ட்ரூபி.

1928 முதல் 1960 வரையிலான காலகட்டத்தை அமெரிக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தின் பொற்காலம் என்கின்றனர். அக்காலகட்டத்தில் அனிமேஷன் தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ட்ரூபி. ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கட்கிழமை விடியும்போது எழுந்து வேலைக்கு செல்லவோ அல்லது பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவோ புறப்படும் நேரத்தில் நமக்குள் தோன்றுமே ஒருவித சலிப்பும் சோம்பலும் அத்தகைய சோம்பலையும் சலிப்பையும் எப்போதும் கொண்டதுதான் இந்த ட்ரூபி கதாபாத்திரம். ஆனாலும் தன்னுடைய எதிராளியை வெல்வதில் புத்தியும் சாமர்த்தியமும் பலமும் நிறைந்தது.

1943 ஆண்டு ஃபிரடெரிக் பீன் டெக்ஸ் அவேரி என்பவர் மெட்ரோ கோல்வின் மேயர் (MGM) ஸ்டூடியோவிற்காக ட்ரூபியை உருவாக்கினார். இவர்தான் பக்ஸ் பன்னி, டாஃபி டக், போர்க்கி பிக், எல்மர் ஃபட், சில்லி வில்லி, ஸ்க்ரூ ஸ்குரில், ஜார்ஜ் அண்ட் ஜூனியர் போன்ற புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களையும் உருவாக்கினார். ட்ரூபி என்பது ஹவுண்ட் என சொல்லக்கூடிய காதுகள் பெரிதானதாகவும் கால்கள் குட்டையானதுமான இரண்டு மூன்று வண்ணங்களை கொண்ட ஒருவகை நாய் இனத்தை சார்ந்தது. அதற்குதான் டெக்ஸ் அவேரி கார்ட்டூன் அவதாரம் கொடுத்திருந்தார். 

1943 ஆம் ஆண்டு டம்ப் ஹவுண்ட் என்ற தொடரில் ட்ரூபி அறிமுகமானது. கிட்டத்தட்ட நான்கைந்து தொடர்களுக்கு பிறகே அதற்கு ட்ரூபி என பெயர் வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த பெயரில் காமிக்ஸ் கதாபாத்திரம் ஒன்று இருந்ததால் ட்ரூபியின் பெயர் ஹேப்பி ஹவுண்ட் என மாற்றப்பட்டது. அந்த பெயரிலும் சர்ச்சைகள் எழ மெக்புடுல், பூடில் என பல பெயர்கள் அதற்கு வைக்கப்பட்டது. இருந்த போதிலும் ரசிகர்கள் மனதில் ட்ரூபியாகவே நிலைத்தது. 

கௌபாய், துப்பறியும் நிபுணர், பல்துறை வித்தகர் என ட்ரூபி மொத்தம் 28 தொடர்களில் கலக்கியது. மனிதத் தன்மை கொண்ட பிக் பேட் ஓல்ப் என்ற ஓநாய் மற்றும் ஸ்பைக் என்ற புல்டாக் இவை இரண்டும் ட்ரூபியின் எதிரியாக இருக்க அவர்களிடம் தனது அபார சக்தியை காட்டி அவர்களை வீழ்த்தி ட்ரூபி அனைவரையும் கவர்ந்தது. இ...ந்த...நா...ள் மோசமா...க.. இருக்க போ....குது...அது என்...னை பை...த்தியம்...ஆக்குது... என்பதைப்போல் கவலையில்லாம் அலட்டிக் கொள்ளாமல் சாவகாசமாக இழுத்து மோனோ டோன் என சொல்லப்படும் தொனியில் பேசுவது ட்ரூபியின் மற்றொரு சிறப்பு ஆகும். பில் தாம்சன், ஃபிராங் கிரஹாம், டான் மெசிக் , டாஸ் பட்லர் மற்றும் அதனை உருவாக்கிய டெக்ஸ் அவேரியும் ட்ரூபிக்கு குரல் கொடுக்க 1957- ல் வெளியான ஒன் ட்ரூபி நைட் என்ற ட்ரூபியின் கார்ட்டூன் தொடர் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.  ஹலோ... நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியான மனிதர்களே.... இதுதான் தான் அறிமுகமான முதல் தொடரில் ட்ரூபி பேசிய வசனமாகும். அத்தகைய மகிழ்ச்சிற்கு ட்ரூபியும் உதவியது. கார்ட்டூன் உலகமே அப்படித்தானே!..

ட்ரூபியின் கார்ட்டூன்கள் சிலவற்றை தேடிப் பிடிக்க முடிந்தது. அவற்றுள் சிலவற்றை தொகுத்து Play list ஆக வைத்திருக்கிறேன். உங்களையும் இந்த ட்ரூபி நிச்சையம் கவரும் என நினைக்கிறேன். 

கார்ட்டூன்களைக் காண: