று நிச்சயப்படுத்திக் கொண்டாள். அப்பாடா, உட்காரலாம் என்றான். அவளைப் பார்த்துச் சிரித்தான். சற்றே தவறின பல்வரிசை. அந்த சிரிப்பு எனக்கே சொந்தம் என்கிற எண்ண மின்னல் உமாவின் உடம்பில் ஒரு தடவை சந்தோஷமாக ஊடுருவியது. 
நிருபமாவை முதலில் நிமிர்ந்து பார்த்தான்.
அந்த மணித்துளியில் ஒரு புராதன கெமிஸ்ட்ரி வேலை செய்து அண்ட்ரோஜென்களும் எஸ்ட்ரோஜென்களும் அட்ரினலின்களும் குழம்பிப்போய் ஒருவரை ஒருவர் ஒரு கணத்தின் ஆயிரமாவது பாகத்தில் சமகாலப் பாசாங்குகளை மீறிப் பார்த்துக்கொள்ள, குண்டூசி முனையைவிடச் சின்னதாகக் காதல் விதை இருவர் மனதிலும் பதிந்து, உடனே ராட்சதத் தனமாக வளரத் தொடங்கியது. 
மெல்ல மெல்ல ஆனந்த் சரிந்து விழ, அவன் கடைசிக் கணங்களில் அவனுக்கு உதவ யாரும் இன்றி கண்களில் இருள் படியுமுன் அவன் இளம் வாழ்க்கையின் அத்தனை அற்புதக் கணங்களும் ஊர்வலமிட்டன. இங்கே ஓர் அழுகைக்குரல், அங்கே ஓர் ஆனந்தக் குரல். செக்ஸுக்குப் பின் முகத்தில் மேலுதட்டில் வியர்வை முத்து, செம்பருத்திப் பூப்பறிக்கும் போது காகம் வந்து உச்சந்தலையைக் கொத்தியது, ஏதோ ஒரு பசும் புல்வெளியில் மஞ்சள் வண்ணத்துப் பூச்சியைத் துரத்தியது, 'இத்தனை மென்மையானதா இது' என்கிற ஆச்சரியம். தாயின் சடலத்தின் மேல் தீயின் நாக்குகள், அமெரிக்காவில் சியாட்டில் பயிற்சியில் ஒரு போதை ராத்திரி, பையிலிருந்து சீப்பை எடுத்து வழுக்கைத் தலையை வாரிக் கொள்ளும் டைரக்டர், நாய்க் கண்காட்சியில் 'எட்டாம் நம்பர் அல்சேஷன் மேடைக்கு வரவும்' என்கிற அறிவிப்பு...
குழப்பான பிம்பங்கள். தொடர்பில்லாமல் அலை அலையாக வந்து மயங்கி, மயங்கி ஆனந்த் இறந்து போனான். 
ஒரு கதையை நல்ல கதை என்று சொல்வதற்கு அதன் உலகத்தை நம்மை நம்ப வைப்பது மட்டும் போதாது. அவ்வாறு படைத்த உலகத்தில் கொஞ்ச நேரம் நம்மை உலவவிட்டு, அதில் நிகழும் சம்பவங்களின் மூலம் மனித வாழ்வின் ஒரு உண்மையை அல்லது தரிசனத்தை நமக்குக் கொடுக்கும் போது அது நல்ல கதையாகிறது. இந்த தரிசனம் நமக்கு கதையில் நேரடியாக வருணிக்கப்படும் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கலாம். அல்லது வெளிப்படையாக வருணிக்கப்படாமல் கதை படித்து முடித்தபின் நம் உள்ளுணர்வில் அதைப்பற்றி யோசிக்கும்போது ஒரு realisation கிடைக்கலாம். ஆனால் இந்த தரிசனம் அல்லது உணர்தல் எல்லா நல்ல கதைகளிலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். அப்போதுதான் வாசகன் அந்த கதையில் பங்கு பெறுகிறான்.
எது முதலில் வந்தது... காதலா? செக்ஸா? காதலுக்காக காமமா, காமத்துக்காக காதலா? இனவிருத்திதான் முக்கியம் என்றால் செக்ஸ் முக்கியம். ஆனால் வெறும் செக்ஸுக்குக் காதல் எதற்கு?.. வந்தார், படுத்தார், எழுந்தார் என்று போகாமல், இடையே எதற்கு ஏக்கப் பெருமூச்சுகளும் இதயம் பதித்த கைக்குட்டைகளும்? காதல் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் அம்சமா என்று மானிட இயலாளர்கள் சோதித்துப் பார்த்ததில் உலகத்தில் உள்ள 166 கலாச்சாரங்களில் 147 -ல் காதல் உள்ளது. காதல் மனித இனத்தின் அனைவருக்கும் பொது என்று சொல்லலாம் போலிருக்கிறது. 
மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது இன்னமும் விளங்கவில்லை. அதிலும் கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்துக்காக கடவுள் செயல் என்றானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும் தன் செயல் என்றும் இயற்கை என்றும் அகஸ்மாத்து தற்சம்பவம் என்றும் ஆக்சிடெண்ட் என்றுதான் முடிவு செய்து கொண்டவனாகிறான். சர்வம் கடவுள் செயல் என்று சொல்கிற எவனும் சர்வத்திற்கும் தற்காப்புச் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாக இருக்கும்போது, நாத்திகன் கடவுளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. 

உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டு செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது. 
என்னைப் பொறுத்தவரையிலும் எல்லாப் பெண்களும் எனக்கு ஒன்றே. எல்லோரும் என் நிக்கானின் வ்யூஃபைண்டரில் தெரியும் எஸ்.எல்.ஆர். பிம்பங்கள், அவ்வளவுதான். ஒருத்தியைத் தொட்டதில்லை, ஒருத்தி மேலே பட்டதில்லை. ஒருத்தியிடம் அசிங்கமாகப் பேசினதில்லை. காதல் திட்டுக்கள் கிடையாது. நான் எடுக்கும் போட்டோக்களில் அசிங்கம், Porno இருக்காது. ஆனால் பெண் உடம்பு ஒரு கலைப் பொருள். கலைக் கண்களோடுதான் நான் பார்க்கிறேன் என்பதெல்லாம் ஜல்லி, ரீல், உடான்ஸ், ஜபேட்டு!

நான் ஏறக்குறைய என் காமிராவில் பிற்சேர்க்கை ஆகிவிட்டேன் அவ்வளவுதான். 
'சந்தோஷம் என்றால் என்ன?'  என்றாள். The absence of pain. Something to do, something to love and something to hope for!... பாவம் என்பது என்ன? என்றாள். 'பிறருக்குத் துன்பம் தருகிற எந்த விஷயமும் பாவம். மற்றதெல்லாம் பாவமில்லை. சென்ற கணங்களில் நிகழ்ந்தது சென்ற கணங்களுடன் பொய்யாகி விடுகிறது. இதோ நான் உன்னை தொடுவது பொய். ஏன்? நான் உன்னைத் தொட்டாகிவிட்டது. தொட்டு உடைகளை விலக்குவது பொய். ஏன்?... விலக்கியாகி விட்டது. 
மன்னிக்கவும். உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன். அவள் மிக இயல்பாக என்னிடம் வந்து அடைந்தாள். 
ஓலைச்சுவடியில் ஏறிய கல்வி, CD வரை வந்துவிட்டது. அடுத்து கல்வியின் வாகனம் என்ன?

ஓலைச்சுவடியோ சி.டி- யோ... கல்விக்கான முறைகளில்தான் மாறுதலே தவிர, கல்வி என்கிற ஆதாரச் செயல், நம் மனித மூளை புதிய விஷயங்களைக் கிரகிக்கும் வேகத்தை பொருத்தது. அதை அதிகரிக்க நல்லாசிரியர்கள் தேவை. கற்கும் விஷயத்தில் ஆர்வம் தேவை. அந்த ஆர்வத்தை ஏற்படுத்த பெற்றோரின் ஆதரவும் கல்விக்கேற்ற சூழ்நிலையும் தேவை. இன்னும் நாகேஸ்வரராவ் பார்க்கில் நடந்துகொண்டே பரிட்சைக்குப் படிக்கும் இளைஞர்களைப் பார்க்கிறேன். 
நம் தின வாழ்க்கையில் எத்தனை பொய்கள் சொல்கிறோம். அஞ்சு ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் வைத்துக் கொண்டே கடைக்காரன் இல்லை என்று பொய் சொல்கிறான். செய்தித்தாள்கள் பொய் சொல்கின்றன. ரேடியோ, சினிமா எல்லாமே பொய். ரொம்ப நாள் யோசித்ததில், உண்மை என்று தனிப்பட்ட ஒன்று இருக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. உலகத்தின் செயல்பாடுகள் அத்தனையும் பொய்யின் தராதரங்கள் என்றுதான் படுகிறது. 
இருளில் எதிர்பாராமல் எதிர்பாராமல் கைகள் அவளை அணைத்தன. இங்கே என்றால் அங்கே - அங்கே என்றால் இங்கே. தங்க ரோசா மூச்சு முட்டியது. கொஞ்சம் கொஞ்சம் வானவில், கொஞ்சம் நெருப்பு, கொஞ்சம் முருகக் காய்ச்சிய பால், கொஞ்சம் கன்றுக் குட்டியின் கழுத்துத் தடவல், கொஞ்சம் காவேரி வெள்ளம், கொஞ்சம் நிலா முற்றத் தனிமை, இறுக்கம், ஈரம், மூச்சு, வேதனை, மத்தாப்பூ உதட்டைக் கடித்துக்கொண்ட.... 
"நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்". உமாவும் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்த முதல் இரவு அது. 
என் வயது இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒருநாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். காராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பானில் இரண்டு வருஷம். இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்துவிட்ட ஒருவன். இறந்து போனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கிப் போகும். 

இன்றைய தினங்களில்‌ தமிழ்‌ கூறும்‌ நல்லுலகத்தில்‌ ஞாயிற்றுக்‌ கிழமைகளிலும்‌ தேசிய விடுமுறை நாட்களிலும்‌ பத்தாயிரம்‌ புதுக்‌ கவிதைகள்‌ எழுதப்படுகின்றன என உத்தரவாதமாகச்‌ சொல்லலாம்‌. ஒவ்வொரு வருஷமும்‌ பதிவாகும்‌ தொள்ளாயிரத்துப்‌ பத்து புத்தகங்‌களில்‌ சுமார்‌ நூற்றுப்பத்தாவது கவிதைப்‌ புத்தகங்கள்‌ என்று ஒரு தஞ்சாவூர்‌ ஆராய்ச்சியாளர்‌ கணக்குப்‌ போட்டிருக்கிறார்‌. மிச்சம்‌ எண்ணூற்று சொச்சம்‌ புத்தகத்தில்‌ எத்தனை சமையல்‌ குறிப்புகள்‌. எத்தனை பக்திப் புத்தகங்கள்‌, எத்தனை வாழ்க்கையில்‌ முன்னேறுவது அல்லது இங்க்‌ செய்வது எப்படி பற்றிய புத்தகங்கள்‌ என அராய்ச்சி செய்திருக்கிறார்களா தெரியவில்லை... 
உலகில்‌ மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர்‌ காலத்திலிருந்து தமிழில்‌ இருக்கும்‌ அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில்‌ இன்று ஒரு அயோக்கியன்‌ கூட இருக்கக்கூடாது... 
காதலுக்கு மற்றொரு முக்கியமான உபயோகம்‌ இருக்கிறது. அது பரிணாமத்‌ தேவை. மனிதனின்‌ சாஃப்ட்வேரில்‌ இது பொதிந்திருக்கிறது. நெருப்பு சுடுகிறது, ஸ்பரிசம்‌ இன்பமாக இருக்கிறது. எல்லா உயிரினமும்‌ தனக்கு இன்பமானதைத்‌ தேடி, துன்பம்‌ தருவதைத்‌ தவிர்ப்பது இயற்கை நியதி. இதைச்‌ சரியாக அறிந்தவர்கள்‌ நீண்ட நாள்‌ வாழ்கிறார்கள்‌. காதல்‌ நம்‌ இனவாழ்வின்‌ தேவை. அதனால்தான்‌ நாம்‌ அதை வளர்க்க, நுட்பமான ரசாயனப்‌ பொருள்களை நம்முள்‌ சுரந்து கொள்கிறோம்‌. விஸ்தாரமாகப்‌ போற்றிப்‌ பாதுகாக்கிறோம்‌. காதல்‌ இல்லையேல்‌ நம்‌ மனித இனத்தின்‌, உயிர்‌ வாழ்வதின்‌ சுவாரஸ்யம்‌ குறைந்து போய்‌, சீக்கிரமே அழிந்துவிடுவோம்‌.
பிறப்புக்கும்‌ வாழ்வுக்கும்‌ சாவுக்கும்‌ இடையில் அனுபவிக்கும்‌ இன்பம்‌ துன்பம்‌ கவலை தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம்‌ என்ன என்பதை எவனாலும்‌ இதுவரை தெரிந்துகெள்ள முடியவில்லை. இத்தனைக்கு கழுதை, குதிரை, நாய்‌, நரி, எருமை, யாணை, புலி, சிங்கம்‌, ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளை விட அதிகமான அறிவு பகுத்தறிவு படைத்தவன்‌ ஆவான்‌ மனிதன்‌.
அவர்‌ விட்டுப்போன சமுதாயத்‌ தொண்டு இன்று எந்த நிலையில்‌ இருக்கிறது என்று யோசித்துப்‌ பார்த்தால்‌, பெரியாரை நாம்‌ மெல்ல மறந்து கொண்டிருக்கிறோம்‌ என்பதுதான்‌ அதிர்ச்சி தரும் உண்மை. அவருடைய பிறந்த, இறந்த தினங்களின்போது படத்துக்கும்‌ சிலைக்கும்‌ மாலை போடுவதோடு சரி, அவர்‌ ஆரம்பித்த சீர்திருத்தங்கள்‌ ஒரு குறிப்பிட்ட இனத்தினரின்‌ மேல்‌ மட்டும்‌ வெறுப்பாகத்‌ தேய்ந்திருக்கிறது, சில தீச்சட்டி ஊர்‌வலங்கள்‌ சில சிலையுடைப்புக்களுடன்‌ திருப்தியடைந்து நின்று போயிருக்கிறது. அவர்‌ விரும்பிய சமூகப்‌ புரட்சி நோக்கங்கள்‌ அரசியல்‌ நோக்கங்களாக மாறிப்‌ போய்விட்டன.
நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப்‌ புலன்களின்‌ மூலம்‌ உணர்ந்து அவைகளைப்‌ பொருள்படுத்தி அறிவாக மாற்றிக்‌ கொள்கிறோம்‌. அந்த சாகசத்தை நாம்‌ எப்படிச்‌ செய்கிறோம்‌ என்பதை, அந்த முறையை நாம்‌ இன்னும்‌ புரிந்து கொள்ளவில்லை. அதுவரை கணிப்பொறிகளால்‌ நம்மை மிஞ்ச முடியாது. மூளை என்பது லட்சக்கணக்கான வருஷங்களின்‌ பரிணாம வளர்ச்சியின்‌ உன்னதம்‌.